இன்னா செய்யாமை என்னும் அறம்

இன்னா செய்யாமை என்னும் அறம்

முன்னுரை :

  "  தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும்"
என்பார் வள்ளுவர்.
தீயைவிட அச்சம் தருவது தீமை.
அச்சம் தரும் ஒரு செயலை செய்வது
நம்மையும் அச்சத்தோடு வாழும் நிலைமைக்குத்
தள்ளிவிடும்.தீயவை
தீமை தருவதால் தீயவற்றிலிருந்து
விலகியிருப்போம்.அதுதான் அறம்.
அதனைப்பற்றி
இக்கட்டுரையில் காண்போம்.


இன்னா என்றால் என்ன?

"எவற்றையெல்லாம் பிறர் 
உனக்குச் செய்யக்கூடாது
என்று நீ நினைக்கிறாயோ எவை எல்லாம்
உன்னை துன்பப்படுத்தும் என்று எண்ணுகிறாயோ
அவை எல்லாம் இன்னாததாகவே
கருதப்படும். உன்னைத் துன்பப்படுத்தும்
செயல் அடுத்தவரையும் துன்பப்படுத்தும்.
உன்னைக் காயப்படுத்தும் சொற்கள்
பிறரையும் காயப்படுத்தும்.
அவைதான் இன்னாதவை.
இன்னா செய்யாமை என்பது 
யாதொரு உயிர்க்கும் தீங்கு செய்யாதிருத்தல்
 என்பதாகும்.

பொறாமையின் வெளிப்பாடு:

இன்னா என்பது எதனுடைய வெளிப்பாடாக இருக்கும்
என்ற ஆய்வு மேற்கொண்டால்
பெரும்பாலும் அது பொறாமையின்
வெளிப்பாடு என்பதன்றி வேறொன்றுமில்லை.

"கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாற்றார் கோள் "
என்பது வள்ளுவர் கருத்து.
கறுத்தின்னா என்றால் பொறாமையால்
அல்லது சினத்தால்
தீங்கு விளைவித்தல் என்பதாகும்.
நமக்கு ஒருவர் தீமை செய்கிறார்
என்றால் அது பொறாமையின் வெளிப்பாடே தவிர
வேறொன்றுமில்லை.

 
இன்னா செய்பவை எவை?

இவையிவை எல்லாம்
 இன்னா செய்பவை என்று நாம்
 ஒரு வரையறை செய்து வைத்திருப்போம்.
 அவற்றிலிருந்து ஒதுங்கி வாழ
 வேண்டும் என்று கவனமாக இருப்போம்.
எவ்வளவு கவனமாக இருந்தாலும் 
சில நேரங்களில் நமக்குத்
தீமை நடந்து விடுகிறது. 
அது எப்படி சாத்தியமாயிற்று?
சிலவற்றை இன்னாதவை என்று நாம்
நினைத்திருக்க மாட்டோம். சிலரை இன்னா
செய்பவர் என்ற பட்டியலில் சேர்த்திருக்க
மாட்டோம்.பேச்சு இனிமையாக இருக்கும்.
ஆனால் அவரின் செயல் துன்பம் தருவதாக
இருக்கும்.
அதனால்தான் சில நேரங்களில் 
காரணமில்லாமல் துன்பப்பட
நேரிடுகிறது. நாம் எதிர்பாராதவை கூட
சில நேரங்களில் இன்னாதவையாக
இருக்கலாம்.

 அதனால்தான்,
 
"நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாஆம் இன்னா செயின்"
என்று சொல்லித் தருகிறார் வள்ளுவர்.

இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூட
கேடுவிளைவிக்கக் கூடியதாக இருந்தால்
அவை தீயவைகளாகவே கருதப்படும்.
நம்மைச் சார்ந்தவர்கள் செய்யும் செயல்
தீமை தருவதாக இருந்தால்
அதுவும் இன்னாததுதான் .
தீமை எந்த வடிவில் யாரிடமிருந்து
வந்தாலும் அவர் நமக்கு இன்னா செய்தவராகவே
கருதப்படுவார்.


தீமைக்குத் தீமை:

இன்னா செய்தவரைத் தண்டிக்க
வேண்டுமா?
அதற்கும் வழி சொல்லித் தருகிறார் வள்ளுவர்.
அது என்ன வழி என்று கேட்கிறீர்களா?
மிக எளிது.
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்"
என்று சொல்லிவிட்டார்.
நமக்குத் தீமை செய்தவனுக்கு நாம்
நன்மை செய்ய வேண்டுமா?
இது என்ன வேடிக்கை என்பதுபோல தோன்றும்.
அதுதான் நாம் அவருக்குக் கொடுக்கும்
சரியான தண்டனை.
நாம் செய்கிற நன்மையைக் கண்டு
அவர் மனம் நாணும்.
ஒவ்வொரு நாளும் கூனிக்குறுகிப் போவார்.
அந்த நாணமே அவரை மறுபடியும் 
அந்தத் தீமையைச் செய்யவிடாதபடி தடுக்கும்.
அதனால்  அவர் திருந்த
வாய்ப்பு இருக்கிறது என்பது வள்ளுவரின்
கணிப்பு.


முற்பகல் செய்யின்:

ஒருவர் நமக்குத் தீமை செய்துவிட்டார்
என்பதால் ஓடிப்போய் அவருக்குத் தீமை
செய்துவிட்டு வர வேண்டிய தேவையே இல்லை.
உப்பு செய்தவன் தண்ணீர் குடிப்பான்
என்பதுபோல தப்பு செய்தவன்
தண்டனை அனுபவித்தே தீருவான்.

"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்  தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்"

தீமை செய்தவர்க்கு தீமை தானாக
வந்து சேரும்.
எதற்கு நீங்களாக ஒரு தீமை
செய்துவிட்டு நானும் தீமை செய்தவன்
என்ற அவப்பெயரைப்
பெற்றுக் கொள்ள வேண்டும்?
பேசாமல் இருங்கள். தீமைக்குத்
தீமை தானாக நடக்கும் .
இன்னா செய்தவனுக்கு ஏதாவது
செய்ய வேண்டும் என்றால் நன்மை
செய்யுங்கள்.ஆனால் அவன் செய்த தீமைக்குத்
தக்க பலன் அவனை வந்தே தீரும்
என்பது வள்ளுவர் கருத்து.

அறிவினால் ஆகுவதுண்டோ?

தீமை செய்யலாமா என்று
யாரைக் கேட்டாலும் கூடாது 
என்பதுதான் பதிலாக இருக்கும்.
வள்ளுவரைக்கேட்டால் மாற்றுக் கருத்தா
இருக்கப் போகிறது?


அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை"

பிறர் துன்பத்தைத் தன்துன்பமாக பார்க்கும்
மனபக்குவம் இல்லாதவனுக்கு
அறிவால் என்ன பயன் 
கிடைத்துவிடும் போகிறது? 
என்ற கேள்வியை நம்முன் 
வைக்கிறார் வள்ளுவர்.
அதனால்,


"எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானும்
மாணா செய்யாமை நன்று"

எங்கும் எப்போதும் உங்கள் 
சொல்லிலும் செயலிலும் 
உண்மை இருக்க வேண்டும்.
உண்மை இருக்குமிடத்தில் தீமைக்கு
இடமிருக்காது.மனத்தால்கூட
தீமை பற்றிய சிந்தனை இல்லாதிருக்கட்டும்.
அதுதான்  அறம் என்கிறார் வள்ளுவர்.

முடிவுரை:

     இன்னா செய்யாமையை ஒரு அறமாகக்
கொண்டாடுபவர்வர்களையே உலகம் கொண்டாடும்.
நமது எண்ணமும் செயல்களும் எப்போதும்
பிறர்க்கு ஊறு விளைவிக்காததாகவே
இருக்கட்டும்.
நாமும் நம்மைச் சார்ந்தவர்களை மட்டும்
அல்லாது  பிற உயிர்களையும் நேசிப்போம்.
நேசிப்பைச் சுவாசிப்பவர்கள் இல்லத்தில்
இன்னா செய்யாமை என்னும் அறம்
இனிமையாய்  குடியிருக்கும்.

 


Comments

Popular Posts