பால்கார பாலம்ம
பால்கார பாலம்ம
"பாலம்மக்கோ ....பாலம்மக்கோ...."
கதவைத் தட்டினாள் அன்னப்பழம்.
"யாரு....செத்தப் பொறு....
நான் வளவுல மாட்டுக்குத்
தீவனம் போட்டுட்டு நிற்கேன்"
உரக்கக் கத்தினார் பாலம்ம.
"ஒரு அவசரம்க்கோ....ஒரு தம்ளர்
பால் வேணும்"
"வருகிறேன் இரு "என்று குரல்
கொடுத்தார் பாலம்ம.
கேட்டதும் திண்ணையில் கையில்
கொண்டுவந்த லோட்டாவோடு
அப்படியே உட்கார்ந்தார்
அன்னப்பழம்.
சற்று நேரத்திற்கெல்லாம்
வீட்டிற்குள் இருந்து வந்த
பாலம்ம..."என்ன அன்னப்பழம்
மணி நாலு தான் ஆவது
அதுக்குள்ள கையில்
லோட்டாவோடு வந்துருக்கா?"
என்று கையை தோள் சீலையில்
துடைத்தபடியே பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"அது ஒண்ணுமில்லக்கோ....வீட்டுக்கு
விருந்துக்காரவுக வந்துருக்காவ..."
"யாரு உன் சம்பந்தி வூட்டுக்காரவுகளா?"
"அதுகள் நம்ம வீட்டுக்கெல்லாம்
வருமா? அதுகளோடு உறவ முறிச்சி
ஆறு மாசம் ஆகுது. ஒரு பேச்சு
வார்த்தை இல்லை.."
"அப்புறம் வேறு யாரு வந்திருக்காவ..?"
"எங்க சின்னையா மகன்.
இந்தப்பக்கம் ஒரு சோலியா வந்தாவளாம்.
அதுதான் நம்ம அன்னப்பழத்தையும்
ஒரு எட்டு பார்த்துட்டுப் போவணுன்னு வந்தாவ"
'ஓ...அந்த தொரப்பூரு தம்பியா...
பார்த்து நாளாச்சு.
நல்லா இருக்காவ இல்லியா.?"
"அவியளுக்கு என்ன?
தண்ணீ வத்தாத தோட்டம்.
பூவுக்கு நாப்பது கோட்ட
நெல்லு...செலவுக்கு வாழை
அது இதுன்னு
நல்ல வருமானம்..."
"வந்த உடனே போவணுங்காவளாக்கும்"
"அவியள ராத்தங்கிட்டு நாளைக்கு
காலையில் போங்கன்னேன்.
கேட்க மாட்டேன்னுட்டாவ. அஞ்சர பஸ்சுக்குப்
போகணுமின்னு ஒத்த காலால் நிற்காவ...
போறேன்னு பிடிவாதம் பிடிக்கவுகள பிடிச்சு
கட்டியா போட முடியும்.?
அதுதான் ஒருவாய் காப்பித்தண்ணியாவது
கொடுத்து விடலாம்ன்னு அவுகள இருக்க வச்சுட்டு
உங்க கிட்ட பால் வாங்கிட்டுப்
போகலாம்னு வந்தேன்."
என்று வந்த கதையை ஒன்றுவிடாமல்
ஒப்பித்தார் அன்னப்பழம்.
"பாலு நால்ரைக்கே எப்படி
கறக்க முடியும்?
இப்பத்தான் மாட்டுக்கு புண்ணாக்கு தண்ணி
வச்சிருக்கேன். ஒரு அரைமணி தேரமாவது
ஆகாண்டாமா?
அப்பத்தான கூட ஆழாக்கு பால் கறக்க
முடியும்.
இப்ப கறந்தேன்னா கன்று குட்டிக்கு கூட
பால் காணாது."எதார்த்தமாகப் பதில்
சொன்னார் பாலம்ம.
" ஒத்த மாடுதான் பால்
கறக்குதாக்கோ.
இன்னொரு மாடும் ஈனிருக்குன்னு
சொன்னாவ"
"ஈனிருச்சு.... ஈனிருச்சு...
அந்த வயித்தெரிச்சல ஏன் கேட்க?
ஈனுன ஒரு மாசத்துக்குள்ள கன்று குட்டி
செத்துப் போச்சு"
"அட பாவமே....
அப்புறம் அந்தப் பசுவுல பால் கறக்கலியா?"
"கன்று குட்டி இல்லாம
எப்படிலா பால் கறக்க முடியும்?"
"உங்களுக்குத் தெரியாதாக்கா....
கீழத்தெரு சுப்பையா
பொண்டிட்டி கன்றுக்குட்டி
செத்த பிறகும் பால் கறக்குறாவள....."
"குட்டி செத்த பிறகு பசு பாலு இறக்காது
அப்புறம் எப்படி பால் கறக்க முடியும்?"
"செத்த கன்னுக்குட்டி தோலை எடுத்து
வயித்துக்குள்ள வைக்கோல வச்சு
கன்னுக்குட்டி மாதிரியே செஞ்சி
வச்சுருக்காவ...."
"அட பாவி மக்கா.....அப்புறம்"
"அப்புறம் என்ன....பாலு கறப்பதற்கு
கொஞ்சம் தேரத்திற்கு முன்ன
வைக்கோல் கன்றுக் குட்டியை
பசுவுக்கு முன்னால போட்டுருறாவ...
அப்புறம் அந்தப் பசு அந்த வைக்கோல்
கன்றுக்குட்டிய தன் குட்டின்னு நினைச்சி
நக்கிக் கிட்டே இருக்குமாம்.
பசுவு மடுவுல பால் தன்னாலே
இறங்கிவிடுமாம்."
"சீ.... இதெல்லாம் ஒரு பொழப்பு.....
பாவமில்லியா....பசுவ ஏமாத்திப்
பால் கறந்து அப்புடி
சம்பாதிக்கணுமாக்கும்?"
"அந்தப் பசுவை பால் கறந்துதானே
வீட்டுத் கதை ஓடுதுன்னு பெருசா
பீத்திகிட்டு திரியுதா?
"ஏன்....நாலு தோட்டத்தில களை வெட்டப்
போனால் வீட்டுக்குக் கதை
ஓடாதோ?...பச்சை பிள்ள வயித்துல அடிச்சி சம்பாதிக்கணுமா?"
"வேலைக்கும் போறா....
களை பறிக்க போறா...
கஆணஆததற்கஉ நாலு ஆட்டுக்குட்டிய வாங்கிப்
போட்டு வளக்குறா....நூறுநாள்
வேலைக்குப் போறா...."
"அதெல்லாம் வயித்துக்கு காணாதாக்கும்.... எப்படியும் சம்பாதிச்சிட்டு போட்டு.
ஒரு பசுவுக்க கண்ணீருல பால் கறந்து சம்பாதிக்கணுமாக்கும்?"
"அப்படி இப்படின்னு சம்பாத்தியம் பண்ணுறதுனால
தான் கையியில நாலு காசு வச்சுருக்கா.
நானும் தட்டுமுட்டுச்சுன்னா
ஒரு ஆயிரம் இரண்டாயிரம்
அவள் கையிலதான்
வட்டிக்கு வாங்குவேன்."
"வட்டி வேறயா"
"சும்மா தர மாட்டாவ .கையில்
காதுல கிடப்பதை கழற்றி
அடமானத்துக்குக் கொடுத்தால்தான்
பணம் தருவாவ"
"பணம் பணம்ன்னு சாவுறாளாக்கும்.
முதல அந்த பசுவுல பால்
கறக்குறத நிப்பாட்டச் சொல்லு....
அந்த வாயில்லா ஜீவன
ஏமாத்த பிடாது..."
பால் வியாபாரம் பண்ணுனாலும்
ஒரு ஞாயம் இருக்கணும்.
தண்ணி ஊத்துறது....கன்றுக்குட்டிக்கு
பால் இல்லாம மொத்த பாலையும்
கறந்து விக்கறது இதெல்லாம்
குடும்பத்துக்கு சாபம்."
ம்..ஆ....தொழுவத்திலிருந்து கன்று குரல்
கொடுக்க ஆரம்பித்தது
"என் கிடாரிக்கு வயிறு பசிச்சுட்டு...
கூப்பிடுது.....
போய் அவுத்துவிட்டுட்டு உனக்கும்
பால் கறந்துட்டு வாறேன்" என்றபடி தொழுவத்தில் நோக்கி நடக்க ஆரம்பித்தார் பாலம்ம.
அதற்குள் கிடாரி மறுபடியும்
ம்ஆஆ....என்று குரல் கொடுக்க...".இன்னா...வந்துந்துட்டேன்டா
தங்கம் "என்றபடி
நடந்தார் பாலம்ம.
அந்த நடையில் ஒரு தாயின்
கரிசனம் தெரிந்தது.
"பாசக்கார பால்காரி...."என்று சிரித்தபடி
பாலம்ம போவதையே பெருமிதத்தோடு பார்த்துக்
கொண்டிருந்தார் அன்னப்பழம்.
சிறுகதை மிக அருமை.
ReplyDelete