சோம்பித் திரியேல்
சோம்பித் திரியேல்
“சோம்பித் திரியேல்”
ஆத்திசூடி தந்த அருமையான வாழ்க்கை அறிவுரை.
இரண்டே வார்த்தையில் வெற்றிக்கான முழு விதியையையும் எழுதி வைத்துவிட்டார் ஔவை.
"சோம்பல் இருக்கும் இடத்தில் சாதனை இருக்காது"
"சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்."
என்கிறது வேதம்.”
“சோம்பேறியின் தரித்திரம் வழிப்போக்கனைப் போலும் அவன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.”
என்கிறது நீதி மொழிகள்.
மனிதனுக்கு இறைவன் வழங்கிய மிகப் பெரிய செல்வம் இந்த வாழ்க்கை.
“நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.”
என்பார் திருவள்ளுவர்.
நாள் நம்மைத் தேய்த்துக்கொண்டே செல்கிறது. எனவே, கிடைத்த ஒவ்வொரு நொடியையும் வீணாகக் கழிக்காமல் பயனுள்ள செயலுக்காகப் பயன்படுத்த வேண்டும்.
சோம்பல் என்பது வேலை செய்யாமல் இருப்பது மட்டுமல்ல.
பிறகு செய்வேன் என்று தள்ளிப்போடுவதும் சோம்பல்தான்.
இன்று வேண்டாம்; நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிக்கொண்டே இருப்பவன், நாளை வந்தபோதும் அதையே சொல்வான். இப்படித் தள்ளிப்போடப்படும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் ஒரு பகுதியை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டேயிருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
இன்று செய்ய வேண்டியதை நாளை செய்தால் நாளைக்கான கடமையை
எப்போது செய்வாய்?
ஒரு சிறிய விதை மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது. அதற்குள் ஒரு பெரிய மரத்தின் கனவு இருக்கிறது. ஆனால் அந்தக் கனவு நனவாக வேண்டுமானால் அது மண்ணைப் பிளந்து மேலே வர வேண்டும்.
விதையின் வளர்ச்சிக்கு மண் தடையாக ஒருபோதும் இருப்பதில்லை.
உன் வளர்ச்சிக்கு முதல் தடையாக வந்து நிற்பது சோம்பல் என்பதை மறவாதே.
சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்".
என்பார் சாலமோன் ராஜா.
அந்தச் சிறிய உயிரினம்கூட சோம்பித் திரியேல் என்ற பெரிய வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தருகிறது.
சிலந்தி வலை பின்னுவதைப் பார்த்திருக்கிறோம். வலை அறுந்துவிட்டால் அது மீண்டும் பின்னத் தொடங்குகிறது. மீண்டும் அறுந்தால் மீண்டும் முயல்கிறது.
வாழ்க்கையில் தோல்வி வருவது தவறு அல்ல. தோல்வியைக் காரணம் காட்டி முயற்சியை நிறுத்துவதுதான் உண்மையான தோல்வி.
மின்விளக்கை உருவாக்கிய தாமஸ் ஆல்வா எடிசன் பல சோதனைகளை மேற்கொண்டார். எதிர்பார்த்த முடிவு கிடைக்காதபோதும் அவர் முயற்சியைத் தொடர்ந்தார்.இதற்கு மேல் நாம் எதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்று முடங்கிக் கிடக்கவில்லை.
அவரது வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தி:
“தோல்வி என்பது முடிவல்ல;
வெற்றியை நோக்கிய பயணத்தின் ஒரு படிக்கட்டு.”
ஒருமுறை விழுந்தவன் தோல்வியாளன் அல்ல. விழுந்த பிறகு எழ மறுப்பவன்தான் தோல்வியாளன்.
ஒரு விவசாயி விதையை விதைத்துவிட்டு வரப்போரம் சும்மா அமர்ந்திருந்தால் வயலில் பயிர் விளையுமா?
நிலத்தை உழ வேண்டும்.
விதையை விதைக்க வேண்டும்.
நீர் பாய்ச்ச வேண்டும்.
களைகளை அகற்ற வேண்டும்.
பயிரைப் பாதுகாக்க வேண்டும்.
அப்போதுதான் அறுவடை கிடைக்கும்.
அதேபோல் வாழ்க்கையிலும் வெற்றி வேண்டுமா? படுக்கையிலிருந்து எழு உழை .வெற்றி நிச்சயம் உண்டு.
வெற்றியை விரும்புவது மட்டும் போதாது; அதற்கான உழைப்பையும் வழங்க வேண்டும்.
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.”
— திருக்குறள்
முயற்சியால் கிடைக்கும் பலனை வள்ளுவர் இவ்வாறு உறுதியாகக் கூறுகிறார்.
இன்று கற்ற ஒரு சொல் நாளைய அறிவாகும்.
இன்று செய்த ஒரு முயற்சி நாளைய வெற்றியாகும்.
உலகில் எல்லாவற்றுக்கும் மாற்று இருக்கலாம்; நேரத்திற்கு மட்டும் மாற்று இல்லை.
நேரத்தை வீணாக்குவது என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியை வீணாக்குவதற்குச் சமம்.
சோம்பலை வெல்ல பெரிய மந்திரம் தேவையில்லை.
சிறிய இலக்கு — தொடர்ந்து முயற்சி — ஒழுங்கான நேரம் — விடாமுயற்சி
இந்த நான்கையும் கடைப்பிடித்தாலே போதும்.
“என்னால் முடியுமா?” என்று கேட்பதைவிட,
“முடியும்வரை முயற்சி செய்வேன்!”
என்று மனதுக்குள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.அந்த உறுதி உங்களைத் தூங்காமல் துரத்தும்.
வாழ்க்கை என்பது ஓர் ஓட்டப்பந்தயம். எல்லோரும் ஒரே வேகத்தில் ஓட முடியாது.
நிற்காமல் ஓட வேண்டும்.
சோம்பல் முயலை நிழலுக்கு அழைத்தது போல நம்மையும் அழைக்கும்.
தடுமாறி விடக்கூடாது.
தடுமாறி தடம்மாறிவிட்டால் நாம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிடுவோம்.
சோம்பல் வரவிருந்த வாய்ப்புகளைக் கைநழுவிப் போக வைக்கும். .
சோம்பல் கனவுகளை உறங்கச் செய்யும்;
முயற்சி கனவுகளை நனவாக்கும்.
எனவே, வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் மனம் தளராமல் உழைப்போம்.
“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.”
— திருக்குறள்
தளராமல் உழைப்பவரை விதியும் ஒருநாள் வெற்றியின் பக்கம் திருப்பும்.
சோம்பித் திரியேல் என்பது ஒரு கட்டளை மட்டுமல்ல .வாழ்க்கையை வெற்றியாக மாற்ற வழிகாட்டும் விளக்கு.
சோம்பலைத் துரத்தி முயற்சி என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்து உற்சாகமாக உழைப்போம்.
சோம்பல் என்ற சொல்லோடு கொள்ளுங்கள் பிணக்கு.
உற்சாகமாக தொடங்கட்டும் உங்கள் வெற்றிக் கணக்கு.
வாழ்த்துகள்!
கருத்துகள்
கருத்துரையிடுக