நில்லாய் நெடுஞ்சுவரே

நில்லாய் நெடுஞ்சுவரே 


"ஒரு சொல் வெல்லும்;

ஒருசொல் கொல்லும் "என்று சொல்வார்கள்.

சொல்லுக்கு அவ்வளவு பெரிய ஆற்றல்

உண்டு.

அதுவும் புலவர்களின் சொல்லுக்குப் பேராற்றல் உண்டு.

அதனால்தான் காளமேகம் மண்மாரிப் பொழியட்டும் என்றதும் மண்மாரிப் பொழிந்ததாகப் படித்திருக்கிறோம்.

புலவர்கள் அறம்பாடி அழித்த 

வரலாறுகளும் உண்டு.


இங்கு ஒருவர் தன் சொல்லால்

நெடுஞ்சுவரேயே நிற்க வைத்து விட்டாராம்.

யாரப்பா அந்தப் பேராற்றலுக்குக்குரிய

பெரும்புலவர் என்று அறிய ஆவலாக

உள்ளதல்லவா?


சோழ மன்னன்னோடு ஏற்பட்ட

மாறுபாட்டால்

மன்னனும் நீயோ

வளநாடு முன்னதோ

உன்னை நினைத்தோ

தமிழை யோதினேன்

என்று கோபமாகப் பேசிவிட்டு சோழ நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்

கம்பர்.

ஏதோ கோபத்தில் வெளியே வந்துவிட்டார்.

வந்த பின்னர்தான் எங்கே செல்வது?

யாரிடம் போய் நிற்பது?

என்று கம்பருக்கு ஒன்றும் புரியவில்லை.

கால் போன போக்கில் நடக்கிறார்.


எவ்வளவு தூரம் நடப்பது?

இப்போது வயிறு மெதுவாகக் குரல்

கொடுக்க ஆரம்பித்தது.

வயிற்றுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.

அதற்கு கம்பர் மட்டும் விதிவிலக்கா என்ன?


அதற்காக யாரிடமாவது இரந்து

பொருள் பெற முடியுமா?

அது தன்மானத்திற்கு இழுக்கல்லவா?

உழைக்காமல் உணவு பெற

மனம் இடம் கொடுக்கவில்லை.


பாடல் பாடிப் பொருள் பெறலாம் என்றால்

புலமை உள்ளவர்கள் இருக்க வேண்டுமே.

பாடலின் மதிப்பே தெரியாதவர்களிடம் 

பாடி என்ன பயன்?

புலமை உள்ளவர்கள் யாரும் 

இருப்பதாகத் தெரியவில்லை.


கம்பருக்கு இப்போதிருக்கும் ஒரே வழி

வேலை செய்வதுதான்.

என்ன வேலை செய்வது?

யாரிடம் போய் வேலை கேட்பது?

அப்படியொரு கேள்வி மறுபடியும் வந்து

முன் நிற்க எதிரே வரும் ஒரு சிலரிடம் வேலை கேட்டுப் பார்க்கிறார் கம்பர்.


எல்லோரும் கையை விரித்து விட்டார்கள்.

சோர்ந்துபோய் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.

அப்போது ஒரு மனிதர் இந்த ஊரில்

வேலி என்ற ஒரு பெண் இருக்கிறாள்.

அவள் வீட்டில் மண்சுவர் வைக்க ஆள் வேண்டும் என்றாள் . போய் கேட்டுப் பாருங்கள்.

ஒருவேளை வேலை கிடைத்தாலும் கிடைக்கும் என்று அனுப்பி வைக்கிறார்.


கம்பரும் வேலி வீட்டில் போய் வேலை

கேட்டு நிற்கிறார்.

முதலாவது கம்பரை ஏற இறங்க பார்த்த

அந்தப் பெண்

சுவர் உறுதியாக நல்லபடியாகக் கட்டித் தந்தால் மட்டுமே குருணி நெல் கூலியாகத் தருவேன் என்று கறாராகப் பேசினாள்.


மண்சுவர் கட்டுவது அப்படியென்ன

பெரிய வேலை என்று நினைத்துக் கொண்டு

கம்பரும் நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டு

வேலையைத் தொடங்கினார்.


முன்பின் தெரியாத வேலை.

முதலாவது நிறைய தண்ணீரை 

ஊற்றி மண்ணைக் குழைத்தார்.

மண்ணை எடுத்துச் சுவர் எழுப்ப,

குழைத்த மொத்த மண்ணும்

 சடசடவென்று

கீழே வழிந்து விழுந்தது.


என்ன இது?

நீர் சற்று அதிகமாக ஊற்றி

மண்ணைக் குழைத்து விட்டேனோ?

இப்போது நீரைக் குறைத்து ஊற்றி

கெட்டியாக மண்ணைக் குழைத்துப்

பூச ஆரம்பித்தார்.

நீர் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் பொலுபொலுவென்று கீழே விழுந்தது.

மறுபடியும் மறுபடியும் முயன்று

பார்த்தும் கம்பரால் சுவரைக் கட்ட முடியவில்லை.

சுவர் உறுதியாக கட்டி முடிக்க விட்டால்

வேலி கூலி தரமாட்டாள் .

வயிற்றுப்பாட்டிற்கு  என்ன செய்வது?

கையெல்லாம் வலிக்கத் தொடங்கியது.

அப்படியே கீழே அமர்ந்தார்.


அதட்டி உருட்டிப் புரட்டிப்

பாடல் பாடியவர் இப்போது சுவரோடு

பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்.

புலவர் சுவரோடு உரையாடலா நிகழ்த்துவார்?


அவருக்குத் தெரிந்த தமிழால்

உருக்கமான பாடலால் 

ஒரு பேச்சு வார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

ஏற்பட்டிருக்குமா?

அறிந்து கொள்ள

இதோ அவர் பாடிய பாடல் உங்களுக்காக...


"மற்கொண்ட திண்புயத்தான் மாநகர் விட்டிங்கு வந்து 

சொற்கொண்ட பாவின்

சுவையறிவா ரீங்கில்லையே 

விற்கொண்ட வாணுதலாள்

வேலி தருங்கூலி 

நெற்கொண்டு போமளவும் 

நில்லாய் நெடுஞ்சுவரே !"

என்று பாடினார்.


"வீரம் கொண்ட திண்ணிய தோளையுடைய

சோழன் நாட்டைவிட்டு இங்கு வந்தேன்.

இங்கு புலவர் பாடும் பாடலின் புலமையை அறிந்து

கொண்டாட ஒருவரும் இல்லை.

வில்போன்ற புருவத்தை உடைய

வேலி என்ற இப்பெண் கூலியாகத் தரும்

நெல்லை வாங்கிக் கொண்டு

இங்கிருந்து போகுமளவும் நெடுஞ்சுவரே நீ அப்படியே நிற்பாயாக " என்றார்.


கம்பரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நெடுஞ்சுவர் அப்படியே நின்றது.


பெரும் நிம்மதி.வேலை முடிந்தது.

வேலி வந்தாள். கூலியாகப் பேசிய

நெல்லைக் கொடுத்தாள்.

கூலியைப் பெற்றுக்கொண்ட கம்பர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


வெல்லும் சொல்.

நெடுஞ்சுவரையும் 

நிற்க வைத்தச் சொல் .

நம்மையும் பாடலோடு  கட்டி இழுத்துச்

சென்ற சொல் கம்பருடையது.


நில்லாய் நெடுஞ்சுவரே!







Comments

Popular Posts