இரட்டையர்களின் சிலேடைப் பாடல்

இரட்டையர்களின் சிலேடைப் பாடல் 


சொல்விளையாட்டு வெறுமனே விளையாடிவிட்டுப்
போவதற்கு அல்ல.
அடுத்தது என்ன...?அடுத்தது என்ன ?
என்ற ஒரு கேள்வியைத் கேட்க வைக்கும்.
அதற்கான விடையைத் தேட வைக்கும்.


திருத்தமுறச் சொல்ல வேண்டும் 
என்று சொற்களைச் சொல்லிப் பார்க்க
வைக்கும்.
தொடர்புடைய சொற்கள்,
குழப்பம் ஏற்படுத்த வைக்கும்
சொற்கள் எவை என்று தமிழ்ச் சொற்கள்
அத்தனையையும் அலசி ஆராய வைக்கும்.

இது விளையாடும்போது புரியாது.
விளையாடி முடித்த பின்னர்
எத்தனை புதிய சொற்கள் படித்திருக்கிறோம்
என்று வியக்க வைக்கும்.

ஒரே சொல்லுக்கு வேறுவேறு 
பொருள் உள்ள சொற்களையெல்லாம்
தேட வைக்கும்.
அவற்றைச் சொற்றொடர்களில்
அமைத்து சொற்றொடர்கள் எழுதும்
பயிற்சி களமாக இருக்கும்.

சாதாரண சொல் விளையாட்டில்
இத்தனை நன்மைகள் இருப்பதை 
அறியாமலேயே விளையாடியிருப்போம்.

சிலேடை என்று புரியாமலேயே
இலக்கணம் படித்திருக்கிறோம்.
புலமையை வளர்த்திருக்கிறோம்.
இந்தப் புலமை தாய்மொழியில்தான்
அதிகம்  இருக்கும் .

கேள்வியும் பதிலுமாக
அமைந்தப்  பாடல்கள் ஏராளமாகப்
பாடி விளையாடியிருப்போம்.

இத்தகையப் பாடல்கள் வெறும் விளையாட்டுக்காக
மட்டும் பாடப்பட்டவை அல்ல.
இலக்கிய நயத்தோடு பாடப்பட்ட பாடல்களும்
உண்டு.

இரண்டு பொருள்தரும் சொற்களைப்
பயன்படுத்திப் படிப்பவரை மகிழ்ச்சிப்படுத்தும்
சிலேடை பாடல்களும்  இத்தகைய வரிசையில்
நிறைய உண்டு.

சிலேடைப் பாடல்கள் என்றதும்
அனைவருக்கும் காளமேகப் புலவர் தான்
நினைவுக்கு வருவார்.

இவரைத் தவிர வேறு சில புலவர்கள்
இருந்தாலும் அவர்களுள் குறிப்பிடத்தக்க
சிறப்புக் கொண்டவர்கள்
இரட்டையர்கள் என்று
அழைக்கப்படும் இளஞ்சூரியன்,
முதுசூரியன் என்ற புலவர்கள் ஆவர்.

முதுசூரியனுக்குக் கண்பார்வை
கிடையாது.
இளஞ்சூரியனால்
நடக்க முடியாது.

முதுசூரியன் இளஞ்சுரியனைத்
தோளில் சுமந்தபடி எங்கும் 
எடுத்துச் செல்வார்.
இளஞ்சூரியன் வழிகாட்ட
முதுசூரியன் நடக்க என்று
இப்படியாக இவர்கள் பயணம்
இருக்கும். இருவரும் கவிபாடும்
திறன் பெற்றிருந்தனர். 


இவர்கள் பாடல்களில் உள்ள சிறப்பு 
என்னவென்றால்
ஒருவர் முதல் இரண்டு வரிகள் பாட
இரண்டாமவர் அடுத்த இரண்டு வரிகளையும்
பாடி பாடலை முடித்து விடுவார்.

முதலாமவர் என்ன வகைப் பாடல்
பாடியிருப்பாரோ அதே பாடலுக்கு
ஒத்துவருவதாகவே அடுத்தவரின்
பாடலும் இருக்கும்.

அவர்கள் பாடிய சிலேடைப் பாடல்
ஒன்று உங்களுக்காக....

"அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனை
தப்பினால் நம்மையது தப்பாதோ-இப்புவியில்
இக்கலிங்கம் போனாலென் னேகலிங்க மாமதுரை
சொக்கலிங்கம் உண்டே துணை "


ஒருநாள் இளஞ்சூரியனும் முதுசூரியனும்
வைகை ஆற்றிற்கு குளிக்கச் 
சென்றிருக்கின்றனர்.

அவர்களிடம் இருப்பதோ இரண்டு துணி.
ஒன்று உடுத்தியிருந்தால் மற்றொன்று
துவைத்துக் காயப் போட்டிருக்கும்.
இப்போது ஒன்று போய்விட்டால்.....
உடுத்த மாற்றுத் துணிக்கு எங்கே
போவது?
இதுதான் இவர்களது தற்போதைய நிலைமை.
அதுதான் இந்தப் பாடலின்
கருப்பொருள்.

ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது
திடீரென்று  நீர்வரத்து அதிகமாகிவிட்டது.
கண்தெரியாதவர் அது தெரியாமல் துணிகளைத்
துவைத்து பக்கத்தில் வைத்தார்.
துணி கை தவறி ஆற்றுநீரில் விழுந்துவிட்டது.
நீர்வரத்து அதிகமானதால் ஆற்றுநீர்
ஆடைகளை அடித்துச் சென்றுவிட்டது.
 காலில்லாதவர் நீரில் ஆடைகள்
 மிதந்து செல்வதைக் பார்க்கிறார்.
 அவரால் ஓடிச்சென்று ஆடைகளை எடுத்துவர
 முடியவில்லை.
 கண்ணில்லாதவரோ நீரில் கைகளைப் 
 போட்டுத் துழாவிக் கொண்டிருக்கிறார்.
 துணி கைகளில் அகப்படவில்லை.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த 
காலில்லாத புலவருக்கு துணி நீரோடு
போய்க்கொண்டிருக்கிறது.நீங்கள் 
தேடவேண்டாம்
என்று சொல்ல வேண்டும்.
உடனே,
 
"அப்பிலே  தோய்த்திட்டு  அடுத்தடுத்து நாமதனை
தப்பினால் நம்மையது தப்பாதோ-"
என்று நகைச்சுவையாகச்
சொல்லி துணி ஆற்றுநீரில்
போய்விட்டது என்று புரிய வைத்தார்.

" தண்ணீரிலே முழுவதுமாக நனைய வைத்து
 மறுபடியும் மறுபடியும் அதனை அடித்துத்
துவைத்தால் அந்தத் துணி நம்மைவிட்டு 
தப்பித்து ஓடத்தானே நினைக்கும்"
என்ற பொருளில் பாடல் இருந்தது.


கண்தெரியாத புலவர் நிலைமையைப்
புரிந்து கொண்டார். 
சிரிக்கும் நிலைமையில் அவரில்லை.
எனினும் பாடலில் இருந்த
நகைச்சுவையைப் புரிந்து கொண்டார்.

உடனே அவரும் சிரித்துக்கொண்டே, 

"....ஆனாலும் கந்தை அதிலுமோர்
ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ "
என்று நகைச்சுவையாகவே பதிலளித்தார்.

"கந்தைத் துணி.
அதில் ஆயிரம் ஓட்டைகள்.
துணிபோனால் துயரும் போச்சு
என்று நினைத்துக்கொள்வோம்
போகட்டும் விடு "என்று
சாதாரணமாக சொல்லிவிட்டார்.

அடுத்தவருக்கு  இந்தக் கருத்தில்
உடன்பாடு இல்லை.
கந்தை என்பதால் அப்படியே விட்டுவிடலாமா
என்ன? குளிருக்குப் போர்த்திக் 
கொள்ளவாவது உதவுமே
என்ற நினைப்பில்,
"கண்ணாயிரமுடைய கந்தையே யானாலும்
தண்ணார் குளிரையும் தாங்காதோ?"
என்று கேட்கிறார்.

ஆயிரம் ஓட்டை உள்ள கிழிந்த துணிதான்.
அதற்காக அப்படியே விட்டுவிடுவதா?
குளிருக்குப் போர்த்திக் கொள்ள உதவாதா
என்ன ?என்று கேட்கிறார் .

குளிரைத் தாங்கும் அதில் 
மாற்றுக்கருத்து இல்லை.
போய்விட்டது. இனி என்ன செய்துவிட
முடியும்?
நல்லது நடக்கும் என்று அடுத்தக்
கட்டத்தை நோக்கி நகர வேண்டியதுதான்.
என்று நினைத்த இளஞ்சூரியன்,
" இக்கலிங்கம் போனாலென் 
 ஏகலிங்க மாமதுரைச் 
 சொக்கலிங்கம் உண்டே துணை "
 என்று இறைவன்மீது நம்பிக்கை வைத்து
 பாடலை முடிக்கிறார்.

இக்கலிங்கம் என்றால் இந்தத் துணி
என்பது பொருள்.
இந்தத் துணி போனால் என்ன?
மதுரை சொக்கலிங்க நாதராகிய
 இறைவன் துணை நமக்கு உண்டு
என்று பதிலுரைக்கிறார்.

இவர் இப்படிப் பாடி முடிக்கவும்
துணி அலையில் அகப்பட்டு
மறுபடியும் இவர் கைக்கே வந்து
சேர்ந்தது என்பது வரலாறு.

நல்ல கேள்வி...நல்ல பதில்.
நன்றாக இருந்தது இல்லையா?

"இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்"
 என்றார் வள்ளுவர்.

துன்பம்வரும்போது கலங்காமல் சிரித்துக்கொள்ள
வேண்டும்.அத்துன்பத்தை எதிர்த்து
வெல்ல வல்லது அதைப் போன்றது வேறு 
ஒன்றுமில்லை .



















Comments

Popular Posts