பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்.....

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்......"பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து"

                           குறள் :     1018

பிறர் - அடுத்தவர்
நாணத்தக்கது - வெட்கப்படத் தக்கது
தான் - அவன்
நாணான் - வெட்கப்பட மாட்டான்
ஆயின்- ஆனால்
அறம் - அறக்கடவுள்,நற்செயல்
நாணத்தக்கது -வெட்கப்பட்டு நீங்கி
உடைத்து- செல்லத் தக்கது


ஒருவன் பிறர் வெட்கப்படத் தக்க 
செயலைச் செய்துவிட்டு
தான் வெட்கப்பாடாது இருப்பானாயின்
அந்த அறமே அவனிடமிருந்து 
வெட்கப்பட்டு நீங்கிச் செல்லும்.


விளக்கம் :

பார்ப்பவர்,கேட்பவர் அனைவரும்
ஒருவன் செய்யும் செயலைப் பார்த்து
நாணி தலை குனிந்து நிற்கின்றனர்.
ஆனால் செய்தவனுக்கு அதைப் பற்றிய
எந்தக் குற்ற உணர்வும் இல்லை.
இப்படிப்பட்ட செயலைச் செய்து விட்டோமே
என்ற அச்சமும் இல்லை.
நாணமும் இல்லை.
பிறர் பழியென்று நினைக்கிற காரியத்தை
எந்தவித கூச்சமும் இல்லாது 
திரும்பத் திரும்ப 
செய்து கொண்டிருக்கிறான்.

இவனை நாம் என்ன செய்துவிட
முடியும்?
"துஷ்டனைக் கண்டால் தூர விலகு"
என்பதுபோல
எந்தவித  நாணமும் இல்லாமல் தவறான
செயல்களைச் செய்பவனைக் கண்டு
நாம்தான்  ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
வேறு வழியில்லை.
இப்படி நாம் அவனிடமிருந்து
ஒதுங்கிக்  கொள்வது 
இயல்பாக நடக்கிற ஒரு செயல்.

ஆனால் இவனுடைய இந்த
நாணாமை என்னும் தீய ஒழுக்கத்திற்காகவே
அறம் அவன் பக்கம் திரும்பிப்
பார்க்காதாம்.
பிறர் நாணும் செயலை
நாணாது செய்து கொண்டிருப்பவனைக்
கண்டால் அறத்திற்கே நாணம்
வந்துவிடும். அதனால்
அறம் அவனைச் சாராது ஒதுங்கிச்
சென்றுவிடுமாம்.
அதாவது இப்படிப்பட்ட பண்பு
உள்ளவர்களிடம் அறத்தை எதிர்பார்க்க
முடியாது. அவர்களுடைய செயல்
அறம் இல்லாததாகவே இருக்கும்.

இதைத்தான் வள்ளுவர்,
"உலகம் பழி என்று நினைக்கிற செயலைச்
செய்ய நீ நாணாவிடில்
அறம் உன்னைக் கண்டு நாணி
விலகி ஓடி விடும் "என்கிறார் .
 

English couplet :

"Though know'st no shame while all around ashamed must be;
Virtue will shrink away ashamed of thee"


Explanation :

Virtue is like to forsake him who shamelessly
does what others are ashamed of.


Transliteration :

"Pirarnaanath Thakkadhu Thaannaanaa Naayin
Aramnaanath Thakkadhu Utaiththu"


Comments

Popular Posts