அம்மாவின் புலம்பல்
அம்மாவின் புலம்பல்
"ஆளாளுக்கு என்னை இப்படித் துரத்தினால்
நான் எங்கே போவேன்.?
யாரிடம் போய் நிற்பேன்?
யார் இருக்கிறார்கள் எனக்கு?
சொல்லி அழகூட ஒரு சனம்
இல்ல....யாரிடம் போய் என் குறையை
சொல்லுவேன்.?
சாமி....நீதான் கேட்கணும் "என்று
வீட்டிற்கு மேற்குப் பக்கத்தில் இருந்த
கோவிலைப் பார்த்துக் கையெடுத்துக்
கும்பிட்டார் அன்னப்பழம் பாட்டி.
இந்தப் புலம்பல் இன்றுமட்டும்
நடக்கவில்லை.
கடந்த நாலு வருசமா பாட்டி
இப்படித்தான் புலம்பி கிட்டு திரியிறாங்க.
மருமகள்கள் ஏதும் சொல்லிவிட்டால்
மகனிடம் போய் சொல்லுவார்.
மகன்" உனக்கு எதுக்கு வம்பு?
வயசான காலத்துல வாயை வச்சுகிட்டு
சும்மா கிடைக்கத் தெரியல என்றால்
ஆளாளுக்குக் கேட்கத்தான் செய்வாளுங்க"
என்று சொல்லிவிட்டால் போதும்,
"எனக்குப் பிறந்ததும்
சரியில்ல...
வந்ததும் சரியில்ல "என்று
புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள்.
பாட்டியின் புலம்பல் கடவுள் காதுக்குத்தான்
இன்னும் போய்
சேரல...
"என்ன அன்னப்பழம் சாப்பிட்டாச்சா...."
கேட்டபடியே பக்கத்தில் வந்து
உட்கார்ந்தார் பக்கத்துவீட்டு மாசானம்
மனைவி மாடத்தி.
ஏதோ நினைவில் இருந்த பாட்டிக்கு
ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.
திருவத்திருவ முழித்தார்.
"காதும் சரியா கேட்கல.
சவம் வயிசாயிட்டுனாலேயே
தேரங்காலம் போய் சேர்ந்துடணும்.
இப்படிக் கிடந்து நொம்பலப்படப்
பிடாது...."
அன்னப்பழம் பாட்டி க்காகப் பரிதாபப்பட்டார்
மாடத்தி.
அதுவரை சும்மா இருந்த அன்னப்பழம் பாட்டி
"என்ன கேட்டா தாயி....
சோறு சாப்பிட்டாச்சான்னா?
சாப்பிடுற நேரம் ஆயிட்டா...?
என்று திருப்பிக் கேட்டார்.
"சோறு சாப்பிட்டாச்சா....?"என்று சைகையோடு
உரக்கக் கத்தியபடிக் கேட்டார் மாடத்தி.
"காது நல்லா கேட்கும் தாயி...
கஞ்சிதண்ணி கூடிக்கல இல்ல....
அதுதான் கொஞ்சம் காது பஞ்சடைச்ச
மாதிரி இருக்கு."
என்றார் பாட்டி.
"எங்க வீடுக்கு வாரீயளா?
வடிதண்ணியும் கஞ்சியும் வச்சுருக்கேன்.
இரண்டு மொடக்கு குடிச்சீங்கன்னா
காது தொரந்துரும்....பாவம்...வாங்க"
கையைப் பிடித்து எழும்ப வைத்தார்
மாடத்தி.
"விடு தாயி....யாராவது பார்த்துட
போறாவ...." என்றபடி அங்குமிங்கும்
பார்த்தார் அன்னப்பழம் பாட்டி.
"அங்க என்னத்தப் பார்க்கிய....
மருமகளுவ பார்த்துருவாங்க என்றா?
சவம் விடுங்க....அவளுக கிடக்காளுக
மாமியாருக்கு வேளாவேளைக்கு கஞ்சிதண்ணி
கொடுக்காதவளுக....அவளுவளுக்கு எதுக்குப்
பயப்படுறீக...."
"அதுவல்ல தாயி ...மவன் வந்தா
சும்மா கெடச்சத தின்னுகிட்டு
வீட்டுள்ள ஒரு மூலையில கெடக்கப்பிடாதா
என்று சண்டை பிடிப்பான்...அதுதான் பார்க்கிறேன்."
தயங்கினார் பாட்டி.
"சண்டை பிடிச்சா நான் சொல்லிக்கிறேன்.
வாங்கன்னா...." வலுக்கட்டாயமாக இழுத்தார்
மாடத்தி.
"இனி இருந்து என்னத்தைச் பண்ணச்
போறேன்.
அவுரு போன உடனேயே என்னையும்
கூட்டிட்டுப் போயிருக்கணும்
அந்த மவராசன் என் கையால
செல்ல தண்ணி வாங்கி
குடிச்சிட்டுப் போய் சேர்ந்துந்துட்டாரு...
நான் நாய்படாத பாடுபடுறேன்."
புலம்பினார் பாட்டி.
"எல்லார் பாடும் நாளைக்கு இப்படித்தான்.
ஒருத்தியை கைய பிடிச்ச அன்னைக்கு
மவனுக்கு அம்மா கண்ணுக்குத் தெரியாது.
நாளைக்கு என் வீட்டுலேயும் இதுதான்
நடக்கப் போவுது....
தெருவுல உட்கார்ந்து வார ஆளையும்
போற ஆளையும் பார்த்துட்டு மனச
தேத்திக்கிட வேண்டியதுதான்."
மாடத்தி ஆறுதல் சொல்வதுபோல தனக்கும்
இதுதான் கதியா இருக்குமோ என்ற கவலையையும்
சேர்த்து வெளிப்படுத்தினார்.
"அப்படி என்ன மக்கா தப்பு
பண்ணிட்டேன்.
ஒரு தம்படிகாசு கையில் வைக்கல
கிடைச்ச வருமானத்தை எல்லாம்
குருவி சேத்து வச்ச மாதிரி சேத்து
வச்சி அவனுவளுக்குத்தான
சொத்து வாங்கி வச்சேன்."
"மதிகெட்டவன் மண்ணுல போடும்பாவ
மதிகெட்டுப்போய் மண்ணுல போட்டுட்டு
கையில காசு இல்லாம நிற்கிறிய
நானும் உங்கள மாதிரித்தான்.
கையில சல்லிக்காசு கிடையாது.
உங்க மவனுவளாவது பரவாயில்லை வீட்டோட
வச்சகருக்கானுவ....என்னை
வீட்டையும் புடுங்கிட்டு தெருவுல விட்டுபுடுவான்
என் மவன்" என்று மகனுக்கு சான்றிதழ்
வழங்கினார் மாடத்தி.
"அப்படியெல்லாம் சொல்லாத....?
உன் மவன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான். செல்லபாண்டி தங்கமான பிள்ளை" நற்சான்றிதழ் வழங்கினார் பாட்டி.
"உங்க புள்ள மட்டும் நல்லவன்
இல்லியாக்கும் ? அம்ம...அம்மன்னு உங்க
காலுக்குள்ளேயே சுத்தி சுத்தி வந்தவனுங்கதான....அவனஉவளஏ
ஒருத்திய கையப்புடிச்சதும் உங்கள் வுட்டுபுட்டானுவ"
"அது ஒரு காலம்...இப்போ எல்லாம் மலை ஏறி போச்சு தாயி.
இருந்தாலும் மாடத்தி இப்புடி மாறிப்
போவானுக என்று நான் நினைக்கல.
என்னை காணாம அரைமணிநேரம்
இருந்துகிட மாட்டானுவ."
சொல்லிகிட்டு தோள்சீலையால் கண்ணீரைத்
துடைத்த பாட்டி,
"மண்ணு பொன்னா விளையுது.
இருக்க இருக்க மண்ணுக்கு
மதிப்புத் தான். மனுஷனுக்குத்தான்
இருக்க இருக்க மதிப்பு குறைச்சு போச்சு...." என்று சொல்லி பெருமூச்சு விட்டார்.
"உங்களுக்கு அப்படி என்ன மதிப்பு
குறைஞ்சி போச்சு....
நீங்க நாலு ஊருக்கு புத்திமதி சொல்லுவியள...நீங்க ஒண்ணும் குறைஞ்சு
போவல...வீட்டுக்கு வீடு.
தோட்டம் தொரவு...தொழுவது நிறைய மாடு
பேரன் பேத்தி என்று உங்கள் மாதிரி வாழ
கொடுத்து வைக்கணும்.
பேசாம என்கூட வாங்க "
" அது யாருக்குத் தெரியுது தாயி...
சத்தம் காட்டாம கஞ்சியோ தண்ணியோ
கொடுக்கத வாங்கிக் குடிஞ்சிகிட்டு
ஒரு மூலையில படுத்துத் தூங்குங்க.
நீங்க இப்படி வார ஆளுகிட்டேயும்
போகிற ஆளுகிட்டேயும்
புலம்புவது தான் எங்களுக்குப்
புடிக்கல இன்னு மூத்த மருமவ
சொல்லுறா.
அப்படி அவளை என்ன பொட்டா
உரசிபுட்டேனா?
கையில் ஒரு காக்காசு இல்லாம
மொத்த சொத்தையும் எழுதி வாங்கிகிட்டு
வாயை மூடு...வாயை மூடுன்னு
என்னா பாடு படுத்துறாளுவ தாயி..."
"சொத்துபத்த நாம் உயிரோடு
இருக்கும்போது புள்ளைகள் பெயருக்கு எழுதி
வச்சா கடைசி காலத்துல திருவோடு தான்
மிச்சம் ....எத்தனை வீட்டுல இப்படி
நடக்கிறதை பார்த்துருக்கோம்.
நீங்க நல்ல விவரம் உள்ளவுக...
கடைசியில் நீங்களே கையில்
ஒண்ணயும் வைக்காம இருந்திருக்கியள.
நமக்குன்னு ஏதாவது ஒரு பிடித்தலம்
வேணும்..."
"
" அந்த அறிவுதான இல்லாம
போச்சு..தாயி..பாசம் கண்ணை மறைச்சுட்ட தாயி"
"கண்ணை மறைக்கல....சொத்துபத்து
தாத்தா பெயருக்கு இருந்தா அக்கா
தங்கச்சி வந்து பிடுங்கிட்டுப் போயிருவாவன்னு
நினைச்சி மகனுவ பெயருக்கு எழுதிக்
கொடுத்திய....இப்போ நல்லா அவதிப்
படுறிய... நான் சொல்லுவது சரிதான...."
"இப்படி பண்ணுவாளுவன்னு நினைக்கலிய"
" இப்பவும் மகனை குறை சொல்லுறியளா...
உங்க மவன் என் அம்மைக்கு வேளாவேளைக்கு கஞ்சிதண்ணி
குடுங்கன்னு சொன்னா கொடுக்காம எங்க
போயிருவாளுவ?"
"அவன் சொல்லாமலா இருப்பான்?"
"ஆமா....சொல்லியிருப்பான்... சொல்லியிருப்பான்.
உங்க மவனுவள நீங்கள்தான் மெச்சிகிடணும்.
எல்லாம் பம்மாத்துப் பசங்க...."
கேட்டதும் பாட்டியின் முகம் அப்படியே கூம்பி
போச்சு.
"நான் உங்க மவனுவள ஒண்ணும்
சொல்லல.....மவனுவள சொன்னதும்
முகம் வாடிப் போச்சுல்ல...."
"அப்படி எல்லாம் இல்ல..."
"உங்க மகள் வீட்டுல போயி ஒரு மாசம்
இருந்துட்டு வர வேண்டியதுதான...
போனா என்ன பொதடிய பிடிச்சி
வெளியையா தள்ளிருவா?"
"எந்த மூஞ்சியை வச்சிகிட்டுப்
போவேன்....ஏற்கனவே எல்லாத்தையும்
மவனுவளுக்கு குடுத்துட்டு எனக்கு
ஒண்ணும் தரலன்னு சண்டை புடிச்சிட்டுதான்
போயிருக்கா..."
"சரியாத்தான் கேட்டுருக்கா...
அவளும் நீங்க பெத்த புள்ள தான?
அவளுக்கும் கொஞ்சம் குடுத்துருக்கலாமில்ல...
அவளும் தினக்கூலிக்குத்தான
போறான்னு சொல்லுறிய..."
"அப்படி நினைக்காம விட்டதுனாலதான
போக போக்கிடம் இல்லாம அலையுறேன்."
"சரி...விடுங்க . நடந்ததை நினைச்சி
வருத்தப்பட்டு என்ன ஆவப் போவுது?"
"உங்கள மாதிரிதான் வடக்குத் தெரு
ஞானம் பாட்டியும் புலம்பிட்டுக் கிடந்துது."
"அவளுக்கும் அவ மவன் கஞ்சி கொடுக்கலியா?"
"கஞ்சி கொடுக்கலியாவா....வீட்டையும்
எழுதி வாங்கிட்டு வீட்டைவிட்டே துரத்திபுட்டானுவ..."
"அப்புறம். ? "
"அப்புறம் வேறு என்ன...? முதியோர்
இல்லத்துல கொண்டு அக்கம்பக்கத்துல
உள்ளவுக சேர்த்துவிட்டுருக்காவ..."
"முதியோர் இல்லத்திலா? அட பாவி மக்கா...
பெத்த தாய்க்கு கஞ்சி குடுக்காத
நீங்களெல்லாம் மனுஷங்களா?"
"ஊர் முழுக்க இதே கதைதான்....
இப்போ யாரையும் குத்தம் சொல்லி
பலனில்லை....தாய் தகப்பன்மேல
பாசமில்லாம
போச்சு....அதைத்தான் சொல்லணும்.
நாளைக்கு அவன் புள்ளையும் அவனுக்கு
இதைத்தான் திருப்பிச் செய்வான் என்று
யாருக்கும் அறிவு இல்ல..."
"அப்படி சாபம் போடாத தாயி....
அவன் நல்லா இருந்துட்டுப் போறான்"
"உங்கள ஒருநாளும் திருத்த முடியாது?"
"அப்போ .... அந்த ஞானம்
ஊருக்குள்ள இல்லியா?
அவ புள்ளைகளுக்கு எம்புள்ளைகள்
தேவல போல...."
"ஆமா....தேவல...தேவல...வாங்க"
"வீட்டுக்கு வீடு வாசல் படிதான்"
சொல்லிக்கொண்டே நடந்தார் பாட்டி.
"
Comments
Post a Comment