ஈக்கு விடம் தலையில்


ஈக்கு விடம் தலையில்


ஒரு சிலருக்கு உடம்பெல்லாம் விஷம்

என்று சொல்வார்கள்.

அவர்கள் நாடி நரம்பு எல்லாம் கெட்ட சிந்தனை ஊறிக் கிடக்கும்.

யாருக்கு உலை வைக்கலாம் 

யாருக்கு எதிராகப் பேசலாம் 

யார் வீட்டைக் கெடுக்கலாம்

என்று கங்கணம் கட்டித் திரிவர்.

பொய் புரட்டு

பொறாமை வஞ்சகம் என்று அத்தனை கெட்ட குணத்தையும் மொத்தமாக குத்தகைக்கு வாங்கி வைத்துக் கொண்டு திரிவர்.

இவர்களைத்தான் துஷ்டர்கள் என்று சொல்வார்கள்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று சொல்லித் தந்திருக்கிறார்கள்.

அப்படி ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் ஒதுங்கிச் செல்லச் சொல்வதற்கான காரணம் என்ன?

நல்லோர் நிறை உலகில் ஒரு சிலர் மட்டும் இப்படி மாறுபட்ட வேறுபட்ட

சிந்தனையோடு இருப்பர். சுயநலம் தான் எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக இருக்கும்.

இப்படி ஒரு நினைப்போடு கடந்து செல்ல நினைத்தபோது மெதுவாக  ஒரு ஈ வந்து கையில் உட்கார்ந்தது.

பட்டென்று அடித்து விட்டேன்.

உடனே படித்த ஒரு பாடல் நினைவுக்கு வர சற்று நேரம் அந்தப் பரிதாபத்திற்குரிய ஈயைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

இப்போது பாடல் இதோ உங்களுக்காக...

"ஈக்கு விடம் தலையில் எய்தும் இரும் தேளுக்கு 

வாய்த்த விடம் கொடுக்கில் வாழுமே - நோக்கு அரிய 

பைங்கண் அரவுக்கு விடம் பல் அளவே துர்ச்சனர்க்கு

அங்கம் முழுதும் விடமே ஆம் "


எளிய பொருள்.

பாடலை இரண்டுமுறை பிரித்துப் படித்துவிட்டாலே மொத்த பொருளும் புரிந்துவிடும்.

ஈ-க்கு விடம் தலையில்  அதாவது

ஈக்களுக்கு விஷம் தலையில் இருக்குமாம்.

தேளுக்கு விடம் கொடுக்கில்  அதாவது தேளின் விஷம் அதன் கொடுக்கில் இருக்குமாம்.

பாம்புக்கு விடம் பல்லில்  அதாவது பாம்பின் விஷம் அதன் பல்லில் இருக்குமாம்.

துஷ்டனுக்கு உடம்பெல்லாம் விடம் அதாவது நாடி நரம்பு எல்லாம் விஷம்.

அவன் எண்ணம், சிந்தனை, பேச்சு எல்லாமே விஷம்தான் என்கிறது நீதி வெண்பா.

சுருக்கமாக, மற்ற உயிரினங்களின் விஷம் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இருக்கும்; ஆனால் தீயவர்களின் முழு உடலும் விஷமாகவே 
இருக்கும்.

கொடுமை இல்லையா?

ஈக்கு விடம் தலையில்

தேளுக்கு விடம் கொடுக்கில்

பாம்புக்கு விடம் பல்லில் 

துர்ச்சனர்க்கு அங்கம் முழுதும் விடம்

எளிய பாடல்.

சிந்தனைக்குரிய கருத்து.











கருத்துகள்

Popular Posts