அன்பின் அடையாளங்கள்
அன்பின் அடையாளங்கள்
அன்பு... அன்பு... அன்பு!
அன்பைச் சுற்றித்தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
அன்புக்கான ஏக்கம்,
அன்பின்மீது கொண்ட நாட்டம்,
அன்புக்கான ஓட்டம்,
அன்புக்கான தேட்டம்—
என்று ஒட்டுமொத்த உலகமே அன்பின் பின்னால்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
என்னிடம் அன்பு இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
பிறரிடம் அன்பு இருக்கிறது என்பதை எப்படிக் கண்டறிவது?
அன்புக்கு என்னதான் அளவுகோல்?
யாரிடம் போய்க் கேட்பது?
இப்படிப் பல நாட்களாக எனக்குள் ஒரு குழப்பமான தேடல் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போதுதான், எதற்கும் தீர்வு சொல்லித் தரும் வள்ளுவரிடம் என் கேள்விக்கு விடை இல்லாமலா இருக்கும் என்று எண்ணி நேரே வள்ளுவரிடம் சென்றேன்.
“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்”
என்ற ஒற்றைக் குறளில் என் தேடலுக்கான விடை இருக்கிறது என்று சொல்லிவிட்டு, கடந்து போய்விட்டார் வள்ளுவர்.
அன்பைத் தாழ்ப்பாள் போட்டு மறைக்க முடியாது.
தன் அன்புக்குரியவருக்கு ஒரு துன்பம் நேர்ந்துவிட்டால், அதைப் பார்த்துக்கொண்டு அன்புடைய ஒருவரால் சும்மா நிற்க முடியாது.
கண்களிலிருந்து கண்ணீர் தானாக வழியும்.
கைகள் தானாக உதவிக்கரம் நீட்டும்.
அப்படியானால், அன்பை வெளிப்படுத்தும் முதல் மொழி கண்கள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.
மறுநாள் அதிகாலையில் பைபிளை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.
ஒரு இடத்தில் என் கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்றுவிட்டன.
“அன்பு... அன்பு...” என்று தேட ஆரம்பித்தாயே!
அன்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்று எத்தனை முறை படித்திருக்கிறாய்?
இன்னுமா புரியவில்லை?
புரியவில்லையென்றால் புரியவைக்கிறேன் என்று என்னை அங்குமிங்கும் நகரவிடாமல் தடுத்தன அந்த வரிகள்.
மறுபடியும்... மறுபடியும் படித்தேன்.
பரிசுத்த பவுலோடு சற்றே உரையாட ஆசைப்பட்டேன்.
அவர் சொன்ன அன்பின் இலக்கணம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அன்பு பொறுமையுள்ளது.
அன்பு தயவுள்ளது.
அன்பு பொறாமைப்படாது.
அன்பு தற்பெருமை கொள்ளாது.
அன்பு இறுமாப்பாய் இராது.
அன்பு முறைகேடாக நடக்காது.
அன்பு தன்னலத்தை நாடாது.
அன்பு சினமடையாது.
அன்பு அநியாயத்தில் மகிழ்ச்சியடையாது; சத்தியத்தில் மகிழும்.
அன்பு எல்லாவற்றையும் தாங்கும்.
அன்பு நம்பும்.
அன்பு நம்பிக்கையுடன் காத்திருக்கும்.
அன்பு சகிக்கும்.
அன்பு ஒருக்காலும் ஒழியாது.
ஓஹோ!
இதுதான் அன்பா?
என்று நான் வியந்து நின்றேன்.
அன்பு பொறுமையாக இருக்கும்.
அதாவது, பொறுமையற்ற இடத்தில் அன்பு முழுமை பெறாது.
அன்பு சாந்தமாகச் செயல்படும்.
அன்பு இருக்கும் இடத்தில் பொறாமைக்கு இடமே கிடையாது.
“நீயும் வாழ வேண்டும்; நானும் வாழ வேண்டும்” என்ற எண்ணம் வந்துவிட்டால், அங்கே பொறாமைக்கு இடம் ஏது?
அடுத்தவரின் உயர்வைக் கண்டு மகிழ முடிந்தால், அதுவே அன்பின் அழகு.
அதற்குள்,
“அன்பு தற்பெருமை கொள்ளாது”
என்ற அடுத்த வரி வந்து நின்றது.
தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்ளாமல் இருப்பதே அன்பின் பண்பு.
அடுத்ததாக,
“அன்பு இறுமாப்பாய் இராது.”
இறுமாப்பு என்றால் என்ன?
“நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்” என்று பிடிவாதமாக நிற்பதுதானே!
அன்பு இருப்பவன், தன் கருத்துக்கு மதிப்பு கொடுப்பதுபோல அடுத்தவரின் கருத்துக்கும் மதிப்பு கொடுப்பான்.
விட்டுக்கொடுக்கும் பண்பு இருக்கும்.
அதுதான் அன்பு.
விட்டுக்கொடுக்கும் பண்பு வந்துவிட்டால், அங்கே அகந்தைக்கும் அயோக்கியத்தனத்திற்கும் இடமிருக்காது.
அன்பு அநியாயத்தைச் செய்யாது.
அன்பு சினமடையாது.
அன்பு இருக்கும் இடத்தில் கோபத்திற்கு என்ன வேலை?
பொறுமையாக எதையும் கையாளத் தெரிந்தவரிடம் சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லிக்கு என்ன வேலை?
அன்பு அநியாயத்தில் மகிழ்ச்சியடையாது; சத்தியத்தில் மகிழும்.
அநியாயமாகக் கிடைத்த பொருளையோ சொத்தையையோ கண்டு மகிழ்ச்சி கொள்ளாது.
தவறான வழியில் பொருள் தேடாது.
உண்மை எதுவோ, உலகம் ஏற்றுக்கொள்ளும் நியாயம் எதுவோ, அதன்படி நடந்து கிடைக்கும்
அதுதான் அன்பு.
அன்பு எல்லாவற்றையும் தாங்கும்.
தனக்கு அன்பானவர்களுக்காக எவ்வளவு கஷ்டத்தையும் தாங்கும்.
அன்பு நம்பும்.
ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டால், அவர்மீது நம்பிக்கையும் இருக்கும்.
எதிர்பார்ப்பில்லாத நம்பிக்கை.
அதுதான் விசுவாசம்.
அன்பு இருக்கும் இடத்தில் விசுவாசம் இருக்கும்.
விசுவாசம் இருக்கும் இடத்தில் நம்பிக்கை இருக்கும்.
அன்பு இருக்கும் இடத்தில் சகிப்புத்தன்மை இருக்கும்.
வெறுப்பு காணாமல் போகும்.
அவநம்பிக்கை அகன்று போகும்.
நம்பிக்கை மட்டுமே நிலைத்திருக்கும்.
இத்தனைப் பண்புகளையும் கொண்ட அன்பு ஒருக்காலும் அழியாது என்று முத்தாய்ப்பாகச் சொல்கிறார் பரிசுத்த பவுல்.
காலத்திற்கு ஏற்ப,
சந்தர்ப்பத்திற்கு ஏற்ப,
ஆட்களுக்கு ஏற்ப,
இடத்திற்கு இடம்—
மாறிக்கொண்டிருப்பது அன்பல்ல.
மாறாத அன்பே உண்மையான அன்பு.
அப்பப்பா!
எவ்வளவு அருமையான விளக்கம்!
இனி அன்பைப் பற்றி எந்தவிதமான ஐயப்பாடும் இருக்காது என்று நினைத்தேன்.
“ஏன் இருக்காது?
இப்போதுதான் ஐயப்பாடே தொடங்குகிறது!” என்கிறீர்களா?
ஆமாம்.
யாரெல்லாம் நம்மீது நேற்று அன்பு வைத்திருந்தார்கள்?
இன்று அன்பு வைத்திருக்கிறார்கள்?
நாளையும் அன்பு வைத்திருப்பார்கள்?
யாரறிவார்?
யாரறிவார்?
இந்த மானிட மனதை யாரறிவார்?
அதனால் அடுத்தவர்களிடம் அன்பைத் தேடிக்கொண்டிருக்காதீர்கள்.
முதலில் நம்மிடமிருந்து அன்பு பிறக்கட்டும்.
“உன்னிடத்தில் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக”
என்ற அந்த ஒற்றை வரியை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.
எவ்வளவு அருமையான வரிகள்!
ஒருவர் அன்பாக இருக்கிறார் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது என்ற ஒற்றைக் கேள்விக்கு, வள்ளுவரும் பவுலும் சேர்ந்து ஒரு பெரிய வாழ்க்கைப் பாடத்தையே நமக்குக் கற்றுத் தந்துவிட்டார்கள்.
வள்ளுவர் சொல்கிறார்—
அன்பை அடைத்து வைக்க முடியாது; அது கண்ணீராக வெளிப்படும்.
பவுல் சொல்கிறார்—
அன்பைச் செயல்களில் காட்ட வேண்டும்; அது பொறுமையாகவும், தன்னலமற்றதாகவும், சத்தியத்தை விரும்புவதாகவும் இருக்க வேண்டும்.
இப்போது அன்பைப் பற்றிய தெளிவான புரிதல் வந்திருக்குமே!
புரிந்தபடி நடந்தால்... நல்லது.
நடக்கவில்லையானால்...
என்ன செய்ய முடியும்?
காதுள்ளவன் கேட்கக் கடவன்.
வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் மிகப் பெரிய பாடம் இதுதான்.
விசுவாசம், நம்பிக்கை, அன்பு
இம்மூன்றும் நிலைத்திருப்பவை;
இவற்றில் அன்பே பெரியது.
அன்பு இருந்தால் மனிதம் இருக்கும்.
அன்பு இருந்தால் கருணை இருக்கும்.
அன்பு இருந்தால் உலகம் இருக்கும்.
அன்பு இல்லாவிட்டால்...
உலகம் இயங்கலாம்;
ஆனால் மனிதம் இயங்காது.
அதனால்
அன்பை எதிர்பார்க்காதீர்கள்...
அன்பைக் கொடுங்கள்!
அதுதான் அன்பின் அதிசயம்.
அன்பு... அன்பு... அன்பு!
அன்பே மனிதத்தின் அடையாளம்!
கருத்துகள்
கருத்துரையிடுக