மரமது மரத்திலேறி

மரமது மரத்திலேறி.....
ஓர் அரசனுக்கு தனியாக
வேட்டைக்குச் செல்ல ஆசை.
வேட்டைக்குச் செல்ல வேண்டுமானால்
காட்டிற்குச் செல்ல வேண்டும்.
காட்டிற்கு நடந்து செல்லவா முடியும்?
 தேர் வேண்டும்.
 தேர் வேண்டும் என்றால் மரம்
 வேண்டும். 
மன்னன் பேச்சுக்கு
மறு பேச்சு ஏது?
மரம் வெட்டி வரப்பட்டது.

இப்போது மரத்தாலான தேர் 
தயாராயிற்று.
தேரை இழுத்துச் செல்ல 
குதிரை வேண்டும்.
குதிரையும் வந்தாயிற்று.

வேட்டையாட வெறுங்கையோடு
போக முடியுமா?
தோளில் மூங்கில் மரத்தின்
வளைந்த கொம்புகளால் செய்யப்பட்ட
வில் ஒன்றை எடுத்துக் கொண்டான்.
தோளில் வில்லிருக்க கை
வெறுங்கையுடன் இருந்தால் எப்படி?

கையில் ஒரு மரப் பிடியாலான
வேல் ஒன்றையும் எடுத்துக் கொண்டான்.
இப்படி ஒரு முழு வேட்டைக்காரனாக மாறி
காட்டிற்குள் சென்றான் அரசன்.
காட்டிற்குள் சற்று தொலைவு 
சென்றிருப்பான்.
ஏதோ ஒரு சலசலப்பு
 மேலே செல்லவிடாமல்
தடையிட்டது.

சற்று நின்று நிதானமாக 
கவனிக்கிறான்
இப்போது வேங்கை
ஒன்று அரசனை நோக்கி
வந்துகொண்டிருக்கிறது.
சற்றும் தாமதியாமல் 
கையிலிருந்த வேலை வேங்கையை
நோக்கி வீச வேங்கை சாய்ந்து
வீழ்கிறது.
எத்தனையோ போர் கண்ட மன்னன்.
எதிரிகளைப் போரில் குறி தவறாது
வேல் எய்து சாய்த்த வீர வரலாற்றுக்குச்
சொந்தக்காரன்.
வேங்கையை நேருக்கு நேராக 
வீழ்த்திவிட்டான்.

வேங்கையை வீழ்த்திவிட்ட பெருமிதத்தோடு
அரண்மனைக்குத் திரும்புகிறான்
அரசன். அரசனைக் கண்ட
குடிகள் ஆரவாரம் செய்து
 வாழ்த்தி,
 குரல் எழுப்புகின்றனர்.

வெற்றியோடு
திரும்பிய அரசனைக் கண்ட
அரண்மனைப் பெண்களுக்கு 
தாங்கொண்ணா மகிழ்ச்சி.
கையில் ஆரத்தியோடு அரண்மனை
வாசலில் வந்து நின்று
வரவேற்று நிற்கின்றனர்.

காட்சிகள் சிறுகதையாகக் கண்முன்
வந்து போகின்றன.

இவற்றையெல்லாம் பார்த்த புலவர் 
ஒருவருக்கு அரசனைத் தன் பங்குக்கு
பாராட்டிவிட வேண்டும் என்று ஆசை.
எப்படிப் பாராட்டுவது?
யாது சொல்லிப் பாராட்டுவது?
எந்தச் சொல்லால் பாராட்டுவது?

மரத்தை வீழ்த்திய மா
மன்னனை மரத்தால்
வாழ்த்துவது தானே சிறப்பு..
மரம் என்ற ஒற்றைச் சொல்லைக்
கையில் எடுத்தார்.
ஆறு மரங்களை அறிமுகப்படுத்தி
 கவி மாளிகை கட்ட நினைத்தார்.
 அவர் நினைத்தபடி ஆறு மரங்களுக்குள்
 அவர் கட்ட நினைத்த மாளிகையை
 கட்டி முடிக்க முடியவில்லை.
 கூடுதலாக ஐந்து மரங்களைக் கேட்டது.
 
 மாளிகை அழகாக வேண்டுமென்றால்
 கையைச் சுருக்கிக் கொள்ள 
 முடியுமா என்ன?
 கூடுதலாக ஐந்து இடங்களில் மரக்
 கொம்பைச் செதுக்கி  
 அங்கங்கே பொருத்தி அழகு பார்த்தார்.

மரம் என்ற ஒற்றைச் சொல்லால் 
வடிவமைக்கப்பட்ட கவி மாளிகையைக்
கண்முன் காட்டி
நம்மையும் ஆலத்தி எடுக்க வைத்தார்.
பாடலை உச்சரிக்க வைத்து
 உச்சாணிக் கொம்பில் ஏறி நின்று 
 நம்மை அண்ணாந்து
பார்க்க வைத்தார்.

யாரிவர்...யாரிவர் என்ற கேள்வி
நம்மைக் குமைத்துப் போட்டது.

சுந்தர கவி படைத்துத் தந்த கவிஞர்
 யாரிவர் என்று
தேட வைத்தது.
பெயரும் சுந்தர கவிராயர்
என்று அறிந்ததும் உதடுகள்
மெல்ல உச்சரித்து ஆனந்தித்துப்
பார்த்தது.

சுந்தர கவிராயரின் மரத்தாலான
கவி மாளிகை உங்கள் காட்சிக்காக....


"மரமது மரத்திலேறி 
மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு
மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று
வளமனைக்கு ஏகும்போது
மரமது கண்ட மாதர்
மரமுடன் மரமெடுத்தார்"

          - தனிப்பாடல் 

பொருள் :

மரமது - (அரசமரம்) அரசன்
மரத்தில் ஏறி - (மாமரம்) மரத்தாலாகிய
தேரில் ஏறி 
மரதைக் தோளில் வைத்து - (வேலமரம்) வேலாயுதத்தைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு - (வேங்கைமரம்)
 அரசனானவன் வேங்கையைக்(புலி)
 கண்டு
மரத்தினால் மரத்தைக் குத்தி-
வேலினால் வேங்கையைக் குத்தி
வளமனை ஏகும்போது- தன் 
அரண்மனைக்குத் திரும்பும்போது
மரமது கண்ட மாதர்- அரசனைக் கண்ட பெண்கள்
மரமுடன் மரமெடுத்தார் -
(ஆல், அத்தி  மரங்கள்)
ஆலுடன் அத்தியுடன்
 ஆலத்தி எடுத்தனர்.


அரசன் மரத்தினால் செய்த
தேரில் ஏறி மூங்கில் மரத்தை வளைத்துப்
செய்யப்பட்ட வில் அம்புகளைச் சுமந்து
வேட்டைக்குச் செல்கிறான்.
போகிற வழியில் ஒரு வேங்கையைப்
பார்க்கிறான். மரக் கைப்பிடி
கொண்டு செய்யப்பட்ட
ஈட்டியால் அந்த வேங்கையைக் குத்திக்
கொன்றுவிடுகிறான்.வேட்டை முடிந்து 
காட்டுவழியே அரண்மனைக்குத்
திரும்புகிறான் .அரசனைக் கண்ட
பெண்கள் ஆலத்தி எடுத்து
வரவேற்றனர்

இதுதான் பாடல் மூலம் 
அறியப்படும் செய்தி.
இதற்கு பதினொரு இடங்களில் 
 மரத்தை வைத்து
அழகுபடுத்தியிருக்கிறார் சுந்தர கவிராயர்.
சுந்தர கவிராயர் இல்லையா?
பெயருக்கு ஏற்றபடி
 பாடலும் அழகாக இருக்க வேண்டும் என்று
நினைத்திருப்பார்.
அழகு தமிழில்
அருஞ்சொற்பொருட்கள் நிறைந்ததாக
கவி படைத்து அன்னை தமிழுக்கு
அணி செய்திருக்கிறார்.

அருமையான பாடல்... இல்லையா?



மா - மாமரம், குதிரை
வேல் - வேலமரம் ,
வேலாயுதம்
வேங்கை- வேங்கைமரம்,புலி
ஆல் - ஆல மரம்,ஆலாத்தி
அத்தி -அத்தி மரம்





Comments

  1. கவி மாளிகை மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts