ஒழுங்கும் ஒழுக்கமும்

ஒழுங்கும் ஒழுக்கமும் 


"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் 

உயிரினும் ஓம்பப் படும் "

என்றார் வள்ளுவர்.

 அதாவது ஒழுக்கம் உயர்வைத் தருவதால்

அந்த ஒழுக்கம் உயிரினும் மேலாக 

பேணப்படும்.

உயிரினும் மேலானது ஒழுக்கம்.

அதனால்தான் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லி

வளர்க்கப்படுகிறோம்.


அடுத்து ஒழுக்கம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது.

ஒழுக்கம் என்பது ஒரு நியதிக்கு

உட்பட்டு பண்போடு வாழ்வது.

நற்பண்பு இருந்தால் நல்லொழுக்கம்

தானாக வந்து குடியேறிவிடும்.

ஒழுக்கத்திற்கும் ஒழுங்கிற்கும்

என்ன தொடர்பு?

அனைவருக்கும் ஒழுங்கின்மீது அலாதி பிரியம் உண்டு.

ஒழுங்காக இருக்கும் பொருள்

தனிக்கவனம் பெரும்.

ஆனால் ஒழுங்காக வைப்பதில்தான் சிக்கல்.

யாராவது ஒழுங்குபடுத்தித் தரமாட்டார்களா 

  என்று நினைப்போம்.

  வீட்டிற்கு யாராவது வந்தால் கண்கள் 

  முதன் முதலாக வீட்டில் எல்லாம் சரியாக

   வைக்கப்பட்டிருக்கிறதா  என்றுதான் பார்க்கும். 

 பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக 

 கிடந்தால் முதன் முதலாக அவற்றை சரிபடுத்திவிட்டுதான்  

கதவையே திறப்போம்.


   இதற்குக் காரணம் பிறர் நம்மைப் பற்றித் தப்பாக   நினைத்துவிடக்கூடாதே என்ற பயம்.

   

ஒழுக்கத்தைப் போலவே ஒழுங்கும்

நமக்கு நல்ல பெயர் பெற்றுத் தரும்.

 நம்மைப் பற்றிய நல்லெண்ணம் 

கட்டமைக்கப்படுவதற்கு  நாம்

நம்மைச் சுற்றியுள்ள இடத்தை எவ்வாறு

வைத்திருக்கிறோம் என்பதும் முக்கிய

பங்கு வகிக்கிறது.

  நாம் வீட்டை வைத்திருக்கும் நேர்த்தியை வைத்து நமது ஒழுக்கம் கணிக்கப்படுகிறது.


அழகின் மறுபெயர் ஒழுங்கு.

  

நெல்சன் ஒரு நல்ல எழுத்தாளர்.அழகை ஆராதிக்கிறவர்.

தாம் இருக்கும் இடம் நேர்த்தியாக இருக்க 

வேண்டும் என்று எண்ணுவார்.

அவருடைய அறையில் புத்தகங்கள் யாவும்

 அதனதன் இடத்தில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும்.

" ஒழுங்கு மனமகிழ்ச்சியைத் தருவதோடு 

அமைதியையும் கொடுக்கும் 

 சிந்தனை சக்தியைப் பெருக்கும். 

 கற்பனை வளத்தைக் கூட்டும்.

 உன் வீட்டில் குவிந்து கிடக்கும் குப்பைக் குவியல் 

 உன் மனதின் தாறுமாறான எண்ணக் குவியலின் பிரதிபலிப்பு."என்பார்.

 


 தாஜ்மகாலின் நேர்த்தியும் அதன் ஒழுங்கும் 

  நம்மை இன்றுவரை கவர்ந்திழுக்கிறது.

  

  ஒழுங்கு என்பது ஒரு நியதி .

  இதை இப்படித்தான் செய்ய வேண்டும்.

  இதை இங்கேதான் வைக்க வேண்டும் 

  இந்தக் காரியத்தை இத்தனை மணிக்குள் 

  முடித்துவிட வேண்டும்.

  இப்படி செய்யும் செயல்கள் யாவற்றிலும் 

  ஓர் ஒழுங்கைக் கடைபிடிக்கும்போது யாவும் 

  நேர்த்தியாக  வெற்றிகரமாக

செய்து முடிக்கப்படும்.

  

 மாணவர்கள்  புத்தகங்களை அடுக்கி வைத்து ஒழுங்காகப் பராமரிப்பதிலிருந்தே

அவர்கள் படிப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நோட்டுபுத்தகத்தில் எழுதும்போது ஒரு ஒழுங்கு இருக்கும்.

 வீட்டிற்கு வந்ததும் எல்லாவற்றையும் 

 அதனதன் இடத்தில் வைக்கும் பண்பு இருக்கும். 

 இவை யாவும் அவனது கல்வியில் அவன் செலுத்தும் அதிகப்படியான அக்கறைக்கு உதாரணமாகும்.

 

   

 சிறுபிள்ளையிலிருந்தே ஒழுங்கு கடைபிடிக்கப்படும்போது

  அது பெரியவர்கள் ஆன பின்னரும் தொடரும்.

 தொடர்ந்து செய்யப்படும் எந்த செயலும்

 பழக்கமாகிப் போகும்.

 பழக்கம் வழக்கமானால் அது நல்லபழக்கமாக மாறும்.

   

  அதென்ன பெரிய ஒழுங்கு ...பொல்லாத ஒழுங்கு .

  கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

   கால் கை  ஒழுங்கில்லாமல் கண்டமேனிக்கு 

 வளர்ந்துவிட்டால் அது வளர்ச்சியாகுமா ?

 கை கால்கள் ஒழுங்காக இல்லாவிட்டால் 

  அது நிறைவானதாக இருக்குமா! 

   

  மூளையின் கட்டுப்பாட்டின்படிதானே

எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன.

அவை ஒரு சீராக நடைபெறாவிட்டால்....

செயல்கள் யாவும் தாறுமாறாகப் போய்விடும்.


இந்த ஒழுங்கு நமது அத்தனை செயல்பாடுகளுக்கும் முதன்மையானது தேவையானது. 

 ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் மிகப் பெரிய

 வேறுபாடு ஒன்றும் இல்லை.

ஒழுங்கைக் கடைபிடிக்கும் ஒருவருடைய

வாழ்வில் ஒழுக்கத்திற்கும்

குறைவிருக்காது.

    

  எதிலும் ஒரு விதிமுறையைக் கடைபிடித்து 

  ஒழுகும் ஒருவனிடம் 

  ஒழுக்க நெறிகள் மிகுந்திருக்கும்.

  அவன் நெறி தவற மாட்டான்

   என்பதை நம்பலாம்.

  

 நடத்தை விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் 

 ஒருவனால் ஒருபோதும் தவறான பாதைக்குச் 

செல்ல முடியாது.

  

 பள்ளிப்பருவத்திலேயே  ஒழுக்கம் கற்பிக்கப்படுகிறது போல

 ஒழுங்கின் தேவையும் கற்பிக்கப்பட

வேண்டும்.

 


விளையாட்டு பாடவேளேயில் ஆசிரியர் 

நிறைய விதிமுறைகளை ஒழுங்காகக் கடைபிடிக்கக் கற்பித்திருப்பார்.


  நிற்பதில்.... நடப்பதில்..... ஓடுவதில் .....

  இப்படி எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு 

  கற்பிக்கப்பட்டிருக்கும்.


  அது விளையாட்டு பாடவேளைக்கு மட்டும் உரிய தல்ல. 

நம் வாழ்க்கை முழுவதும் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்தான் 

விளையாட்டிலும் 

கற்பிக்கப்படுகின்றன.


  நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட 

  பார்வையும் கூட ஒரு நேர்த்திதானே.



  இயற்கை யாவும் நியதிக்கு உட்பட்டுதான்

  இயங்குகின்றன.

         

காலையில் சூரியன் உதிப்பதில் தொடங்கி

 நடக்கும் யாவும் ஒரு ஒழுங்கிலேயே 

 நடைபெற்றுக் கொண்டிருக்கும்.     

 

ஒழுங்கு கால விரயத்தைத் தடுக்கும்.

பொருட்களை எங்கேயாவது

 வைத்துவிட்டு தேடும் 

போக்கு இருக்காது.

   


வீணான சண்டைகள் வராதிருக்கும்.


நம்மீது ஒரு    நல்ல அபிப்பிராயம் ஏற்பட 

வழிவகுக்கும்.


எதிலும் ஒரு ஈடுபாட்டை உருவாக்கும்.


அழகு உணர்வைக் கூட்டும்.


மொத்தத்தில் ஒழுங்கு ஒழுக்கத்தைக் 

கடைபிடிக்க உறுதுணையாக இருக்கும்.


ஒழுங்கும் ஒழுக்கமும் கூடியிருந்தால் 

உங்கள் வெற்றிக்குத் தடையிடுவார் யார் ? 


ஒழுங்கின்மையோடு  கொள்ளுங்கள் பிணக்கு. 


ஒழுங்காகத் தொடங்கட்டும் உங்கள் வெற்றிக்கணக்கு.




    

   



Comments