காணாமல் போன கடிதங்கள்

காணாமல் போன கடிதங்கள் 


செப்டம்பர் முதல் நாள்.

உலக கடிதம் எழுதும் தினம்.


கடிதம் எழுதுவது...

கடிதம் வருமா என்று காத்திருப்பது

எல்லாம் ஓர் அலாதியான இன்பம்

என்று தான் சொல்ல வேண்டும்.


கடிதமா?எப்படி இருக்கும் என்ற

நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.

இன்லாண்ட் லட்டர்,போஸ்ட் கார்டு,

எல்லாம் காணாமல் போய்விட்டது.

அனைவர் கைகளிலும் கைபேசி.

நினைத்த வேளையில் 

வாட்சப்பில் மெசேஜ் ,கைபேசியில் சுக துக்கங்கள்

 விசாரிப்பு என்று மிக நெருங்கி 

வந்துவிட்டோம் என்று நினைக்கிறோம்.


ஆனால் கடிதம் எழுதும்போது

இருந்த எதிர்பார்ப்பு, நெகிழ்ச்சி,

மகிழ்ச்சி இன்று காணாமல் போய்விட்டது

 என்றுதான் சொல்ல வேண்டும்.


அந்தக்காலம் அது ஒரு கனாக்காலம்...


கிராமப்புறங்களில் 

ஒரு வீட்டுக்குத் தபால்காரர் வந்தால் 

அவர் சைக்கிள் பின்னால் 

பத்து பிள்ளைகள் நடந்து வரும்.


யானை வரும் பின்னே மணியோசை

 வரும் முன்னே என்பதுபோல

ஒன்றிரண்டு சிறுவர்கள் பாட்டியோ... 

பாட்டியோ... பாட்டியோ.... உங்கள் வீட்டிற்கு 

லட்டர் வந்துருக்கு என்று 

மூச்சிரைக்க ஓடிவந்து 

சொல்வார்கள்.

அந்த வீட்டுப் பாட்டிக்கு 

காலும் ஓடாது கையும் ஓடாது.


நாலு நாளாக ஒரே தேட்டமா இருந்தது. 

என் மவன் கிட்ட இருந்துதான் வந்திருக்கும்.

போன தடவையே உடம்பு சரியில்லை

என்று எழுதியிருந்தான். 

கொஞ்சம் சுக்கு தண்ணி 

போட்டு குடி மக்கான்னேன்.

எப்படி இருக்கானோ? ஒரு மாசத்திற்கு 

முன்னால் வந்த ஜலதோசம் பற்றி

இன்றுவரை கவலை.


ஒரு கடிதம் வந்து மறு கடிதம் வர

பலநாட்கள் ஆயினும் அந்தத் தொடர்பு 

அப்படியே இருந்து கொண்டிருக்கும்.


.

கிராமத்தில் கடிதம் எழுவதற்கென்றே 

ஆட்கள் உண்டு.


எழுதத் தெரியாத காலம். எழுதத் 

தெரிந்தவர்களைத் தெய்வமாக

மதித்த காலம்.


ஒரு கடிதம் எழுதி வாங்குவதற்காக

மணிக்கணக்கில் காத்துக்கிடந்து 

எழுதி வாங்கிய காலம் என்று

கடிதத்திற்குத்தான் எத்தனை

எத்தனை நெகிழ்ச்சியான

நெடிய  வரலாற்றுக்காலம் உண்டு.


காலம்தான் அழகானது என்றால்

கடிதத்தின் எழுத்தும் அழகானது தான்.


என் வழி தனி வழி என்பதுபோல

ஒவ்வொருவருக்கும் கடிதம் 

எழுதுவதற்கென்று தனிப் பாணி

தனித்தனியான 

பாணி உண்டு.



வீட்டிலுள்ள அனைவரையும்

ஒருவர் விடாமல் 

 விசாரிப்பது 

 ஒரு சிலரின் பாணி

 

நலம் நலமறிய அவா.

ஒற்றை வரியை மறக்காமல்

முதல் வரியில் வைத்து அவாளுக்குத்

தேவையானவற்றை அடுத்தவரிகளிலிருந்து

நீட்டி முனங்கி எழுதுவது  

மற்றொரு பாணி.


அன்புள்ள அப்பா அம்மாவுக்கு 

எனக்கு  கல்லூரிக்கு பீஸ் கட்டணும்.

பணம் அனுப்புங்கள்.

என்று விசயத்தை மட்டும்

எழுதுவது இளைஞர் பாணி.


ஆடு குட்டி போட்டுதா?

மாடு பால் கரக்குதா?

மாடு கன்று போட்டுருக்குதா?

கிடாரியா ? பொட்டையா?

என்று அத்தனை விசயங்களையும்

கேட்டு எழுதுபவர்களும் உண்டு.



ஒருவர் பெயர் விட்டுவிட்டு விட்டால்

போதும்...

 பார்த்தியா பார்த்தியா

என்னை கேட்டானா பாரு ?என்று

குய்யோ முறையோ என்று கூப்பாடு

போடுவது.... மறுபடி ஊருக்கு வந்தால்

என்னை ஒரு வார்த்தை கேட்டு எழுதினியா

என்று வலிய போய் சண்டை இழுப்பது...

இந்த சுகமே தனிதாங்க...



எந்த வகை கடிதம் வந்தாலும்

மகிழ்ச்சிதான்.


மிகவும் அக்கறையாகக் கேள்விகளைச்

சுமந்து வரும் கடிதங்கள்

ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தும்.

ஒரு வாரம் முழுவதும் அதையே சொல்லிச்

சொல்லி மகிழ வைக்கும்.

பார்ப்பவர்களிடம் எல்லாம் 

அதைப்பற்றி பேச வைக்கும்.

இந்த மகிழ்ச்சிக்குக் குறுக்கே

 வேறு எந்த இடர் வந்தாலும் 

 தாங்கிக் கொள்ளும்

வலிமையைக் கொடுக்கும்.


கடிதங்களை படித்ததும் உடம்பெல்லாம்

ஒருவிதமான புல்லரிப்பு.


சிலிர்ப்பு .சிரிப்பு உள்ளுக்குள்ளே

உவப்பு..பக்கத்தில் யாரும் இருந்தால்

போதும்..

 எப்படியெல்லாம் கேட்டு 

எழுதியிருக்கிறான் பாரு... என்று

சொல்லிச் சொல்லி பூரிப்பு..

கடிதத்தை ஒரு தடவையா வாசிப்போம்.?

ஒன்றுக்கு நாலு தடவை வாசிப்போம்.

அது எல்லாம் தனி சுகம்.

நினைத்தாலே இனிக்கும்.

நினைவெல்லாம் இளமையில்

மிதக்கும்.



நலம். நலமறிய அவா

என்ற எழுதிய கடிதத்தை பிரித்து

படிப்பதற்கு

முன்பாகவே நலம் நலமறிய அவா.

என்று வாசித்து விடுவோம். எங்கள்

வீட்டுக்கு வரும் கடிதங்கள் இப்படித்தான்

தொடங்கும்.

அவா என்றால் என்ன பொருள்

அம்மாவுக்குத் தெரியாது..

ஆனால் அம்மாவுக்கு 

அதைக் கேட்பதே அலாதி இன்பம்.


கடிதங்கள் உறவுப்பாலங்களாக 

மட்டும் இருந்தனவா என்றால் இல்லை

என்றுதான் சொல்லுவேன்.

மொழி வளர்ச்சிப் பணிகளைச்

சப்தமில்லாமல் செய்து கொண்டிருந்தன. 

கடித இலக்கிய முன்னோடி வள்ளலார்

என்று சொல்வார்கள்.

தனக்கு வரும் கடிதங்களுக்கு தன்

தன் கைப்பட அழகு தமிழில்

எழுதிய கடிதங்கள் 

ஒரு கடிதம் எப்படி எழுத வேண்டும்

என்பதைச் சொல்லித் தருவதாக இருந்தன.


பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் ,

மு. வரதராசனார் எழுதிய 

இலக்கிய கடிதங்கள்,

நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள்

இப்படி கடித வரலாறு

நம்மை என்றென்றும் கடிதங்கள் பக்கம்

திரும்பிப் பார்க்க வைத்துக்

 கொண்டிருக்கின்றன.



கையெழுத்துப் பற்றிய

விழிப்புணர்வோடு எழுத 

வைத்துக் கொண்டிருந்தன.

முத்து முத்தான கையெழுத்து 

அவர்களைப் பார்க்காமலே ஆயிரம் 

முத்தங்களை

 வாங்கிய கடிதங்களும் உண்டு.


சோகங்களைச் சுமந்து வந்த பாவத்திற்காக

கண்ணீரைத் தாங்கி கரைந்து

போன கடிதங்கள்.


இப்படி கடிதங்கள் நம் உறவும்

பாலங்களாக இருந்து வந்தன.

காத்திருப்பின் சுகத்தைக்

கொடுத்தன.

தொடர்பு துண்டிக்கப் படாமல்

வைத்துக் கொண்டன.

இன்றைய உறவுகள் தொடர்புக்கு அப்பால்

போவதற்கு காரணம் இந்த செல்லிடபேசி

என்றுதான் சொல்ல வேண்டும்.


நினைத்த வேளையில் நினைத்தவற்றை

மணிக்கணக்காக பேச முடிகிறது.

அதனால் நிதானம் இழந்து எதையாவது பேச  

தொடர்பு துண்டிக்கப்பட்டுப் போய்விடுகிறது.


என்றோ எழுதப்பட்ட கடிதத்தை இப்போது

எடுத்து வாசித்தாலும் எழுதியவரின்

முகம் கண்முன் வந்து ஏதேதோ கதைகள்

பேசிச் செல்லும். இறந்தகால நினைவுகள்

அத்தனையும் கொண்டு வந்து நிறுத்தி

மகிழ வைக்கும்.


சின்ன சின்ன மகிழ்ச்சிகள் தான் 

வாழ்க்கையை இனிமையாக்கி

நகர்த்திச் செல்லும்.

இந்த அவசர காலத்தில் அவற்றை

ஒவ்வொன்றாக இழந்து கொண்டே வருகிறோம்.

மீண்டும் அந்த மகிழ்ச்சியான

கடித காலம் மீண்டு வருமா என்ற

நெடிய ஏக்கம் பலரிடம் உண்டு.


அறிவியலின் அசுர வேக வளர்ச்சியில்

 அவசரமாக

அள்ளிக்கொண்டுச் செல்லப்பட்ட

கடிதங்கள் காணாமலே போய்விட்டன.


காணாமல் போய்விட்டாலும்

கனவுகளாக பழைய

 நினைவுகளாக என்றென்றும்

இதயத்தோடு உறவாடி இனிமை

சேர்த்து நிற்கும் என்பது மட்டுமே உண்மை.








Comments

Popular Posts