அம்மா

அம்மா

" தாயின்  மடியில்  தலை வைத்திருந்தால் 
   துயரம் தெரிவதில்லை

   தாயின் வடிவில்
    தெய்வத்தைத் கண்டால்
    வேறொரு தெய்வமில்லை"

 எவ்வளவு அனுபவப் பூர்வமாக 
 உணர்ந்து கண்ணதாசன் எழுதியிருக்கிறார்
 பாருங்கள்.
.

அம்மாவின் மடி:
 
 துயரங்களுக்கு ஒரே மருந்து அம்மா.
எத்தனை துயரங்கள் இருந்தாலும்
தாயின் மடியில் படுத்த அடுத்த கணம்
அவை அத்தனையும்   
காணாமல் போய்விடும்  .அம்மாவின்
மடிதான் அனைவருக்கும்
சொர்க்கம்.
அம்மா வருடிக் கொடுத்த அந்த  நாட்கள்
 கவலையில்லா பேரின்ப நாட்கள்.
 எத்தனை வயதானாலும்..எவ்வளவு 
 தொலைவில் இருந்தாலும் அம்மாவின்
 அன்பிற்காக...அம்மாவின் அரவணைப்புக்காக 
 அனைவர் உள்ளமும் ஏங்கும்.
 இதுதான் உண்மை. 
 உண்மையைத் தவிர வேறு ஒன்றுமில்லை.
 அம்மாவின் மடி ஆறுதலும்
 தேறுதலும் தந்து பேசா வார்த்தை எல்லாம்
 பேசும்.பேசாமலேயே பேரின்பம் தரும்.
    
 எல்லைக்கோடு வரைய முடியா 
 அன்புக்காரி அம்மா:
 
  "தாயிற் சிறந்த கோவிலுமில்லை.
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
    ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
    அன்னை தந்தையே அன்பின் எல்லை"
    
  அம்மாவின் அன்பிற்கு முன்னால்
 எதுவும் ஈடில்லை.
 ஈடு இணையற்ற அந்த அன்பிற்காக
 ஏங்காத உயிரில்லை.
 பங்குபோட முடியாத விட்டுக்கொடுக்க
முடியாத அந்த அன்புக்காக
ஏங்காத நாட்களில்லை.
காலக்கோடு வரைந்து வைத்த 
 கோலப் பேரழகி அம்மா.
 எல்லைக்கோடு வரைய முடியா
அன்பிற்குச் சொந்தக்காரி அம்மா.

அம்மாவின் அரவணைப்பு:

தாயின் அரவணைப்பில்தான் 
உண்மையான பாதுகாப்பு கிடைக்கும்
என்பது அறிவியல் பூர்வமாக 
நிரூபிக்கப்பட்ட உண்மை.
அதனால்தான் வீல் வீல் என்று 
கத்திக்கொண்டிருக்கும் குழந்தை அம்மா 
தொட்டுத் தூக்கி தோளில் போட்டுத் 
தட்டிக் கொடுத்ததும் அப்படியே 
அடங்கிப் போய்விடுகிறது.
என் அம்மா வந்தாயிற்று .
இனி எனக்கு   என்ன? 
என்பது போன்ற  உணர்வு
அமைதி கொள்ளச் செய்கிறது.
பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கிறது 
 முதல் அரவணைப்பு ஒரு குழந்தைக்கு 
 அம்மாவிடமிருந்துதான் கிடைக்கிறது.
அந்த அரவணைப்புதான் இன்றுவரை 
நம்மை அம்மாவோடு கட்டி போட்டிருக்கிறது.
இன்றும்கூட   எப்போதெல்லாம் 
பாதுகாப்பு இல்லாதது போன்று உணர்கிறோமோ 
 அப்போதெல்லாம் மனம் அம்மாவைத் தேடும்.
 என் அம்மா பக்கத்தில் இருந்திருந்தால்
எனக்கு இதெல்லாம் நடந்திருக்காது 
என்று சொல்லி புலம்ப வைக்கும்.
அம்மாவின் அரவணைப்பிலேயே
காலமெல்லாம் கண்மூடிக் கிடக்க
வேண்டும் என்று  ஏங்க வைக்கும்.
  .
  அம்மா என்றால் தெம்பு :
   
  சிறுபிள்ளையாய் இருக்கும்போது 
  அண்ணனை அடித்துவிட்டு அம்மாவின் 
  முந்தானைக்குப் பின்னால் போய் 
  ஒளிந்து கொள்வோம்.
  மெதுவாக அண்ணனை எட்டிப் பார்த்து
   இப்போ என்ன செய்யுவ...இப்போ என்ன 
   செய்யுவ...என்று நக்கலாக சிரித்திருப்போம்.
   அம்மா தன்னை எப்படியாவது 
   அடிபட விடாமல் காப்பாற்றிவிடுவார் 
   என்ற நம்பிக்கையில் தான் இந்த நக்கல் ...
   நையாண்டி ...  எல்லாம் நடக்கும்.
   வெளியில் குறும்பு செய்துவிட்டு  
   ஓடிவந்து அம்மாவின் மடியில் 
   பாதுகாப்பு தேடிக் கொள்வோம்.
   அம்மா கூட இருந்தாலே போதும்.
   ஏதோ ஒரு புதுத் தெம்பு வந்து
   ஒட்டிக்கொள்ளும்.பயமில்லா உணர்வு.
 தெம்புடன் பேச வைக்கும். திமிராக
நடக்க வைக்கும்.
   
  அம்மா என்றால் சுகந்தம்:

கண்டாங்கியில் கட்டிய தூலிகையில் 
 துயில் கொள்ளும்போது கிடைத்த நிம்மதி 
 வேறெங்கும் கிடைப்பதில்லை.
 தூலிகைக்கு இணையான மாளிகை 
 இதுவரை எங்கும் கட்டப்பட்டதாக 
 சரித்திரம் இல்லை.
 நிம்மதியாக நம்மை தூங்க வைத்து 
 அழகு பார்த்த மாளிகை  அதன் வாசம்
 இன்றுவரை நம்மைக் கிறங்கடித்துக்
 கொண்டிருக்கும். அவரவருக்கு அவரவர்
 அம்மாவின் கண்டாங்கி வாசனை
 பேரின்பம் தரும். குளிரில் போர்வையைப்
 போட்டுப் போர்த்திக் கொண்டாலும்
 கூடவே அம்மாவின் கண்டாங்கியோடு
 படுத்தால்தான் இன்றும் 
சுகமான தூக்கம் வரும்.
 அம்மாவின் சுகந்தம் அள்ளித்தரும்
 பேரானந்தம்.
 

  முதற் பேராசிரியை அம்மா:
   
   மொழியை எத்தனையோ 
   பேரிடம் கற்றிருப்போம்.
   ஆனால் அம்மா சொல்லு ...அம்மா சொல்லு...
   என்று முதன்முதலாக நம்மை அம்மா  ...அம்மா 
 என்று நம் தாய்மொழியில் பேச வைத்து 
   அழகு பார்த்தவர் அம்மா.
   தாய் கற்றுத் தந்ததுதான்  தாய்மொழி.
  நம் உணர்வோடு உயிரோடு
 உதிரத்தோடு கலந்த மொழி .
  அம்மா சொல்லு...அப்பா சொல்லு...
  ஆயா சொல்லு என்று ஆயிரம்முறை 
 நம் அம்மா வாயிலிருந்து கேட்டமொழி தாய்மொழி.
தலைமுறை தலைமுறையாக
தொடரும் மொழி.
 மொழிப்பாடம் கற்றுத் தந்த 
முதல் பேராசிரியை அம்மா.
    
 தரம் பிரிக்க முடியாதவர் அம்மா:
    
அம்மாவின் மதிப்பு அறுதியிட்டுச்
சொல்ல முடியாதது.
மதிப்பிட முடியாப்  பொருள் 
உலகில் உண்டென்றால்
அது அம்மா மட்டும்தான்..
அம்மாவை ஒன்றாம் தரம் என் அம்மா.
இரண்டாம்தரம் என் அம்மா 
மூன்றாம் தரம் என் அம்மா என்று
தரம் பிரித்து மதிப்பீடு செய்துவிட முடியாது.

உலகில் முதன்மையானது எது
 என்று நபிகள் நாயகத்திடம் 
 கேட்கப்பட்டதாம்.
 " தாய் "என்றாராம் நபிகள் நாயகம்.
 
"   இரண்டாவதாகக் 
   கருதப்படுவது எது?" என்று மற்றுமொரு கேள்வி கேட்கப்பட்டது.
   
    அதற்கும் "தாய் "என்ற
    பதிலே நபிகள் நாயகத்திடமிருந்து
    வந்ததாம்.
    
கேள்வி கேட்டவர் மறுபடியும் விடாமல் 
"மூன்றாவதாக கருதப்படுவது எது?
"என்று கேட்டார்.

 இப்போதும் நபிகள் நாயகம் 
 "தாய்" என்றே கூறினாராம்.
 
அதெப்படி ?
எல்லாவற்றிற்கும் தாய் ஒன்றை
பதிலே இருக்க முடியும்? என்றார் கேள்வி கேட்டவர்.

முதலாவது ....இரண்டாவது ...மூன்றாவது...
என்று தரம் பிரித்துப் பார்க்கத் 
தக்கவர் அல்லர் அம்மா.
என்றென்றும் ஒரே தரம். முதல் தரம். 
 உயர்தரம் .ஒப்புவமையற்ற தரம்  . 
 அவர்தான் அம்மா "என்றாராம்
  நபிகள் நாயகம்.
   தரம் பிரித்து மதிப்பீடு செய்துவிட முடியாதவர் அம்மா.

      
 உயிருக்கு உயிரானவர் அம்மா: 
    
   உயிரைத் தந்தவர் அம்மா.
   உயிராய் இருப்பவர் அம்மா.
   உயிருக்கு உயிரானவர் அம்மா.
   நமக்கு ஒன்றென்றால் உயிராய்த்
   துடிப்பவர் அம்மா.
   உயிராய் நம்மோடு இருப்பதனால்
   அவர் மதிப்பு பல நேரங்களில் நமக்கு தெரியாமல் போய்விடுகிறது,.
உயிராய் உணர்வாய் உதிரமாய்
நம்மோடு பிரிக்க முடியாதபடி
இரண்டறக் கலந்திருப்பவர்   அம்மா.

அம்மா ஓர் அபூர்வ ராகம்:

அம்மா ஓர் இனிமை தரு இசை.
 அசையா நம்மை இசைய வைக்கும் இன்ப ராகம்.

அம்மாவின் எண்ணம் எல்லாம்
பிள்ளைகளைச். சுற்றிச் சுற்றியே இருக்கும்,
இருபத்துநான்கு மணி நேரமும் அவர்
நினைவில் நாம் மட்டும் தான் 
இருப்போம்.
நமது வளர்ச்சி ,உயர்வு 
நகர்வு ஒவ்வொன்றையும்
உள்ளுக்குள்ளேயே வைத்து 
அழகு பார்த்து உவகை கொள்பவர்
அம்மா. அம்மாவின் எண்ணத்தில் 
உருவாக்கப்பட்ட 
கைவண்ணமாகத்தான் நாம் 
மாறியிருப்போம்.நம்மை உருவாக்கிய
நல்லதோர் கலைஞர் நம் அம்மா.

தாங்க வேண்டியவர் அம்மா:

அம்மாவின் இருப்பு பலருக்கு 
அடையாளமாகத் தெரிவதில்லை.
  எளிதாக கிடைக்கும் எந்த பொருளும் 
  பெரிதாக மதிக்கப்படுவதில்லை.
 அதனால்தானோ என்னவோ அம்மாவின்
 அன்பும் இருப்பும்
 பெரிதாகக் கவனிக்கப்படுவதில்லை.
கையை விட்டு போனபின்னே அம்மாடியோவ்..
ஆத்தாடியோவ்..என்று வாயிலும் வயிற்றிலும் 
அடித்துக் கொள்கிறோம்.
 வயது முதிர்ந்தபோது சும்மா கெட 
 என்று கிடப்பிலேயே போடப்பட்டவர் அம்மா.
  சும்மா கிடப்பில் போடப்பட 
  வேண்டிய பொருளல்ல அம்மா.
  எம்மோ... எம்மோ ...என்று ஏந்தி முகம்  
  பார்த்து தாங்கப்பட வேண்டியவர் அம்மா.
  
  நாள்தோறும் அன்னையர் தினம் :
   வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்பட 
 வேண்டியவர் அல்லர் அம்மா.
 நாளும் கொண்டாடப்பட வேண்டியவர் அம்மா.
 இது நம் உயிருக்கான கொண்டாட்டம்.
 நம் பிறப்புக்கான கொண்டாட்டம். 
 நம் பாசத்திற்கான கொண்டாட்டம்.
 நம் நிம்மதியின் கொண்டாட்டம்.
 நம் உதிரத்தின் கொண்டாட்டம்.
 நம் வாழ்வின் கொண்டாட்டம்.
 நம் மகிழ்ச்சியின் தேரோட்டம்.
 
 அம்மாவுக்கான கொண்டாட்டத்தை 
 ஆண்டுக்கு ஒருமுறை வாழ்த்துச் 
 சொல்லும் ஒற்றைச்  சொல்லுக்குள் 
 முடக்கிப் போட்டுவிடாதீர்கள்.
  
  அன்னையின் அரவணைப்பில் 
  அவரோடு இணைந்திருப்போம்.
  அவரோடு மகிழ்ந்திருப்போம்.
    அன்னையில்லா இல்லம்
  அழகில்லாச் சித்திரம் 
  அதனை அறிந்திருப்போம்.
  அன்னையே ஆருயிர் 
  என்பதை உணர்ந்திருப்போம்.
 ஆருயிரைப் பிரித்து வைத்து
  வெற்றுடலாய் வாழும் வாழ்க்கையை
  அனுமதியோம் என உறுதி ஏற்போம்!

அனைவருக்கும் அன்னையர் தின
நல்ல வாழ்த்துகள்!
   

👍             👍             👍          👍        👍        👍   👍         👍    👍   👍

Comments

  1. அம்மா என்ற ஒற்றை சொல்லுக்கு தந்த விளக்கங்கள் மிக அருமை.வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment