தத்தித்தா தூதுதி தாதூதி....

தத்தித்தா தூதுதி தாதூதி....


கார்மேகம் திரண்டால்
மழை கொட்டும்.
காளமேகம் வந்தால்
கவி மழைப்  பொழியும்.

எதைப் பார்த்தாலும் பாடல்.
எந்தச் சொல்லைக் கொடுத்தாலும்
கருத்தோடு பாடல் துள்ளி வந்து
முன் நிற்கும். இதுதான் காளமேகம்.


சொல் இருந்தால்தானே பாடல்
எழுதமுடியும்? என்று
வெறும் எழுத்தைக் கொடுத்துப் 
பார்த்து வேடிக்கைப் பார்க்க 
நினைத்தனர் சிலர்.
அட போங்கைய்யா...
எழுத்தை வைத்துத்தானே உங்களுக்குப்
பாடல் வேண்டும்.
தகர வரிசையில் பாடட்டுமா?
இதோ பெற்றுக் கொள்ளுங்கள் என்று
பாடி நம் கரங்களில் தந்துவிட்டார்.

தத்தித்தா தூதுதி தாதூதித்
தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா
தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது
தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

 என்று முற்றிலும் தகர
 வருக்கத்தில் எழுதி
 ஊதித் தள்ளிவிட்டுப் 
 போய்விட்டார் காளமேகம்.

சும்மா தத்தித்தா.....
தித்தித்தா என்று சொல்லி விட்டால்
நீரென்ன பெரிய ஆள் என்று
நினைத்துவிடுவோமா என்ன?

பொருள் வேணுமைய்யா....பொருள்.
நின்று சொல்லி விட்டுப்
போவும் என்று காளமேகத்தை
நிறுத்திக் கேட்க...

பொருள் தானே வேண்டும்.
இந்தக் காளமேகத்தின் பாடலில்
பொருளில்லாமலா?
தித்திக்கத் தித்திக்கத்
திவட்டாமல் தருகிறேன்.
நில்லும் ஐயா,
நின்று கேட்டுவிட்டுப் போவும்
என்று நம் கையைப் பிடித்து இழுத்து
நிறுத்திக் கேட்க வைக்கிறார் 
காளமேகம்.

அப்படி என்னதான் சொல்கிறார்?
கேட்டுதான் பார்ப்போமே.
கேட்டுவிட்டுப் பாடலில் பிழை
இருந்தால் மடக்கிப் பிடித்து விடுவோம்.
வாருங்கள்.

தத்தி- பறந்து சென்று
தாது- பூவில் இருக்கும் தேனை
ஊதூதி -உறிஞ்சுகிறாய்
தாது ஊதி- பூவிலுள்ள தேனை உண்ட பின்னர்
தத்துதி - மீண்டும் பறந்து  அடுத்த மலருக்குச்
                    செல்கிறாய்
துத்தி-மலரில் உள்ள தேனை
துதைதி - நெருங்கி
துதைத்து- மிகவும் நெருங்கி
ஆ தாதூதி - அந்தத் தேனை உண்டு வருகிறாய்
தித்தித்தது- இப்படி உண்ட
                        தேன் இனிப்பாக இருந்திருக்கும்


இத் தித்தித்த - இந்தத் தித்திப்பான 
தாது எது?-  தேன் எது?
தித்தத்தது- மிகுதியும் தித்திப்பாக இருந்தது

எத்தாதோ- எந்த மலரின் தேன் துளியோ?

தித்தத்தது யாது-அவ்வாறு தித்தித்தமைக்குக்
                                   காரணம்தான் யாதோ?


இதுதான் பொருள்.
பொருள் புரிந்ததா?

புரிந்தது....புரிந்தது.
விளக்கம் வேண்டாமா?
என்று கேட்கிறீர்களா?

இதோ காளமேகமே விளக்குகிறார்
கேளுங்கள்.

"தத்தித் தாவி மலருக்கு மலர்
பறந்து சென்று பூக்களில் இருக்கும்
தேனை உண்டு வரும் வண்டே!

நில். என் கேள்விக்குப் பதில் 
சொல்லிவிட்டுப் போ.

ஒரு பூவிலிருக்கும் தேனை உண்டிருக்கிறாய்.
அதோடு நில்லாது மறுபடியும் 
இன்னொரு பூவில் அமர்ந்து தேன்
உண்கிறாய்.

இப்படி பூவுக்குப் பூ மாறி மாறி
அமர்ந்து தேன் உண்கிறாயே!
நீ உண்டு வந்த தேன் எல்லாம்
ஒரே சுவையில்தான் இருந்ததா?

இல்லை வெவ்வேறு சுவை 
கொண்டதாக இருந்ததா?

வெவ்வேறு சுவை உள்ளதாக
இருந்தது என்றால் எந்தப் பூவிலிருந்து
எடுத்து உண்ட தேன் மிகுதியான
இனிமையுடையதாக இருந்தது?
சொல் "
என்பது பாடலின் விளக்கம்.

நியாயமான கேள்வி.
சரியான விளக்கம்.

எழுத்தைப் புரட்டிப் போட்டு
வண்டைப் பார்த்துக் கேள்விக் கேட்டு,
ஆமால்ல.....சரியாகத்தான்
கேள்வி கேட்டிருக்கிறார் 
காளமேகம் என்று
நம்மையும் ஒத்துக்கொள்ள
வைத்திருக்கிறார் .
இதுதாங்க காளமேகம்.

தகர வரிசை தடுமாறி கிடைக்கிறதோ
என்று தடுமாற வைத்தப் பாடலில்
தித்தித்தது எதுவோ?
சிந்திக்க வைத்தப் பொருளோ?
சிதறிக் கிடக்கும் எழுத்து 
நலனோ ?
பாவோ? பாவிடையூடிய
கவித்தாதோ? என்று 
கேட்க வைத்துவிட்டார் காளமேகம்.

தித்தத்தது எதுவோ?....



                    







Comments

Popular Posts