வள்ளல் ஆய் அண்டிரன்
வள்ளல் ஆய் அண்டிரன்
கடையேழு வள்ளல்களில் ஒருவன் ஆய்
அண்டிரன் பொதிகை மலையை ஆண்ட மன்னன்.
பாரியையும் ஓரியையும் காரியையும்
தெரிந்த நம்மில் பலருக்கு ஆய் அண்டிரனைத்
தெரியவில்லை.
ஆய் அண்டிரன் அப்படி என்ன செய்து விட்டான்.?
ஏதோ கடையேழு வள்ளல்கள் வரிசையில்
இருப்பதால் அந்தப் பெயரை உச்சரிக்கிறோம்.
முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி.
மயிலுக்குப் போர்வை கொடுத்தான்
பேகன். இந்த ஆய் அண்டிரன் என்ன கொடுத்தான் என்று கடையேழு வள்ளல்களுள் ஒருவராக எண்ணப்படுகிறார் என்ற கேள்வி நம்மில் பலருக்கு உண்டு.
எதுவுமே செய்யாத ஒருவரை
வரலாறு எப்படி வள்ளலாக ஏற்றுக் கொள்ளும்.?
நிச்சயமாக ஆய் அண்டிரன் பெரிய
பெரிய செயல்கள் செய்திருக்க வேண்டும் .
எதிர்பாராது வழங்கும் வள்ளலாக
இருந்திருக்க வேண்டும்.
அவரைப் பற்றி நாம் அறிந்து வர
வேண்டும் என்பதற்காக பொதிகை மலையை நோக்கிப் பயணப்பட்டேன்.
ஏன் பொதிகை மலையை நோக்கிய பயணம்?
பொதிகை மலைப் பகுதியை ஆண்ட மன்னன் அல்லவா ஆய் அண்டிரன்!
அவனைப் பொதிகை மலையில் போய் பார்க்காமல் வேறு எங்கு போய்
கண்டிட முடியும்?
என்னைப் போலவே புலவர் ஒருவருக்கும்
ஆய் அண்டிரனைக் கண்டு வர ஆசை
என்று நினைக்கிறேன்.
அவர் முன்னால் செல்ல அவருக்குத் தெரியாமல் நான் மறைந்து மறைந்து
சென்றேன். அவருக்கு ஆய் அண்டிரனோடு நல்ல நெருக்கம் இருந்திருக்க வேண்டும்.
அது அவரது நடையில் தெரிகிறது.
புலவர் பொதிகை மலையை நோக்கி நடக்கிறார்.
வழியில் ஒரு இளைஞன்.
பார்ப்பதற்குப் பெரிய இடத்து இளைஞன் போல இருக்கிறான். கழுத்தில் புலித்தாலி அணிந்திருக்கிறான்.
அப்படியானால் அவனுக்கும் அரசனுக்கும்
தொடர்பு இருந்திருக்க வேண்டும்.
மன்னன் வழங்கிய புலிப்பல்
தாலியாகத்தான் இது இருக்க வேண்டும்.
அவனை ஏற இறங்க பார்த்த புலவர்,
பயணக் களைப்பு தெரியாதிருக்க அவனையும் கூடவே அழைத்துக் கொண்டு
மலையை நோக்கிச் செல்கிறார் .
அப்போது எதிரே இன்னொரு புலவர் வருகிறார்.
அவர் அணிந்திருந்த ஆடை,
வற்றிய வயிறு,
ஒட்டிய கன்னம் ,
பல நாட்கள் எண்ணெய் அறியாத்
தலைமுடி யாவும் ஏழ்மையின்
கோலத்தை வெளிப்படுத்தியது.
இவருக்கும்
ஆய் அண்டிரனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டால்
இவருக்கு இருக்கும் வறுமை
தீரும்.
இப்படியொரு கணக்கு முடமோசியார் மனதில் ஓட,
அதனால் புலவர்மீது
இரக்கம் ஏற்பட,
அவரையும் ஆற்றுப்படுத்தி ,பொதிகை மலைக்குத் தன்னோடு
அழைத்துச் செல்கிறார் புலவர்.
செல்லும்போது வழி நெடுக
ஆய் அண்டிரன்
கொடைத் தன்மையைப் பற்றிச் சொல்லிக்கொண்டே செல்கிறார்.
நானும் காதுகளைக் கூர்மையாக்கிக்
கவனமாகக் கேட்டேன்.
"ஆய் அண்டிரனைப் பார்த்து பரிசில்பெற வரும் யாரையும் அவன் வெறுங்கையோடு அனுப்புவதில்லை..பொன் பொருள் கொடுப்பதோடு நின்று விடுவதில்லை. அவற்றோடு ஒரு யானையையும் பரிசிலாகக் கொடுத்துவிடுவான்."
என்றார் புலவர்.
"பொன் பொருள் கொடுப்பது சரி.யானை எதற்கு?"
"பொதிகை மலையில் நிறைய யானைகள் உண்டு. அதனால் அதனையும் பரிசிலாக வழங்கி, தனக்கென ஒரு தனித் தன்மையை உருவாக்கி வைத்திருந்தான் ஆய் அண்டிரன்."
"ஓ...யானை கொடுத்த வள்ளல் என்று
சொல்லுங்கள். "
"ஆம்...அதுதான் ஆய் அண்டிரனின் தனிச்சிறப்பு.
"நான் ஆய் அண்டிரனைப் பார்க்கச் சென்ற நிகழ்வு சுவையானது.
வேடிக்கையானது.
சோழ நாட்டுப் புலவரான என் காதுகளில் ஆய் அண்டிரன் பற்றிய செய்திகள்
வந்து விழுந்தன. புகழாத புலவரில்லை. பாடாத வாயுமில்லை.அப்படி என்னதான் ஆய் அண்டிரனிடம் இருக்கிறது.? அனைவரும் கொண்டாடும் இந்த மன்னனை நானும் கண்டிட வேண்டும் என்ற வேட்கை உந்தித் தள்ள நானும்
ஆய் அண்டிரனைக் பார்த்து வரச் சென்றேன்.சொல்லப் போனால் வேடிக்கை பார்த்து வர வேண்டும்
என்றுதான் சென்றேன்.
பொருள் வாங்கி வர வேண்டும் என்பது என் நோக்கமல்ல. மன்னனின் புலமையும் புலவர்களை மதிக்கும் பண்பும் உண்மையா ?மிகைப்படுத்தப்படுகிறதா?என்பதை உறுதி செய்வதற்காகச் சென்றேன்.
ஆனால் ....
நான் மன்னனைப் பார்த்ததும் என் நினைவுகளை மாற்றிக் கொண்டேன்.
.நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே மன்னன் என்னைக் கொண்டாடினான். எனக்கு முள்ளம்பன்றி இறைச்சி வைத்து விருந்தளித்தான்."
"முள்ளம்பன்றி இறைச்சியா? எதற்கு?"
"சிறப்பான விருந்து என்றால் அதில் முள்ளம்பன்றி இறைச்சி கொடுத்து மகிழ வைப்பது மன்னனின் பழக்கம்."
"நல்ல பழக்கம். நல்ல வரவேற்பு இல்லையா "
" மிகச்சிறப்பு.
மறுநாள் புறப்படும் நேரம் வந்தது.
பொன்னையும் பொருளையும் புலித்தோலால் போர்த்திக்
கைகளில் கொடுத்தான். மன்னன்."
"என்ன ...புலித்தோலிலா?
நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்" உடன் வந்த புலவர் ஆச்சரியத்தோடு பேசினார்.
"புலித்தோலால் போர்த்தி ஒரு பொருளைக் கொடுப்பது என்பது
அந்த காலத்தில் மிகவும் மரியாதைக்குரிய செயலாக கருதப்பட்டது.
சோழ நாட்டுப் புலவராகிய எனக்கே இத்துணை மரியாதை செய்து அனுப்புகிற
தங்கள் பண்பை எப்படி மெச்சுவது என்று
தெரியவில்லை என்றேன் . மன்னன் புன்னகைத்துக் கொண்டார்".
"தங்கள் பெயர் என்னவென்று நான் அறிந்து
கொள்ளலாமா? "என்று முதன் முறையாக உடன் வந்தப் புலவர் பற்றிய விபரத்தைக் கேட்டார்
"ஏணிச்சேரி முடமோசியார் என்பது என் பெயர்."
"அழகான பெயர்"
அப்போது உடன் வந்த வாலிபன் தன் கழுத்தில் கிடந்த புலிப்பல் தாலியைத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"என்ன தம்பி திடீரென்று கழுத்தைத் தடவிப் பார்ப்பது போலிருக்கிறது."
"இதுவும் அண்டிரன் தந்ததுதான்"
பெருமையாகக் கூறினான் அந்த வாலிபன்.
"இப்படி வாரிவழங்கினால்..
தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ள மாட்டானா?"
"சரியாகக் கேட்டீர்கள்.
தனக்குப் போகத்தான் தானம்
இப்படியொரு எண்ணம் ஆய் அண்டிரனிடம் ஒருபோதும் இருந்ததில்லை.
இதற்கும் ஒரு கதை உண்டு.
ஒருமுறை ஒரு நீல நாகச்சட்டை ஒன்று
பெருந்தவம் புரிந்த ஒரு முனிவரின்
கையில் கிடைத்திருக்கிறது.
கிடைத்தற்கரியது.
அது யாரிடம் இருக்கிறதோ
அவருக்கு மேலும் மேலும் செல்வம் பெருகும். அப்படி ஒரு சிறப்பு அந்த
நீல நாகச் சட்டைக்கு உண்டு.இந்த நீல நாகச் சட்டை
என்னிடம் இருப்பதில் என்ன பயன்?
இப்படி நினைத்து ஆழ்ந்த சிந்தனையில்
கண்களை மூடி இருந்தார் முனிவர்.
திடீரென்று ஏதோ அசைவாடுவது போன்ற உணர்வு.கண்களைத் திறந்து பார்க்கிறார் முனிவர்.
எதிரில் சுரப்புன்னை மலர் மாலை அணிந்த ஒரு மனிதன் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறான். இவன் ஆய் அண்டிரனாயிற்றே . தக்க நேரத்தில் வந்திருக்கிறான்.
இந்த நீல நாக சட்டை
ஆய் அண்டிரன் போன்ற ஒரு வள்ளல் கையில் இருந்தால்.....
ஆம் அதுதான் சரி. இந்த நீல நாகச் சண்டையால் அவனுக்கு மேலும் மேலும்
பொருள் சேரும். அது பிறருக்கு உதவுவதற்கு உதவியாக இருக்கும் .
அவன் இன்னும் அதிகமாக கொடுத்துக் கொண்டே இருப்பான் "என்று அதனை ஆய் அண்டிரன் கைகளில் கொடுக்கிறார் முனிவர்.
"ஆச்சரியமாக இருக்கிறதே!அந்த நீல நாகச் சட்டை ஆய் அண்டிரனினிடம் இருப்பதால்தான் இவ்வளவு கொடுக்க முடிகிறதா?"அதுதான் இல்லை.
வள்ளல்களுக்குக் கொடுத்துதான் பழக்கம்.வாங்கி பழக்கமில்லை.
இந்த நீல நாகச் சட்டை
என்னிடம் இருந்தால் என்னைத் தேடி வருபவர்களுக்கு மட்டுமே என்னால் பொருள் கொடுக்க முடியும்.
இதுவே உலகுக்கெல்லாம் படியளக்கும் சிவன் கையில் இருந்தால்...
உலக மக்கள் எல்லாம் வறுமையின்றி
எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்வார்கள் நினைத்துப் பார்த்தான் அண்டிரன்.
அவ்வளவுதான் . அண்டிரன் அதனை ஆலமரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் பாதத்தில் வைத்துவிட்டு அப்படியே கடந்து சென்று விட்டான்.
என்னே உயர்ந்த சிந்தனை .!"எனக்கு சீக்கிரமாகவே அந்த வள்ளலைப் பார்க்க வேண்டும் என்று ஆசை ஆசையாக இருக்கிறது."
விரைவு படுத்தினார் புலவர்.
"பார்க்கத்தானே போகிறோம்.
இதோ ஆய்க்குடி வந்து விட்டோம்.
அதோ தெரிகிறதே அதுதான் அரண்மனை."
"இதுவா இது அரண்மனைபோலவே தெரியவில்லையே.
அரண்மனை பொலிவிழந்து காணப்படுகிறது.
இவ்வளவு நேரம் நீங்கள் ஆய்
அண்டிரன் பற்றி பேசியதற்கும்
அரண்மனைக்கும் சம்பந்தமில்லா
காட்சி தெரிகிறது.. அரண்மனைக்கு
வெளியில் வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டிருக்கும்
யானை பந்தி இல்லை."
" ஆம்....ஏன் ....என்ன நிகழ்ந்தது?என்னாயிற்று?"
யானைப் பந்தி இல்லாமல் வெறுமனே கயிறுகள் கிடக்கின்றன. வறுமையில் வாழும் ஒரு மன்னனா புலவர்களுக்கு வாரிவழங்க முடியும்" என்ற கேள்வி முகத்தில் தெரிய உடன் வந்த புலவர்
முட மோசியாரைப் பார்க்கிறார்.
"ஏன் வருத்தப்படுகிறீர்.?
வாரும் வந்துப் பாரும்."
மூவரும் அரண்மனைக்குள் நுழைகின்றனர்.
நல்ல வரவேற்பு. நல்ல புலமையுள்ள மன்னன். புலவரின் பாடலைக் கேட்டு
பாராட்டினான்.
உரிய மரியாதை வழங்கப்பட்டது.
நல்ல விருந்தும் படைக்கப்பட்டது.
பொன் பொருள் வழங்கப்பட்டன
இப்போது உடன் வந்த
புலவரின் முகத்தில்
பெரும்மகிழ்ச்சி.
மகிழ்ச்சியோடு புலவர்கள்
அங்கிருந்து புறப்பட்டனர்.
அவர்களை வழியனுப்பி விட்டு
அண்டிரன் சற்று நேரம் அமைதியாக
அமர்ந்திருக்கிறான்.
மன்னன் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.
பொன் பொருளோடு யானையையும் கொடுப்பதல்லவா அண்டிரன்
பழக்கம்.
பந்தியில் யானை இல்லாததால்
இந்த புலவருக்குக் கொடுத்தனுப்ப
யானையில்லையே என்ற கவலை
அண்டிரன் முகத்தில் மண்டிக் கிடக்க
தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறான்.
இப்போது அண்டிரன் மனதில் பல்வேறு கேள்விகள் வந்து விடை கேட்டு நிற்கின்றன.
இப்போது யானை மட்டும் இல்லை.இனி வரப்போகும் புலவர்களுக்கு
என்ன கொடுக்கப் போகிறாய்?
யானை இல்லாமல் அனுப்பிவிட்டாய்.
இனிவரும் புலவர்களுக்குப் பொருளும் இல்லை என்று அனுப்பப் போகிறாயா? என்ற கேள்வி மறுபடியும் மறுபடியும் வந்து அண்டிரனைத் தூங்கவிடாமல்
துரத்தியடித்தது.
கொடுத்த கை முடமாகிப் போனது போன்றதொரு உணர்வு.
என்னை நம்பி வருகிறவர்களுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்....
என்ன செய்யப் போகிறேன். கேள்வி
நெஞ்சை வாட்டியது.
இந்தக் கவலையே
அவன் ஊன் உறக்கத்தைக்
களவாடிக் கொண்டது.உண்ணாமல்...
உறங்காமல் மனிதன் எத்தனை நாளுக்கு தந்தான் தாக்குப் பிடிக்க முடியும்.?
அப்படியே இருந்து உயிரை மாய்த்துக் கொண்டான் பொதிகை மன்னன்.
கண்ணீர் நிறைந்த கண்களோடு திரும்பி
நின்று கொண்டேன்.
யானைப் பந்தியில் யானை இல்லை.
போரிடுவதற்கல்ல.
இரப்பவர்களுக்கு பொன் பொருளோடு
கொடுத்தனுப்புவதற்கு...
இப்படியொரு வள்ளலா?
கேட்கும்போது மெய் சிலிர்க்கிறதல்லவா!
கொடுப்பதற்கு யானை இல்லையே எனத் தன்னை
மாய்த்துக் கொண்ட மன்னன் என்று வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்து விட்டான் ஆய் அண்டிரன்.
இதுதான் கடையேழு வள்ளல்களுள்
ஒருவராக ஆய் அண்டிரன் கொண்டாடப்படுவதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
யானை கொடுத்த வள்ளல்ஆய் என்று
வரலாற்றேடுகளில் ஆய் அண்டிரன்
பதிவு செய்யப்பட்டான்.
Comments
Post a Comment