மெல்லத் தமிழினிச் சாகும்

மெல்லத் தமிழினிச் சாகும் 


அண்மை காலமாக தமிழ் ஒவ்வொருவர் வாயிலும் அகப்பட்டு சிக்கித் சிதறி தவிப்பதைக் கேட்கும்போது பாரதியின் "மெல்லத் தமிழினிச் சாகும் "என்ற வரி நினைவுக்கு வந்தது.

தற்போதைய பேச்சுக்கும் பாரதியின் வரிக்கும் என்னத தொடர்பு? பாரதி முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் அதனை எழுதியிருந்தார். நீங்கள் மொட்டை  தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடப் பார்க்கிறீர்கள் என்றுகூட சிலர் நினைக்கலாம்.

எனது கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது  அது என்னவோ உண்மைதான் என்பது போலத் தோன்றுகிறது.

பழகியமொழி 

பழக்கப்பட்ட மொழி 

கருவிலிருக்கும்போதே நம் உணர்வோடும் 

உயிரோடும் கலந்த மொழி

பேசுவதில் திக்கித் திணறலாமா?

இந்தத் திக்கலுக்கும் சிக்கலுக்கும் காரணம் என்ன?


பெரும்பாலான மாணவர்கள் இன்று ஆங்கில வழி கல்வியே பயில்கின்றனர். அதனால் அவர்களால் தமிழ் மொழிப் பாடத்தைக் தவிர மற்றப் பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகிறது. அதனால் தமிழறிவு சற்று குறைந்து வருகிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது. போதுமான வாசிப்புப் பயிற்சி இன்மை தமிழில் படிக்க இயலா நிலையில்  கொண்டு போய்விட்டுவிடுகிறது.

பெரும்பாலான வீடுகளில் தமிழ் பேசுவது புறக்கணிக்கப்படுகிறது.

படித்தவரில் பலர் தமிழ் பேசுவதையே அவமானமாகக் கருதி ஒதுக்கி வைத்துவிடுகின்றனர். பல நாட்கள் கிடப்பில் போடப்பட்ட பொருள் துரு பிடித்து

பயன்படுத்த முடியாது போல மொழியும்  மெருகேற்றப்படாமல் இருந்தால் சரியாக முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். அதுதான் தற்போது உள்ள

சிக்கலுக்குக் காரணம்.


இப்போது பாரதியார் கூறிய கருத்துக்கு வருவோம்.

பாரதியார் “மெல்லத் தமிழ் இனி சாகும்’ 

 அவர் எழுதிய முழு பாடல் இதோ உங்களுக்காக:

கன்னிப் பருவத்திலே அந்நாள் – என்றன்
காதில் விழுந்த திசைமொழி எல்லாம்
என்னென்னவோ பெயருண்டு – பின்னர்
யாவும் அழிவுற்று இறந்தன கண்டீர்! 

தந்தை அருள் வலியாலும் – முன்பு

சான்ற புலவர் தவ வலியாலும்
இந்தக் கணமட்டும் காலன் – என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி இருந்தான் 

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி
ஏது செய்வேன்? எனதாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்! 

"புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை 

சொல்லவும் கூடுவதில்லை – அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" 

என்றந்தப் பேதை யுரைத்தான் – ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! 

தந்தை அருள் வலியாலும் – இன்று

சார்ந்த புலவர் தவ வலியாலும்
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்." 

என்றார் பாரதி.

ஆங்கிலம் உலகில் ஓங்கும் .

எல்லோரும்  ஆங்கிலவழி படிப்பதால்

மெல்லத் தமிழினிச் சாகும் என்று மடையர்கள் அதாவது அறிவற்றவர்கள் கூறித் திரிவர். அந்த சொல் சொல்லத் தகாத சொல்லக்கூடாத ஒரு சொல்.ஆதலால் அவர்களின் கருத்துப் பொய்யானது  என்பதை மெய்ப்பிக்கும் விதமாக எட்டுத் திசையெங்கும் சென்று கலைவளத்தைத் தமிழகத்திற்குக் கொண்டு வாருங்கள். 

அப்படி ஒரு முயற்சியைக் கடவுள் அருளாலும் புலவர் முயற்சியாலும் 

செய்தால் மட்டுமே தமிழ்மீது வைக்கப்படுகின்றன அந்தப் பழி தீரும். நம் அன்னை மொழியாம் தமிழ் உலகம் எங்கும் என்றும் கோலோச்சி  இருக்கும்"

என்பது பாரதியின் கருத்து.


நீங்கள் படிக்கின்ற துறை அறிவு சார் நூல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதால் உங்களால் தமிழைப் படிக்க முடியாமல் போய்விடுகிறது.

தமிழ்ப் புலமை குறைகிறது.

பேச்சு மொழி  அந்நியமொழியாகப் போகும்போது தாய்மொழி அறிவு குறைந்து நாமும் தாய்மொழியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்நியச் பட்டுப் போவோம். அதனால் பொது இடங்களில் அதாவது இணைப்புமொழியாகத் தமிழைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம்  ஏற்படும்போது  தமிழ் நாவிலிருந்து சரியான உச்சரிப்போடு  வெளிவர மறுக்கிறது. தடுமாறுகிறது.

பிழைபடப் பேச வைக்கிறது.

பிறர் நகைப்பிற்கு இடம்கொடும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது.

அதனால் 

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்

செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! "

என்கிறார் பாரதி.


தமிழில் மொழிபெயர்த்து படியுங்கள்.

தமிழில் படியுங்கள்.

தமிழில் பேசுங்கள்.

வீட்டில் தமிழ் ஆட்சி செய்யட்டும்.

ஆட்சிமொழியாக இருக்கும் தமிழ்மொழி

புறக்கணிப்படாதிருக்கட்டும்.

நகைப்புள்ளாகாதிருக்கட்டும்  


மெல்லத் தமிழினி ச் சாகும் என்ற வரி மெய்ப்படாதிருக்கட்டும்.


கருத்துகள்

Popular Posts