உலக மகளிர் தினம்

உலக மகளிர் தினம் 

மார்ச் எட்டாம் நாள் உலக மகளிர் தினம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்ஸ்பயர் இன்க்ளூஷன்

இந்த 2024க்கான தீமாக 

அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது

பெண்கள் முன்னேற்றத்தை ஊக்கப்படுத்துதல் மற்றும் விரைவுப்படுத்துதல்.

இந்த நாளில் வாழ்த்துகள்  பரிமாறப்படும்.

கொண்டாட்டங்கள் ,போட்டிகள்

 பட்டிமன்றங்கள் என்று

ஊடகங்கள் எங்கும் 

பெண்கள் நிகழ்ச்சிகள்

களைகட்டும்.

நாளிதழ்கள், வார இதழ்கள்,மாத இதழ்கள்

அனைத்தும் சாதனைப் பெண்களின் கட்டுரைகளால் நிறைக்கப்பட்டிருக்கும்.

தன்னார்வ அமைப்புகளும் அரசும்

சாதனைப் பெண்களைக்

கண்டறிந்து விருதுகள் 

கொடுத்து மரியாதை

செய்யும்.


இவற்றை எல்லாம் பார்க்கும் நாம் 

அடேங்கப்பா...பெண்களுக்கு இவ்வளவு

அங்கீகாரமா  என்று அண்ணாந்து

பார்த்து மலைத்து நிற்போம்.


நாமும் இப்படி ஒரு சாதனை புரிந்தால்

உலகம் நம்மைக் கொண்டாடும்

என்று கனவு காண வைக்கும்.

நாளைய சாதனையாளர் நான்தான்

என்று கனவில் மிதக்க வைக்கும்.

ஒருவகையில் இந்தக் கொண்டாட்டம்

நம்மை ஊக்குவிப்பதாகவே இருக்கும்.

இருக்க வேண்டும்.

அப்படி ஊக்குவிப்பதாக இருந்தால்தான்

இந்தக் கொண்டாட்டத்திற்கான

பலனைப் பெற்றதாகக் கொள்ள முடியும்.


ஆனால் உண்மையில் உலக மகளிர் நாள்

எதற்காகத் தொடங்கப்பட்டது?

உலகெங்கிலும் உள்ள சாதனையாளர்களைக்

கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்காகவா

மகளிர் தினம் கொண்டாடப்பட்டது ?

இல்லை.

வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால்

இந்த நாளுக்குப் பின்னால் இருக்கும்

வலிகள் புரியும்.


பெண்களைக் கொண்டாட வேண்டும்.

பெண்ணியச் சிந்தனைகள் வளர வேண்டும்

என்பதற்காகத் தொடங்கப்பட்டதல்ல

உலக மகளிர் தினம்.


தினக்கூலி, வாரக்கூலி,

மாதக்கூலி என்று கூலி வேலை செய்து

வந்தனர் பெண்கள்.


அவர்களுக்கு முறையான கூலி வழங்கப்படாமலும்

எத்தனை மணி நேரம் வேலை செய்ய

வேண்டும் ஒரு வரன்முறை இல்லாமல்

வேலை செய்து வந்த காலகட்டம்.

தங்களுக்கு ஏன் ஆண்களுக்கு நிகரான

கூலி கொடுக்கக் கூடாது என்று கேள்வி

கேட்க வைத்தது. 

எங்களுக்கும் ஆண்களைப் போன்று

எட்டுமணி நேர வேலை வேண்டும் என்று

குரலெழுப்ப வைத்தது.


பணித்தளங்களில் மனரீதியாக  துன்புறுத்தப்படும் பெண்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கியது. அதற்காக பல்வேறு போராட்டங்களை

முன்னெடுத்து வெற்றி கண்ட நாள்தான்

மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டது.

 

பெண்கள் என்றால் உடல் வலிமையற்றவர்கள்

என்ற நினைப்பு  இருந்து 

வந்த காலம் அது.


அதனால் அரசு வேலைகளைத் தவிர

வேறு வேலைகளில் ஆண்களுக்கு

 இணையான வேலை செய்தால் கூட

 கூலி என்னவோ ஆண்களுக்கு இணையாகக்

 கொடுப்பதில்லை.


குறைந்தது பன்னிரண்டு மணி நேர வேலை

செய்ய வேண்டும்.

ஆனால் கூலி  ஆண்களைவிடக்

குறைவு. 

ஒரே வேலை. ஒரே நேரம்.

ஊதியத்தில் மட்டும் முரண்பாடு.


பொருளாதாரத் தேவைகளுக்காக

வெளியில் இறங்கி வேலை பார்க்க வரும்

பெண்களுக்கு உரிய அங்கீகாரம் 

கிடைக்கவில்லை. பெண்கள்தானே

அவர்களால் ஆண்களுக்கு இணையாக

என்ன செய்துவிட முடியும் என்ற

அலட்சியப்போக்கு இருந்தது.


எவ்வளவு நாள்தான் பொறுத்துப் பார்ப்பது?

ஓங்கி குரல் கொடுக்காமல்

போராட்டங்களை முன்னெடுக்காமல்

நமக்கான உரிமையை நாம்

பெற்றுக்கொள்ள முடியாது

என்ற நிலைக்குப் பெண்கள் தள்ளப்பட்டனர்.


இதற்காக அமெரிக்கா,ஜெர்மனி

போன்ற நாடுகளில் பெண்கள் அமைப்புகள்

முதன்முதலாக குரல் கொடுக்க ஆரம்பித்தன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில்

வேலை நேரத்தைக் குறைக்கவும்

கூலியை ஆண்களுக்கு இணையாக 

உயர்த்தித்தரக்கோரியும் 15000 பெண்கள்

 முதன் முதலாகப் 

போராட்டக் களத்தில் குதித்தனர்.


இந்தக் குரல் உலகெங்கும் கேட்க ஆரம்பித்தது.

சோவியத் ரஷியாவில் அது தொழிலாளர்

போராட்டங்களோடு இணைந்து

முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

எல்லா நாடுகளிலும் பெண்கள் குரல்

ஒலிக்க ஆரம்பித்தது.

பெண்களின் நியாயமான கோரிக்கைகள்

ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதற்கான அங்கீகாரம் பெற்ற

அந்த நாளைத்தான்

மகளிர் தினமாக கொண்டாடி வருகிறோம்.


அது இன்று அடித்தட்டு மக்களைப்

புறந்தள்ளிவிட்டு மேல்தட்டு 

மகளிர் கொண்டாடும் ஒரு நாளாக

மெல்ல மெல்ல மாறிக்கொண்டு

வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.


இன்றும் தொழிற்கூடங்களில் வேலை பார்க்கும்

பெண்கள் விவசாயக்கூலி வேலை

செய்யும் பெண்கள் வீட்டு வேலை செய்யும்

பெண்கள் இவர்களுக்கெல்லாம் ஆண்களுக்கு

நிகரான கூலி வழங்கப்படுவதில்லை.

இதனை யாரும் கண்டு கொள்வதில்லை.


குறைந்த பட்சம் இந்த நாளிலாவது

அவர்களது பிரச்சினைகள் வெளிச்சத்திற்குக்

கொண்டுவரப்பட வேண்டும் என்று எந்த அமைப்பும் முனைப்பு காட்டுவதுமில்லை.


அவர்களுக்கும் பணி இடங்களில்

பாதுகாப்பு உறுதி செய்யப்பட

வேண்டும்.

வேலைக்கு  ஏற்ப கூலிக்கு

உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும்.

நேற்றைய வரலாற்றைப் பேசிப்பேசிக்

கொண்டாடுவதில் எந்தப் பயனுமில்லை.


நாளைய வரலாறும் நல்லதாக

எழுதப்பட வேண்டும்.

அதற்காகக்  குரலில்லாதவர்களுக்குக்

குரலாக இருந்து ஊடகங்கள்

பெண்கள் அமைப்புகள் செயல்பட வேண்டும்.

அவர்களையும் ஒருங்கிணைத்து
உள்ளூர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளச்செய்ய வேண்டும்.
அடித்தட்டு மக்களின் வணிகத்தை
ஊக்குவிக்க வேண்டும்.

முற்றிலும் வியாபார நோக்கில் செயல்படாமல்

சமூகக் கடமையாக எண்ணி

அவர்களுக்காகவும் குரல் கொடுக்கும்

நாளாக இந்த மகளிர் தினம்

அமையட்டும்.

அரசு தினக்கூலிகள் விவசாயக் கூலி

செய்யும் பெண்கள் பக்கம்

இந்த நாளிலாவது  கவனத்தைத் திருப்பி

அவர்களையும் வெளிச்சத்திற்குக் 

கொண்டு வாருங்கள்.

அவர்களும் மகிழ்ச்சியாக நம்மோடு

இணைந்து இந்த நாளைக் கொண்டாடிடட்டும்.


இனிய உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!
Comments

Popular Posts