சங்கத்தமிழ் மூன்றும் தா
சங்கத்தமிழ் மூன்றும் தா
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர்
இறைவனைத் தொழுவது நமது வழக்கம்.
இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே நாம் செய்யப் போகும் காரியம் வாய்க்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்குள்ளும் இருக்கும்.
"நம் தொழில் நன்றாக நடக்க வேண்டும்.
படிப்பில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்க வேண்டும்.
நல்ல வேலை கிடைக்க வேண்டும்.
நோய்நொடி இல்லாத
நலமான வாழ்வு வேண்டும்.
நல்ல அறிவு வேண்டும் .
கீர்த்தியும் புகழும் வந்து சேர வேண்டும்"
இப்படி நமது கோரிக்கைகள் இருக்கும்.
கேட்டதைக் கொடுப்பவன் இறைவன் என்ற நம்பிக்கை நம்மில் பெரும்பாலோனோர்க்கு உண்டு.
சாதாரண மக்களுக்கு இருக்கும் .
இதே நம்பிக்கை ஔவையிடமும் இருந்தது.
அதனால் ஔவையும்
தனது நல்வழி பாடல்களை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக இறைவனை வணங்கினார். வணங்குவதோடு மட்டுமல்லாமல் இறைவனிடம் ஒரு கோரிக்கையும் வைக்கிறார்.
அப்படி என்ன கோரிக்கை வைத்திருப்பார் ஔவை?
வயிறார உண்ண நல்ல உணவு வேண்டும்
என்று கேட்டாரா?
எழுதி முடிக்கும் வரை போதிய உடல் நலம் வேண்டும் என்று
கேட்டாரா?
நினைவாற்றல் வேண்டும் என்று கேட்டாரா?
நீங்கள் நினைப்பதுபோல இப்படியொரு வேண்டுதலை ஔவை இறைவன் முன் வைக்கவில்லை.
வேறென்ன கேட்டிருப்பார்?
அவர் வைத்த கோரிக்கை
என்ன தெரியுமா?
எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா
என்பது ஔவையின் கோரிக்கை.
வெறுமனே தனது கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என்று அவர் கேட்கவில்லை.
நான் உனக்கு இது தருவேன் நீ என் கோரிக்கையை நிறை வேற்றித் தர
வேண்டும் என்று ஒரு
நிபந்தனையோடு தனது கோரிக்கையை இறைவன் முன்னர் வைக்கிறார்.
இறைவனுக்குக் கொடுக்கும் அளவுக்கு ஔவையிடம் என்ன இருக்கிறது?
பாடலைத் தவிர வேறென்ன இருக்கப் போகிறது என்றுதானே நினைக்கிறீர்கள்.
அதுதான் இல்லை.
இதோ பாடல் உங்களுக்காக...
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா."
"உயிர்களுக்கு நல்லது செய்யும்
யானை முகத்தானாகிய
குற்றமற்ற விநாயக பெருமானே!
பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன்,.
நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற சங்கத் தமிழ் மூன்றையும் தருவாயாக "
என்று கேட்கிறார்.
கூழுக்காகப் பாடியவர் என்று அவரை கிண்டலாகக் பேசுவர்.
கூழுக்காக மட்டுமல்ல...
உப்புக்கும் புளிக்கும் கூட பாடுவேன்
என் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்.
கூழுக்காகப் பாடியவராக இருந்தாலும் தன் பாடல்
தரமானதாக இருக்க வேண்டும்.
அதில் இலக்கிய நயம் இருக்க வேண்டும்.
ஓசை நயம் இருக்க வேண்டும்.
உள்ளத்தோடு உரையாடும் உணர்வு இருக்க வேண்டும் . மக்கள் மனம் கவர்வதாக இருக்க வேண்டும் .
முத்தமிழும் விரவிக் கிடக்கும் இலக்கிய நயம் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
அதனால்தான்" எனக்கு சங்கத்தமிழ்
மூன்றும் தா "என்று கேட்கிறார்.
இயற்றமிழ்
இசைத்தமிழ்
நாடகத் தமிழ்
மூன்றும் வேண்டுமாம்.
தன் எண்ணங்களை வெளிப்படுத்தும் நல்ல உரையாக தன் படைப்பு இருக்க வேண்டும்
என்பதற்காக இயற்றமிழ் வேண்டும் என்ற கோரிக்கை சரிதான்.
இசைத்தமிழ் எதற்காக?
தான் சொல்ல வரும் கருத்தை ஓசை நயத்தோடு இனிமையாகக் கூற வேண்டும் .
அப்போதுதான் படிக்கும் ஆவலைத் தூண்ட முடியும்.
அதனால் இசைத்தமிழும் வேண்டும் என்கிறார்.
இப்போது நாடகத் தமிழ் எதற்கு என்ற
கேள்வி எழுகிறதல்லவா?
எண்ணங்களை வெளிப்படுத்தும்போது மெய்ப்பாடு
புலப்படும்படி எழுதினால்தான்
எளிதில் புரிய வைக்க முடியும்.
உணர்வுப்பூர்வமாக உள்ளங்களோடு உரையாட முடியும்.
அதனால்தான் நாடகத்தமிழும் வேண்டும் என்கிறார்.
முத்தமிழும் கலந்த நடை இருப்பதால்தான்
ஔவையின் பாடல்கள் இன்றுவரை நம்
மனதோடு உரையாடுபனவாக
இசைய வைப்பனவாக
உணர்வோடு ஒன்றியவையாக
நினைத்தாலே இனிப்பனவாக
இருக்கின்றன.
ஒரு பாடலாசிரியருக்கு எது எது தேவை என்பதை அறிந்து
இறைவன் முன்னர் வைக்கப்பட்ட
கோரிக்கை.
நீ எனக்குச்
சங்கத்தமிழ் மூன்றும் தா!
அருமையான கோரிக்கை இல்லையா?
கருத்துகள்
கருத்துரையிடுக