ஹோலியும் ஹோலிகாவும்
ஹோலியும் ஹோலிகாவும்
தீபாவளி என்றால் பட்டாசு .
பொங்கல் என்றால் கரும்பு.
கிறிஸ்துமஸ் என்றால் கேக்.
ஈஸ்டர் என்றால் முட்டை
ஹோலி என்றால் வண்ணம்.
இப்படி ஒவ்வொரு பண்டிகைக்கும்
தனித்தனி அடையாளம் உண்டு.
பண்டிகை என்றாலே மகிழ்ச்சி தானாக
வந்து குடி கொண்டுவிடும்.
ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு
விதமான மகிழ்ச்சியைத் தரும்.
எல்லா பண்டிகைகளும் ஏதோ ஒரு சிறப்பைப்
பெறுவதாக இருக்கும்.
ஒவ்வொரு பண்டிகைக்கும் உள்ள சிறப்பு
அது கொண்டாடப்பட்டதன் வரலாறு ஆகியவற்றை
அறியும்போது எந்த ஒரு பண்டிகையும்
வெறுமனே பொழுது போகாமல்
கொண்டாடப்பட்டதல்ல என்ற உண்மை
புரிய வரும்.
புராண கதைகளாக இருக்கலாம் அல்லது
வரலாற்று உண்மை நிகழ்வுகளாகக்கூட
இருக்கலாம்.
பண்டிகையின் நோக்கம் மகிழ்ச்சி ஒன்றையே
குறிக்கோளாக கொண்டிருக்கும்.
இதுவரை இருந்த துன்பங்கள் நீங்கியது.
அப்பாடா...இனி எந்த அச்சமும் இல்லை.
கொண்டாடுவோம் வாருங்கள் என்று
அழைப்பு விடுப்பதாகவே இருக்கும்.
வண்ணங்களின் பண்டிகையான ஹோலி
கொண்டாடப்பட்ட வரலாறு சுவாரசியமானது.
பால்குன் மாதத்தில் வரும் முழுநிலவு நாளில்
ஹோலி கொண்டாடப்படுவது வழக்கம்.
ஹோலி பண்டிகைக்கு முந்தைய நாள்
நெருப்பு மூட்டி வழிபடுவது வழக்கம்.
அதனை ஹோலிகா தகனம் என்று
அழைப்பர்.
யார் இந்த ஹோலிகா ?
ஏன் அவளைத் தகனம் செய்கின்றனர்?
எதற்காக இந்தத்
தீ மூட்டுதல்?
அப்படி அந்தப் பெண் என்ன தீமை
செய்துவிட்டாள்
அறிய வேண்டும் என்று ஆவலாக
இருக்கிறதல்லவா?
வாருங்கள்.
ஹோலிகாவைப்பற்றி அறிந்து
கொள்வோம்.
இரணியன் என்று ஒரு அரக்கன்
இருந்தான். அவன் சிவன்மீது
அளவுகடந்த பக்தி கொண்டவன்.
தன்னைப் போலவே தன் நாட்டில் உள்ள
அனைவரும் சிவனையே வழிபட
வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான்.
ஒருநாள் இரணியன் கடும் தவம்
புரிந்து கொண்டிருந்தான்.
தன்னை யாராவது கொன்றுவிடுவார்களோ என்ற அச்சம்
அவனுக்குள் இருந்துகொண்டிருந்தது.
அதனால் அவன் தனது மரணம் எப்படி எல்லாம்
நிகழக்கூடாது என்று சிவனிடம் இருந்து
புத்திசாலித்தனமான ஒரு வரம் கேட்டு வாங்கி வைத்துக்கொண்டான்.
அதாவது,
பகல் பொழுதிலும் என் மரணம்
நிகழக்கூடாது.
இரவு பொழுதிலும் என் மரணம்
நிகழக்கூடாது.
மனிதனாலும் மரணம் நிகழக்கூடாது.
மிருகத்தாலும் மரணம் நிகழக்கூடாது.
ஆகாயத்திலும் மரணம் நிகழக் கூடாது.
பூமியிலும் மரணம் நிகழக்கூடாது.
வீட்டிற்கு உள்ளேயும் மரணம் நிகழக்கூடாது.
வெளியிலேயும் மரணம் நிகழக்கூடாது.
எந்தவொரு ஆயுதத்தாலும் மரணம்
நிகழக்கூடாது.
எப்படி ஒரு சாமர்த்தியமான வரத்தை வாங்கி
வைத்திருந்திருக்கிறான் பாருங்கள்.!
வரம் கிடைத்ததும் அவனது ஆட்டம் அதிகமாகியது.ஒரு மமதை.
இனி என்னை யாராலும் கொல்ல முடியாது
என்ற கெக்கலிப்பு.
நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் இரணியன்
என்ற பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கினர்.
இப்போது தானே கடவுள் என்ற எண்ணம் வந்துவிட்டது.புதிதாக ஒரு ஆணை பிறந்தது.
நாட்டு மக்கள் தன்னை மட்டுமே வணங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தான்.
மக்கள் கலங்கிப் போயினர்.
இந்த ஆணவப் போக்கிற்கு முற்றுப்புள்ளி
வைப்பது யார் ?
அனைவருக்கும் இறைவனிடம் முறையிடுவதைத்
தவிர வேறு வழி தெரியவில்லை.
நேரே கடவுளிடம் சென்று முறையிட்டனர்.
இறைவன் இவன் கொட்டத்தை எப்படியாவது
அடக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
இரணியனுக்கு
வீட்டுக்குள்ளிருந்தே ஒரு எதிர்ப்பு தொடங்கியது.
இரணியனுக்குப் பிரகலாதன் என்று ஒரு
மகன் இருந்தான்.
அவன் நாராயணனின் தீவிர பக்தன்.
எப்போதும் ஹரி நாமத்தையே உச்சரித்துக்
கொண்டே இருப்பான்.
ஊரே நான் சொல்வதைக் கேட்கும்போது
தான் பெற்ற பிள்ளை மட்டும் தனக்கு எதிராக
நாராயணனை வழிபடுவதை இரணியனால்
ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சொல்லி சொல்லிப் பார்க்கிறான்.
பிரகலாதன் கேட்பதாகத் தெரியவில்லை.
பிள்ளை என்றும் பாராது பல தொல்லைகளைக்
கொடுத்துப் பார்த்தான்.
யானை காலில் இட்டு கொல்ல முயற்சி
மேற்கொண்டான்.
ஆனால் பிரகலாதனிடம் இரணியனின்
எந்த அச்சுறுத்தலும் எடுபடாமல் போயிற்று.
இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது.
என்ன செய்வது?
கடைசியாக தன் சகோதரி ஹோலிகாவோடு சேர்ந்து ஒரு சதித்திட்டம்
தீட்டினான்.
பிரகலாதனை தீயிட்டு
கொழுத்தி கொன்றுவிட வேண்டும் என்று
இருவரும் சேர்ந்து முடிவெடுத்தனர்.
ஹோலிகாவும் நெருப்பு தன்னை தீண்டாத வரம்
ஒன்று வாங்கி வைத்திருந்தாள்.
அதன்படி அவள் மேலாடை
மீது தீ பிடிக்காதாம்.
இந்த வரத்தைப் பயன்படுத்தி
பிரகலாதனைக் கொல்ல முடிவு செய்தனர்.
அதனால் ஹோலிகா
தீப்பிடிக்காத மேலாடையைப் போர்த்திக் கொண்டாள்.
மடியில் பிரகலாதனைத் தூக்கி வைத்துக்
கொண்டு
தீ வைத்துவிட்டால் பிரகலாதன் தீயில் கருகிய இறந்து போவான். ஹோலிகாவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று எண்ணினர்.
அதன்படி ஹோலிகா மடியில் பிரகலாதனை இருத்தினர்.
இப்போது தீ பற்ற வைக்கப்பட்டது.
தீ பற்றியது.
அந்த நேரத்தில் ஹோலிகா மீது போர்த்தப்பட்டிருந்த
மேலாடை விலகி பிரகலாதனை
மூடிவிட ஹோலிகா மீது தீ பற்றிக் கொண்டது.
பிரகலாதன் காப்பாற்றப்பட்டான் .
ஹோலிகா தீயில் கருகி
கதறிக் கதறி மாண்டு போனாள்.
அதாவது தீய சக்தி அழிக்கப்பட்டுவிட்டது.
அதனால்தான் ஹோலிக்கு முதல்நாள் இரவு
ஹோலிகா தகனம் என்று தீயிட்டுக் கொழுத்துவது
ஒரு சடங்காகவே இன்றும் நடைபெற்று வருகிறது.
தீயவளான ஹோலிகா அழிந்த அந்த நாள்தான் ஹோலி பண்டிகையாக
கொண்டாடப்படுகிறது.
அந்த நாளில் ஒருவர்மீது ஒருவர்
வண்ணப்பொடிகளைத் தூவி தங்கள்
மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
அதனால் ஹோலி வண்ணங்களின்
பண்டிகையாக அறியப்படுகிறது.
ஹோலிகா அழிவைக் கொண்டாடும்
நாள் ஹோலி.
தீமை அழியக்கப்பட்ட நாள்.
இந்த நாளில் எந்தத் தீயச் சிந்தனைகளும் எழாதிருக்க வேண்டும்.
சிந்தையிலும் பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது என்ற நல்லெண்ணம்
வர வேண்டும் .
நல்ல எண்ணத்தோடு
பாதுகாப்பாக
ஹோலிப் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்திருக்க
நல்வாழ்த்துகள் 🌹
ஹோலி பண்டிகையைப் பற்றிய புராணக்கதை மிகச்சிறப்பு.
பதிலளிநீக்கு