இட்டார் பெரியோர்....
இட்டார் பெரியோர்....
இவ்வுலகில் வாழும் மக்களுள்
யார் பெரியவர் என்பதில் போட்டாப் போட்டி.
கோவில் திருவிழாவா...நான்தான்
பெரியவன். எனக்குத்தான் முதல்
மரியாதை வேண்டும்.
குடும்ப விழாக்களா...நான்தான்
மூத்தவன். என்பெயர்தான் அழைப்பிதழில்
முதலாவது இருக்க வேண்டும்.
ஒரு சபையிலா?
என்னைத்தான் முதல் வரிசையில்
இருத்த வேண்டும்.
என்னைத்தான்
முதலாவது கூப்பிட வேண்டும்.
நான்தான் பணக்காரன்.
எனக்குத்தான் முதல் மரியாதை கிடைக்க வேண்டும்.
இப்படி தன்னை பெரியவன் என்று
காட்டிக்கொள்ள போட்டா போட்டி
நடத்தும் மக்கள் நிறைந்த உலகம் இது.
அந்தப் போட்டிதான் பல இடங்களில்
பகையாக மாறி பிரிவினையை உண்டுபண்ணி விடுகிறது.
இப்படி நீயா நானா என்று
அடித்துக் கொள்வதால் ஒருவர்
பெரியவர் ஆகிவிட முடியுமா?
பெரியவர் என்பது நாமாக
முடிவு செய்யக்கூடியது அல்ல.
உலகம் நம் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளைப் பார்த்து
முடிவு செய்து கொள்ளும்.
இதற்கிடையில் சாதி என்ற ஒன்று
இடையில் வந்து தொக்கி
நின்று கொள்ளும்.
என் சாதி உயர்வு.
உன் சாதி தாழ்வு என்று
குத்திக் கிழித்துக் கொண்டிருக்கும்.
அட..போங்கப்பா நீங்களும் உங்கள் சாதியும்...
சாதி என்றால் என்ன என்று
தெரியுமா?
நீங்கள் நினைப்பது மாதிரி
சாதி பகுப்பு கிடையாது.
கிளை சாதி
கிளையில்லாத சாதி
மேல் சாதி
கீழ் சாதி என்று
யார் பகுத்து வைத்தது.?
கேட்கிறார் ஔவை.
ஔவையின் கணிப்புப்படி,
பெரியோர்
இழிகுலத்தோர்
என்ற இரண்டு சாதிகள்
மட்டும்தான் உண்டு.
பெரியோர் என்பதற்கான தகுதிகள்தான்
என்ன?
யார் பெரியோர்
என்ற பகுப்பின் கீழ் வருவார்கள்
என்று நான் கூறுகிறேன்
கேளுங்கள் என்கிறார் ஔவை.
'"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்
இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி "
.. நல்வழி பாடல் 2
பொருள்:
பட்டாங்கு - நீதி நூல்கள்
வழுவா -தவறாது
சாற்றுங்கால்-சொல்லப்படுவது யாதெனில்
சாதி என்பது இரண்டு மட்டுமே.
அது யாதென்று சொல்வோமான்ல்
இவ்வுலகில் நீதி நெறி தவறாது
உரிய வழியில் நின்று
ஏழை எளியோருக்கு தானம் அளிக்கும்
ஒரு சாதி இருக்கிறது.
அவர்தான் பெரியவர் என்னும் சாதியாக
உயர் சாதியாகக் கருதப்படுவார்.
தானுண்டு தன் நலனுண்டு என்று
அக்கம்பக்கம் என்ன நடந்தால் என்ன?
நான் நலமாக இருக்கிறேனா அது போதும் என்று இருக்கும் மக்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் கை ஒருபோதும் நீளாது.
ஈகை என்றால் என்ன என்று அறியாதவர்கள்.
இவர்கள் இழிகுலத்தோர்
என்னும் இரண்டாம் சாதியைச் சார்ந்தவர்கள்.
இதனை நான் சொல்லவில்லை .
நீதி நூல்கள் சொல்கின்றன.
அதனைத்தான் நான் உங்களுக்குச் சொல்கிறேன்
என்று தன் கருத்துக்கு நீதி நூல்களில் ஆதாரம் உள்ளது என்று வலுவான ஆதாரத்தோடு
தன் பாடலை முடித்துள்ளார் ஔவை.
இடுகிற வர்க்கம் உயர்வாக கருதப்படும்.
அதுவும் முறையான வழியில் வந்த
செல்வமாக இருக்க வேண்டுமாம்.
இடாதோர் அதாவது
எச்சில் கையால் கூட
காக்கையை விரட்டாதவர்
இழிகுலத்தோராம்.
இவர்கள் இருவரும்தாங்க மேல் சாதி
கீழ் சாதி என்ற சாதிய வரிசையில் வைத்துக் கருதப்படுகிற ஆட்கள்.
மற்றப்படி நீங்கள் நினைக்கிற மாதிரி
வேறு எந்த சாதியும் கிடையாது.
எவ்வளவு அருமையாக சொல்லி
கடந்து போய்விட்டார்.
ஆமால்ல...
இப்படிப்பட்ட கண்ணோட்டத்தில்
நாம் ஒருபோதும் சமூகத்தைப் பார்க்கவில்லையே..என்று
மனதிற்குள் ஒரு விவாதம்
நடைபெறலாம்.
வேண்டாம் இனி வீண் விவாதம்.
"இட்டார் பெரியோர்
இடாதோர் இழிகுலத்தோர் "
அவ்வளவுதான்.
இந்த இரண்டு சாதிகள்
மட்டும்தான் உலகில் உண்டு.
என்று விதை விழுந்துவிட்டதல்லவா?
"சாதி இரண்டொழிய வேறில்லை..
...... ..
இட்டார் பெரியோர்
இடாதோர் இழிகுலத்தோர் "
அவ்வளவுதான்.
வரட்டா...
ஔவை கூற்றுபடி நடந்தால் நமக்குள் சாதி கலவரமே நடைபெறாது.அந்த காலம் என்றோ?
ReplyDelete