முடியும் என்று நம்பு

முடியும் என்று நம்பு 

முடியும் என்ற நம்பிக்கையோடு உன் முதலடியை

எடுத்து வை.முழு படிக்கட்டையும் நீ
பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
முதல் படி ஏறு" என்பார் மார்ட்டின்
லூதர் கிங்.

ஆமாம் உன்மீது நம்பிக்கை வைத்து
முதற்படியில் கால் வைத்தால்
போதும். மீதிப் படிகளையும்
ஏறி நீ சிகரம் தொட்டுவிடலாம்.

எத்தனைப் படிகள் என்பது
முக்கியமல்ல.
எப்படியும் நடந்துவிடலாம்
என்ற தன்னம்பிக்கை
மட்டும் போதும்.

என்னிடம் என்ன இருக்கிறது
என்று எண்ண வேண்டாம்.
 மரங்களைக் குடைய
 மரங்கொத்தி கோடாரி கொண்டு
 செல்கிறதா?
 இல்லையே...தனது ஒற்றை அலகை நம்பி
 வைரம் பாய்ந்த மரத்திலும் 
 கூடு அமைந்துவிடுகிறது...

நம்மால் மட்டும் கூடாதா என்ன?

போராட வந்த பின்னர்
புறமுதுகிட்டு ஓடலாமா?

கழனியில் இறங்கிய பின்னர்
சகதியாகிறது என்று
காலைத் தூக்கலாமா? 

இருட்டினில் நடக்கும்போது
கால் ஒலி கேட்கத்தான் செய்யும்.
மழையில் நடக்கும்போது
குடை பிடித்தாலும் 
கால் நினையத்தான்
செய்யும்.

கால் நனைகிறதே என்றால்
வெளியில் செல்வதெப்போது?

கரை சேருவோம் என்ற 
நம்பிக்கையில்தான்
கப்பலில் ஏறுகிறோம்.

கடலில் கப்பல் கவிழ்ந்து விடுமோ
என்ற ஐயம் எழுந்தால் காலத்திற்கும்
கப்பலில் கால் வைக்க முடியுமா?

பறந்தால் கீழே விழுந்துவிடுவோம்
என்று எண்ணியிருந்தால் 
பறவைகளால்
பறக்கத்தான் முடியுமா?

சிறகுகளின் மேல் நம்பிக்கை
 வைத்திருப்பதால்தான்
 நீள்கடலையும் நெடுமலையையும்
 கடந்து வர முடிகிறது.
 

நேற்று அடித்த சூறாவளியில்
அலறிய கொப்புகளையும்
விட்டுவிடாமல் அரவணைத்து
இன்றும் நின்று
கொண்டிருக்கும்
வலிமை மரங்களுக்கு
எங்கிருந்து வந்தது ?
யார் கொடுத்தது?

அட போய்யா...
நீ என்னை ஒடிக்கவும் முடியாது.
பெயர்க்கவும் முடியாது.
எனக்கு என் வேர்களின் மீது
நம்பிக்கை இருக்கிறது
என்று புயலுக்கே சவால் விட்டு
இன்றுவரை நின்று
கொண்டிருக்கும் மரத்திற்கு இருக்கும்
தன்னம்பிக்கை நம்மிடம்
 இல்லையா?


விடிய விடிய கொட்டித்
 தீர்த்த மழையிலும்
முகம் தொய்ந்துவிடாது மறுநாள்
காலையில் சூரியனைக் கண்டதும்
மலர்ச்சி காட்டி வரவேற்று 
நிற்கிறதே இலைகள்..
அந்த இலைகளுக்கு இருக்கும்
தன்னம்பிக்கை நமக்கு
இல்லையா?

நெடுநாள் மழையறியா
பூமி.
இனி பசுமையைக் காணவே
முடியாதோ என்று ஏங்கியிருந்த
வேளையில் படபடவென்று
மழைத்துளி விழ நான்கு நாட்களுக்குள்
தலை தூக்கி எட்டிப்பார்க்கும் 
புல்பூண்டுகளுக்கு இருக்கும்
தன்னம்பிக்கை நமக்கு இல்லையா?

பூமிக்குள் புதைந்து காய்ந்து
காணாமல் போயிருந்த
விதைகள் மழைத்துளியைக்
கண்டதும் மலர்ச்சி கண்டது எதனால்?

காணாமல் போன விதைகள் எல்லாம்
எட்டிப் பார்த்து விண்ணைத்தொட
முயன்று கொண்டிருக்கும்போது
நம்மால் மட்டும் ஏன் முடியாது?

வேரில் உயிர் இருக்கும்வரை
செடிகள் அழிந்து போகப்போவதில்லை.

எனக்குள்ளும் உயிர் இருக்கிறது.
உத்வேகம் இருக்கிறது. நான் ஏன் காணாமல் போக வேண்டும்?
நான் ஏன் என் அடையாளத்தை
இழக்க வேண்டும்?

என்மீது எனக்கு நம்பிக்கை
இருக்கிறது.
விழுந்தாலும் எழுவேன்.
ஒருபோதும் காணாமல் போகமாட்டேன்.


மழை காற்று புயல் என அத்தனையையும்
தாண்டி இன்றும் உயர்ந்து நின்று
என்னால் முடியும் என்று சொல்லி நிற்கும்
மரத்தைப் போல் உன்னை நம்பு.


காற்று வீசுவதாலோ
மழை பொழிவதாலோ 
பூக்களுக்கு வலி
ஏற்படப் போவதில்லை.
காயப்பட்டுப் போவதில்லை.


புழுதி வீசியதால் புவி
அழுக்கடைந்து போவதில்லை.

புழுதிவாறித் தட்டியதால்
நீ மட்டும் புழுதியாகிப் 
போகப் போகிறாயா என்ன?

நீயாக சோர்ந்து போகாமல் இருக்கும்வரை
உன்னை யாரும் குப்புற
தள்ளிவிட முடியாது.

உன் சோர்வும் தன்னம்பிக்கை
இழப்பும் தான் எதிரிகளின் பலம்.

உன் பலவீனம் எதிரிகளைச்
பலப்படுத்தும்.

சோர்வு என்பதை தூக்கி வீசினால்
புத்துணர்ச்சியோடு மீண்டு வரலாம்.

அழுக்கடைந்த இலைகள்
அரைமணி நேர மழையில்
அழகாய் கழுவப்படும்.

எவ்வளவு புழுதி வீசினாலும்
ஒற்றை மழைத்துளி என்னை
மகிழ்ச்சி கொள்ள வைத்திடும்
என்ற நம்பிக்கையில்தான்
பூக்கள் சிரிக்கின்றன.

யார் வந்து என்ன இடையூறு
செய்தாலும் என்னால் மகிழ்ந்து
மலர்ந்து நிற்க முடியும் என்று
என்று உலகுக்கு உணர்த்துகிறது.
சிறகுகளை நம்பி வானில் பறக்கும்
புள்ளினம் போல் உன்னை நம்பு.

அமைதியான கடல் திறமையான
மாலுமிகளை உருவாக்குவதில்லை
என்று சொல்வார்கள்.

சோதனைகள் வரவில்லை என்றால்
நீ யார் என்பதை இந்த
உலகம் அறிந்திடாது.

தண்ணீருக்குள் விழுந்த எறும்பு
தூக்கிவிட ஆள் வரும் என்று
காத்திருந்தால் தண்ணீருக்குள்
அமிழ்ந்து தான் போகும்.
கண்ட துரும்பபைப் பற்றிக்கொண்டு
வெளிவர முயற்சித்தால்
உயிர் பிழைக்க முடியும்.

எனக்கான பிரச்சனையிலிருந்து
மேலெழும்பி வர என்னால்
மட்டுமே முடியும் என்ற
நம்பிக்கை வேண்டும்.

விழுந்த இலைகளுக்காக
மரங்கள் கவலைப்படுவதில்லை.

நாம் ஏன் விழுந்ததையே எண்ணி
வீழ்ந்துகிடக்க வேண்டும்.?

மீண்டும் தன்னால் துளிர்விட
முடியும் என்ற நம்பிக்கை 
மரங்களுக்கு இருப்பதுபோல்
என்னாலும் வெற்றிபெற முடியும்
என்று உன்மீது நம்பிக்கை வை.

எல்லாரிடமும் கற்றுக்கொள்ள
ஏதோ ஒன்று இருந்துகொண்டுதான்
இருக்கிறது.

உன்னிடமிருந்தும் கற்றுக்கொள்ள
ஒரு திறமை இருக்கிறது.
அந்தத் திறமையை வெளிக்கொண்டு வர
வெளியிலிருந்து யாரும்
வரப் போவதில்லை.

உனக்கான ஓர் இடம்
எப்போதும் உனக்கானதாகவே
இருக்கும்.
அதை வெறுமையாக வைப்பதும்
நிரப்பி வைப்பதும் உன் கையில் தான்
இருக்கிறது.

அதற்கான மந்திர சக்தி
உன் கையில் இருக்கும்போது 
பிறரை நம்பி ஏன் காலத்தை
விரயம் செய்கிறாய்?

உனக்குப் பிடித்ததைச்
செய்து கொண்டே இரு.
உனக்கு மட்டும் 
பிடித்ததைச் செய்.
யாருக்காகவும் எதற்காகவும்
உன்னை மாற்றிக் கொள்ளாதே.

நேரமும் சூழலும்
எப்போது வேண்டுமானாலும் 
மாற்றலாம்.
"நெஞ்சிலே வலுவிருப்பின்
வெற்றி தஞ்சமென்று
உரைத்து வந்து நம்மிடம்
கொஞ்சுவது உறுதி"
என்றார் அறிஞர் அண்ணா.

இருட்டை கடந்துவிட்டால்
அடுத்து நாம் காணப்போவது
வெளிச்சம் தான்.

சிறகுகளை நம்பி வானில் பறக்கும்
புள்ளினங்கள் போல் உன்னை நம்பு.

இந்த உலகின் திறமைசாலி
 நீதான்.
நீ மட்டும்தான்.

உன்னால் முடியவில்லை என்றால்
யாரால் முடியும்?



Comments