திருநெல்வேலி வட்டார வழக்கு
திருநெல்வேலி வட்டார வழக்கு
திருநெல்வேலி என்றாலே
அல்வா.
அதுவும் இருட்டுக்கடை அல்லாவுக்கு
அடிமைப்பட்டுக் போன நாக்கு வேறு எந்த
அல்வாவையும் ருசி பார்க்காது.
தாமிரபரணி ஆற்றுத் தண்ணீருக்குக்கூட
தனி ருசி உண்டு.
நெல்லை மக்கள்
பேச்சில் இனிமை இருக்கும்.
மரியாதையோடு பேசும் பண்பு உண்டு.
ஒவ்வொரு ஊருக்கும் தனி அடையாளம் இருக்கும்.
பேசும் பேச்சிலிருந்து இது
எந்த வட்டார வழக்குச் சொற்கள்
என்பதைச் சொல்லிவிடலாம்.
பேரைச் சொல்லாமலேயே
ஊரைக் கண்டுபிடித்துவிடலாம்.
திருநெல்வேலி என்றதும் 'ஏல'
என்ற சொல் உள்ளேன் ஐயா என்று
முந்தி வந்து தலை தூக்கி நிற்கும்
அண்மை காலமாக நம் காதுகளில்
அடிக்கடி வந்து விழும் ஒரு சொல்
'ஏல ' என்பதுதான்.
ஏல...போல...வால....
இது எல்லாமே எங்கள்
பகுதியில் பேசப்படும் சொற்கள்தான்.
மறுக்கவில்லை.
ஆனால் இந்த ஏல...ஏல...என்பது மட்டும்
தொலைக்காட்சியில் அடிக்கடி உச்சரிக்கப்படும்
சொல்லாகிவிட்டது.
திரைப்படங்களால் இந்தச் சொல்
தனிக்கவனம் பெற்று வருகிறது.
இதில் தவறு ஒன்றுமில்லை.
ஆனால் உண்மையிலேயே அந்தச்
சொல் உண்மையான பொருளில்
சொல்லப் படுகிறதா...? அல்லது
திசைமாறிப் போகிறதா ?என்று
யோசித்துப் பார்த்தேன்.
என் மனசாட்சிப்படி திசைமாறிப்
போவது போன்றே தோன்றியது.
ஏல....ஏல....என்று திருநெல்வேலிக்காரர்களை
ஏலம் விடுவதைப் பார்த்தால் என்ன
சொல்வெதென்றே தெரியவில்லை.
திருநெல்வேலிக்காரர்கள்
தூத்துக்குடிக்காரர்கள் அனைவரும்
,ஏல ...'என்ற சொல்லைப்
பயன்படுத்துவார்கள் என்பது
அனைவருக்கும் தெரியும்.
அதனை எப்போது? எங்கே? யாரிடம்?
எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பது
அனைவருக்கும் தெரிய வேண்டுமல்லவா!
தெரிந்துதான் பேசுகிறார்களா?
தெரியாமல்தான் பேசுகிறார்களா?
ஒன்றும் புரியவில்லை.
கேட்டுவிட்டு சும்மா இருக்கவும்
மனம் ஒப்பவில்லை.
ஏல....என்ற சொல்லை எங்கே பயன்படுத்துவது?
யாரிடம் பயன்படுத்துவது என்று
ஒரு வரன்முறை வேண்டாமா?
பெரிய ஆளைப் பார்த்தாலும்
'ஏல 'தான்.
சின்ன பையனைப் பார்த்தாலும் 'ஏல' தான்.
திரும்பிப் பார்க்கிறேன்.
'ஏல 'என்று எல்லா இடங்களிலும்
எல்லோரையும் பார்த்துச்
சொல்ல முடியுமா?
என்னால் முடிந்ததா?
எங்களைச் சுற்றியுள்ளவர்கள் எந்த நேரங்களில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்கள்.
நானும் 'ஏல' என்ற சொல்லை எடக்குமடக்காகப் பயன்படுத்திவிட்டு
வாங்கிக் கட்டிக்கொண்ட நாட்கள் எல்லாம்
கண்முன் வந்து வரிசை கட்டி நிற்க
மனம் ஏதோ ஒன்றைச் சொல்ல உந்தித் தள்ள எழுதியதுதான் இந்தக் கட்டுரை.
எங்கள் ஊர்பக்கம் எல்லாம் 'ஏல'
என்று ஆண்பிள்ளைகளைத்தான்
கூப்பிடுவார்கள்.
பெண்பிள்ளைகளை ஒருசிலர் மட்டும்
செல்லமாக 'ஏல 'என்று கூப்பிடுவதைக்
கேட்டிருக்கிறேன்.
ஆனால் பெரும்பான்மை
ஆண்களை அழைக்கும் சொல்தான்.
எல்லா ஆண்களையும் 'ஏல' என்று
அழைத்து விட முடியுமா?
ஏன் முடியாது?
படத்தில் அப்படித்தானே கூப்பிடுகிறார்கள்
என்பீர்கள்.
அதுதான் இல்லை என்கிறேன்.
நம்மைவிட வயதில் சிறியவர்களைப்
பார்த்துக் கூப்பிடும் ஒரு சொல்தான் 'ஏல.'
ஆனால்
"ஏல இங்க வா "என்றால்
மரியாதை கொடுக்காமல்
அழைப்பதாக இருக்கும்.
அதனால் நம்மைவிட
இளையவனாக இருந்தால்
"தம்பி இங்கே வா" என்று அழைப்பது தான்
மரியாதையாக இருக்கும்.
இதுதான் நான் அறிந்தது.
பேசியது. வீட்டில் சொல்லித் தந்தது.
என்ன நீங்க புது கதை விடுறீங்க....
நாங்க திருநெல்வேலிக்காரங்கள் என்றாலே
'ஏல' என்றுதான் கூப்பிடுவோம்.
எத்தனைப் படங்களில் பார்த்திருக்கிறோம் என்கிறீர்களா?
உங்களைவிட வயதில் பெரியவரைப்
பார்த்து ஒருமுறை கூப்பிட்டுப்
பாருங்கள்.
என்ன திமிருல உனக்கு.?
என்று திருப்பிக் கேட்பார்கள்.
திருப்பி அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அண்ணாச்சிக் கடைகளில்
போய் 'ஏல 'ஐந்து கிலோ அரிசி
தால என்று சொல்லிப் பாருங்கள்.
.அவ்வளவுதான்.
அவரது எதிர்வினையே வேறு மாதிரி
இருக்கும்.
தொலைக்காட்சிகளில் விளையாட்டு
பண்ணுகிறார்கள் என்று நேரில்
எங்கள் ஊர் அண்ணாச்சிகளிடம்
விளையாடிவிடாதீர்கள்.
அறியாமல் பேசுகிறான் என்று
விட்டுவிடுபவர்கள் ஒருசிலர் தான்
இருப்பார்கள்.
கோபப்படுபவர்கள்தான் அதிகமாக
இருப்பர்.
ஏனென்றால்
இந்தச் சொல் சாதாரணமாக
நீங்கள் நினைப்பது போல
அனைவராலும் பயன்படுத்தக்கூடிய
சொல் அல்ல.
அது மரியாதைக் குறைவான சொல்.
இது அந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்களுக்குக்
கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.
தெரியாவிட்டால் கேட்டுக் தெரிந்து
கொள்ளுங்கள்.
ஒருமுறை இப்படித்தாங்க
நானும் எங்கள் அண்ணன்
என்னை அடித்தபோது எதுக்குல
என்னை அடிக்ககுற?
என்று கேட்டுவிட்டேன்.
அவ்வளவுதான்....அன்று நான் பட்ட
அடி இன்றுவரை வலிக்குதுங்க....
"என்ன சொன்னா....என்னா சொன்னா
ஏல .....என்னைப் பார்த்து' ஏல' சொல்றா
என்ன.....அவ்வளவு திமிறா உனக்கு
என்று குனிய வைத்து முதுகில்
குத்து குத்தென்று குத்தி எடுத்து விட்டான்.
உண்மையில் நம்மைவிட வயதில் மூத்தவர்களை 'ஏல 'என்று
சொல்லிவிட்டால் மரியாதைக்
குறைவாக பேசுகிறோம் என்றுதான்
நினைப்பார்கள்.
என்னை மாதிரி தெரிந்தோ
தெரியாமலோ நம்மைவிட
மூத்தவர்களைப் பார்த்து' ஏல ..'என்று
சொல்லிவிடாதீர்கள்.
பிறகு முதுகில் 'டின் ' கட்ட
வேண்டியிருக்கும்.
இது போகட்டும்.
என்னைவிட இரண்டு
மூன்று வயது இளையவன் தான் எங்கள்
சித்தப்பா பையன்.
ஒரு முறை "'ஏல 'உன்னை எங்க அம்மா
கூப்பிடுகிறாங்க "என்று
சொல்லிவிட்டேன்.
அவ்வளவுதான் .அவன் ஒரு மாதிரியாகப்
பார்த்தான்.
நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் அதன்பிறகு அவன் பத்து
வருடங்களுக்கு மேலாக
என்னிடம் பேசவில்லை.
எவ்வளவு திமிரு.....ஏல என்று என்னை
கூப்பிடுகிறாள் என்று
அவர்கள் வீட்டில் போய் சொல்லியிருக்கிறான்.
சித்தப்பா எங்கள் வீட்டிற்கு வந்து பெரியப்
பையனைப் பார்த்து நீ
ஏல என்று சொல்லலாமா?
அவனை அவமரியாதை செய்ததுபோல
இருக்கும் இல்லையா?
இனி அப்படி பேசாத
என்று என்னை சத்தம் போட்டார்கள்
என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அதன் பின்னர்தான்
சாதாரணமாக யாரையும்
பார்த்து' ஏல..' என்று கூப்பிடுவது
தப்பு என்பதைப் புரிந்து கொண்டேன்.
அப்படியானால்....அப்படியானால்...
இந்த 'ஏல..'.என்ற சொல்லை
எப்போதுதான் பயன்படுத்துவது
என்கிறீர்களா?
கோபமாக பேசும்போது பயன்படுத்துவர்.
தோட்டத்தில் வேலை பார்க்கும் சிறு
பையன்களைப் பார்த்து முதலாளிகள்
'ஏல 'என்று அழைப்பதைப் பார்த்திருக்கிறேன்.
கேட்டிருக்கிறேன்.
அவர்கள் ஓடி வந்து முன்னே நிற்பார்கள்.
அப்படியானால் தன்னைவிட பொருளாதாரத்தில்
குறைந்தவர்களைப் பார்த்து சொல்லும்
ஒரு சொல்.
இதுவும் தவறுதான் என்பது என்
கருத்து.
பெயர் இருக்கும்போது இந்த' ஏல' என்பது
எதற்கு ?
பெயர் சொல்லி அழைக்கலாமே!
பெயர் சொல்லி அழைப்பதற்குத் தானே
பெயர் வைத்திருக்கிறோம்.
செல்லமாக அழைப்பது வேறு.
அவமானப்படுத்துவதுபோல
அழைப்பது வேறு.
வட்டாரவழக்குச் சொல்லைப்
பயன்படுத்துவது
தப்பில்லை.
மரியாதை குறைவில்லாமல்
பேசுங்கள்.
விளையாட்டாய்ப் பேசுங்கள்.
உங்கள் வயதை ஒத்தவர்களிடம்
பேசும்போது மட்டும் பேசுங்கள்.
அதுவும் அவர் ஒத்துக் கொண்டால் மட்டும்.
திருநெல்வேலிக்காரர்கள் மரியாதை
கொடுத்துப் பேசுபவர்கள்.
அவர்கள் வட்டார வழக்குச் சொல்லைக்
கையிலெடுத்து அவர்களையே
மரியாதைக் குறைவாகப் பேசுவது
ஏற்புடையதல்ல .
இந்த 'ஏல ' எங்கே எப்போது யாரைப்
பார்த்துப் பயன்படுத்த வேண்டும்
எனப் பார்த்து பக்குவமாகப் பேசுங்கள்.
ஏல....ஏல என்று தொலைக்காட்சிகளில்
வரும்போது சிரிப்பாக இருக்கலாம்.
ஆனால் அது சிரிக்க வைப்பதற்கான சொல்
அல்ல....சிந்தித்துப் பேச வேண்டிய சொல்.
புரிந்தால் சரி....
Comments
Post a Comment