பருவத்தோடு ஒட்ட ஒழுகல்...
பருவத்தோடு ஒட்ட ஒழுகல்...
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு"
குறள்: 482
பருவத்தோடு-காலத்தோடு
ஒட்ட- பொருந்த
ஒழுகல்-நடந்து கொள்ளுதல்
திருவினைத்- செல்வத்தை
தீராமை- நீங்காமல்
ஆர்க்குங்- கட்டி வைக்கும்
கயிறு- கயிறாகும்
காலத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும்
இயல்பு செல்வத்தை
நம்மிடமிருந்து நீங்கவிடாமல்
கட்டி வைக்கும் கயிறாகும்.
விளக்கம்:
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர்
அதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காலம் ஏற்புடையதாக அமைந்து
விட்டால் சூழலுக்கு உகந்ததாக
அமைந்துவிட்டால் வெற்றியை நோக்கிய நமது பயணம்
தொடங்கிவிட்டது என்று கொள்ளலாம்.
அதுபோல காலத்திற்கு ஏற்ப
சூழலுக்கு ஏற்ப வாழப் பழகிக் கொண்டால்
நம்மிடம் இருக்கும் செல்வம் நம்மைவிட்டு ஒரு போதும் நீங்காது.
செல்வம் மிகுதியாக இருக்கும்போது
எப்படி செலவழிக்க வேண்டும்
செல்வம் குறைவாக இருக்கும்போது
எப்படிச் சிக்கன நடவடிக்கைகள்
மேற்கொள்ள வேண்டும் என்று தெரியும்.
எந்தப் பருவத்தில் எந்தத் தொழில் செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும்.
காற்றடிக்கும் போது மாவு விற்க
செல்வதும் மழைக் காலங்களில்
உப்பு வியாபாரத்திற்குக் கூடையைத்
தூக்கிக் கொண்டு செல்வதும்
எந்தப் பருவத்தில் எந்தத் தொழில் செய்தால்
பொருள் ஈட்ட முடியும் என்ற
அறிவில்லாமையே ஆகும்.
அதனால்தான்
காலம் அறிதல் வாழ்க்கைக்கு உகந்தது. வளர்ச்சிக்கு ஏற்றது. வெற்றிக்கு வழிகாட்டுவது. செல்வம் ஈட்டலுக்குத் துணை நிற்பது.ஆதலால் பருவ காலம் அறிந்து பக்குவமாய் நடந்து கொள்க.
பருவம் தப்பிய வெள்ளாமை
வீடு வந்து சேராது என்பார்கள்.
அதனால்தான் பருவம் அறிந்து காலத்தோடு பொருந்த ஒழுகுதல் வேண்டும் . அப்படி பருவம் அறிந்து ஒழுகுவோமானால் அது நம்மிடம் இருக்கும் செல்வத்தைக் குறைய விடாமல் பாதுகாத்து வைக்கும் ஒரு கருவியாக இருக்கும் என்கிறார் வள்ளுவர்.
காலத்தோடு பொருந்த ஒழுகுதல்
செல்வத்தைப் பிணிக்கும்
கயிறு.
English couplet:
"The bond binds fortune fast is ordered
effort made
Strictly observant still of
favouring season's aid"
Translation:
Acting at the right season,the cord
that will improveably bind success.
Transliteration :
"Paruvaththodu otta ozhukal thiruvinaith
theeraamai aarkkunG kayiru"
Comments
Post a Comment