சித்தியும் மீன் குழம்பும்
சித்தியும் மீன் குழம்பும்
எங்க சித்தியை மாதிரி
சுவையாக யாரும் சமையல் செய்துவிட
முடியாது.
மகராசி அவள் கைப்பக்குவம் மாதிரி
யாருக்கும் வராது என்று எங்கள்
பாட்டி சொல்லிச் சொல்லிப் பெருமைப்
படுவார்.
ஆனால் என்ன சுவையாக சமைத்து என்னப்
பிரயோஜனம்?
வாழ்க்கை சுவையாக அமையவில்லையே!
அந்தக் குழம்புதாங்க
அவர் வாழ்க்கைக்கே எமனாகப்
போய்விட்டது.
சித்தப்பா சாப்பாட்டை அவ்வளவு
ருசித்துச் சாப்பிடுபவர் இல்லை.
சொல்லப் போனால் ஏதோ கடமைக்கு
சாப்பிடுவதுபோல சாப்பிட்டுவிட்டு
எழுந்து போய்விடுவார்.
ஒரு ரசனையே இல்லாத ஆள்
உன் சித்தப்பா
என்று சித்தி அடிக்கடி சொல்லி
வருத்தப்பட்டுக் கொள்வார்.
ஆனாலும் சித்தி எந்த இடத்திலும்
சித்தப்பாவைவிட்டுக் கொடுத்துப் பேசமாட்டார்.
சித்தப்பா அதற்கு எதிர்மாறானவர்.
எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்குமோ
அங்கெல்லாம்
சித்தியை குறைகூறாமல் இருக்க மாட்டார்.
ஒருநாள் என்றால் பரவாயில்லை.
நித்தம் நித்தம் இதுதான் என்றால்....
கேட்டுக் கேட்டு சித்திக்கு மரத்துப்
போய்விட்டது.
இப்போ எல்லாம் சித்தப்பா
குறைகூறாமல் இருந்தால்
அதுதான் ஆச்சரியமாக இருக்கும்.
ஆனால் எல்லா நேரங்களிலும் இது
நல்லா இருக்காது பாருங்க....
வீட்டுக்காரனே அவளை மதிக்க
மாட்டார் என்றால் அடுத்தவர்கள் எப்படி
மதிப்பார்கள்?
ஆளாளுக்கு சித்தியைப் பார்த்து இளக்காரமாக
பேச ஆரம்பித்தார்கள்.
சித்தி கூனிக் குறுகிப்போவார்.
கொண்டவன் சரியாக இருந்தால்
பொண்டாட்டி
கூரைமேல் ஏறி சண்டை போடலாம்.
இங்கு கொண்டவனே சரியில்லை என்கிறபோது
யாரிடம் போய் சொல்வது?
சித்தப்பாவின் குணமே இப்படித்தானா?
இல்லை வேண்டுமென்றே எந்த
உணர்வும் இல்லாததுபோல நடந்து
கொள்கிறாரா?
ஒரு புரியாத புதிர் என் சித்தப்பா.
ஒருநாள் இப்படித்தான் வீட்டுக்கு
சித்தப்பாவின் தூரத்து உறவினர் ஒருவர்
வந்திருந்தார்.
சித்தியும் மீன்குழம்பு வைத்திருந்தார்.
சும்மாவே மீன்குழம்பு சுவையாக இருக்கும்.
சித்தி வேறு குதிப்புமீன் குழம்பு மண்சட்டியில்
வைத்திருந்தார்.
கேட்கவா வேண்டும்?
"உறவினருக்கும் சாப்பாடு போடு"
என்றார் சித்தப்பா.
சித்தியும் மீன்குழம்பு ஊற்றி
இரண்டு மீன்துண்டு வைத்து சாப்பாடு
கொடுத்தார்.
சாப்பிட்டவர் சாப்பிட்டுவிட்டு சும்மா
போகவேண்டியதுதானே.
"ராஜூ சம்சாரம்
சமையலைச் சாப்பிடவே இங்கே
அடிக்கடி வரணும் போலிருக்கிறது.
ராஜூ நீ கொடுத்து வைத்தவன்ப்பா....
மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம் என்று
சொல்வார்கள்.கணவன் மனதில் இடம்
பிடிக்க வேண்டும் என்றால் முதலாவது
கணவன் வயிற்றில் இடம்பிடிக்க வேண்டும்
என்று சொல்வார்கள்.உன் மனைவிக்கு
அந்தக் கலை நன்றாகவே
தெரிந்திருக்கிறது." என்றார்.
அத்தோடு விட்டுருந்தால் பரவாயில்லை.
"எனக்கும் வாய்த்திருக்காளே ஒருத்தி.
ஒரு உப்பு சப்பு இல்லாமல்
குழம்பு வைத்து ஊற்றுவாள்.
அதைத் தின்னு தின்னு நாக்கே செத்துப்
போச்சு. என் அம்மா போன
பிறகு மறுபடியும் இன்னைக்குத்தான்
வாய்க்கு ருசியா சாப்பிட்டுருக்கேன்
என்று கொஞ்சம் கூடுதலாகப்
புகழ்ந்து தள்ளினார்.
சித்தப்பா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
தன் மனைவியை இன்னொரு ஆண்
புகழ்வதை எந்த ஆண்தான் பொறுத்துக்
கொள்வார்?
அந்த நேரத்தில் எங்க சித்தப்பா
முகம் போன போக்கைப் பார்க்கணுமே!
எனக்கு சிரிப்பு சிரிப்பாக
வந்தது.
அடக்கிக் கொண்டு சித்தி முகத்தைப்
பார்த்தேன். ஏறக்குறைய என் சித்தியும்
என் மனநிலையில்தான் இருந்தார்.
சித்தப்பாவின் முகம் அப்படியே கொஞ்சம்
கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.
சித்தி நிலைமையைப் புரிந்துகொண்டு
சட்டென்று வீட்டிற்குள் சென்று விட்டார்.
வந்த விருந்தினர் சும்மா போக
வேண்டியதுதானே...
போகும்போது "அந்தத் தாயை எங்கே?
வயிறார சோறு போட்டவளிடம் ஒரு வார்த்தை
சொல்லிவிட்டுப் போக வேண்டாமா?
என்று மறுபடியும்
வீட்டுக்குள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தார்.
"அவள் சமையலறையில் ஏதாவது வேலையில்
இருப்பாள். நான் சொல்லிக்கிறேன்.
நீங்க போங்க " என்று
சித்தப்பா மறைத்தபடி முன்னால்
வந்து நின்று கொண்டார்.
ஆனாலும் வந்தவர் விட்டபாடில்லை.
"தாயோ...?தாயோ...? "என்று குரல்
கொடுத்து சித்தியை அழைத்தார்.
சித்தி வெளியில் வரவில்லை.
உள்ளே வேலையாக இருப்பாள் என்று
சித்தப்பா மறுபடியும்
சமாளித்துப் பார்த்தார் .
"அதனால் என்ன ?நானே போய்
சொல்லிக் கொள்கிறேன்"
என்று சித்தப்பாவை தள்ளிவிட்டுவிட்டு
விடுவிடுவென்று சமையலறையை
நோக்கிச் சென்றார் அந்த மனிதர்.
சித்தப்பாவால் அதற்கு மேல்
அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
சித்தப்பாவும் அந்த மனிதர்
பின்னாலேயே வீட்டுக்குள் சென்றார்.
அங்கே சித்தி அடுப்புப் பக்கத்தில்
நின்று கொண்டிருந்தார்.
"நான் புறப்படுகிறேன் தாயி...
வயிறார சோறு போட்ட....
ஒரு வார்த்தை சொல்லாமல் போகப்பிடாது
பார்த்தியா?
..மீன் குழம்பு வைத்த உன்
கைக்கு தங்க வளையல் தான் போடணும்"
என்று சிரித்தார்.
சித்தி சிரிப்பை அடக்க முடியாமல்
சிரித்து விட்டார்.
சித்தியை முறைத்துப் பார்த்த
"வாங்க...பஸ் வருகிற
நேரம் ஆகிவிட்டது "என்று முதுகைப்
பிடித்துத் தள்ளாத குறையாக
அந்த மனிதரைத் தள்ளிக் கொண்டு
போனார்.
ஒருவழியாக அந்த மனிதரை பஸ் ஏற்றி விட்டுத்
திரும்பி வந்த சித்தப்பா மூஞ்சில் எள்ளும்
கொள்ளும் வெடித்தது.
"ஒரு ஆள் வந்து கொஞ்சம் பேசிடகூடாதே...
உடனே பல்லை இளிச்சிட வேண்டியது.
அவன் என்ன சொல்லிட்டான் என்று
அப்படி பல்லைக் காட்டினாய் ?"என்று காட்டுக்
கந்தல் கத்தினார்.
சித்தப்பா ஒருநாளும் இப்படி
குரலை உயர்த்திப் பேசி நான்
பார்த்ததில்லை.
சித்திக்கும் இது அதிர்ச்சியாகத்தான்
இருந்திருக்க வேண்டும்.
"அதனால்தான் என்றாயிற்று உங்களுக்கு ?"
என்று எதிர்க்கேள்வி கேட்டுவிட்டார்.
"எதிர்த்தா பேசுற?
என்னை எதிர்த்துப்பேச தைரியம்
வந்து விட்டதோ ?என்று கையை ஓங்கியவர்
பின்னர் என்ன நினைத்தவரோ
அப்படியே கையைக் கீழே போட்டுவிட்டு
அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
அன்று முழுவதும்
சித்தி
எதைப் சொன்னாலும் குற்றம் கண்டுபிடித்துக்
கொண்டும்
சண்டைப் போட்டுக்கொண்டும்
இருந்தார் சித்தப்பா.
சந்தேகத்திற்கான முதல் விதை
இங்கேதான் விழுந்தது.
அதன் பின்னர் சித்தியை
வெளியே அனுப்பவே
சித்தப்பாவிற்குப் பயம்.
அழகான மனைவி அமைந்துவிட்டால்
கணவனுக்கு நிம்மதி இருக்காது
என்பார்கள்.
எங்க சித்தி விசயத்தில் நன்றாக
சமைப்பது கூட சந்தேகத்திற்கு
வழி வகுத்து விட்டது.
யாரிடம் பேசினாலும் சந்தேகம்.
வீட்டைவிட்டு வெளியே எட்டிப்
பார்த்தாலே...தெருவில் யார்
போகிறார்கள் என்று ஓடிப்போய்
எட்டிப் பார்ப்பார் சித்தப்பா.
ஒவ்வொரு நேரம் ஏதாவது எருமை
போய்க்கொண்டிருக்கும்.
இப்படி ஒரு எருமை கூட எங்கள்
சித்தப்பா கண்ணைத் தப்பி
எங்கள் தெருவில் போய்விடமுடியாது.
யாராவது ஒரு ஆண் இரண்டு மூன்று
முறை அந்தத் தெருவில் வந்துவிட்டால் போதும்.
"அவன் என்ன நம்ம வீட்டையே நோட்டம்
விட்டுக்கிட்டு திரிவது போலிருக்கிறது ?என்பார்.
தண்ணீர் பிடிக்கப் போனால் கூட
யார்கூடவாவது பேசுவதுபோல
குழாயடிப்பக்கமாகப் போய்
நின்று கொண்டு
சித்தியையே பார்த்துக் கொண்டு நிற்பார்.
சில நேரங்களில் ஒவ்வொரு பெண்கள்
"என்ன செல்லத்தங்கம் உன் வீட்டுக்காரரு
ஒரு நிமிஷம் கூட உன்னை காணாமல்
வீட்டுல இருக்கமாட்டாருபோல....
குட்டி போட்ட பூனைமாதிரி உன்னையே சுத்திகிட்டு
இருக்காரு" என்று கேட்க ஆரம்பித்தனர்.
அதற்கு சித்தி மெதுவாக சிரிப்பாரே தவிர
பதில் எதுவும் சொல்லமாட்டார்.
.
சித்தி தண்ணீர் சுமந்து
செல்லும்போது பின்னாலேயே செல்வாரே தவிர
ஒருநாளும் உதவி செய்ததே கிடையாது.
அங்கே போகாதே இங்கே போகாதே
என்று ஆயிரத்தெட்டு தடைப் போடுட்டுக்
கொண்டே இருப்பதை
வெளியில் சொல்ல முடியாமல் சித்தி
உள்ளுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு
இருந்தார்.
இவை எல்லாவற்றுக்கும்
தூபம் போடுவது போல
ஊர் திருவிழா வந்தது.
இரண்டாவது நாள் திருவிழா.
ஊரே கோவிலில் கூடியிருந்தது.
சித்தியும் திருவிழாவிற்கு எடுத்துக்
கொடுத்த புதுச் சேலையைக் கட்டிக்கொண்டு
புறப்பட்டார்.
வெளியே போன சித்தப்பா அப்போதுதான்
வீட்டிற்கு வந்தார்.
புதுப்புடவையில் அன்று பார்ப்பதற்கு
சற்று அதிகமாகவே
அழகாக இருந்தார் சித்தி.
சித்தியையே மேலும் கீழும் பார்த்தார் சித்தப்பா.
"இப்போ யாரைப் பார்க்க இப்படிச்
சீவி சிங்காரிச்சிகிட்டு புறப்பட்டுப்போற ."
என்றார் குதர்க்கமாக.
"திருவிழாவுக்கு போறேங்க....
வில்லுப்பாட்டு கேட்க வா என்று அம்ம
சொல்லிவிட்டுருக்காவ "என்றார் சித்தி.
"இப்போ வில்லுப்பாட்டு கேட்பது
ஒண்ணுதான் குறைச்சல்.
ஒண்ணும் போகாண்டாம்.வில்லுப்பாட்டு
வீட்டுல இருந்தே கேளு.....ஊரு முழுவதும்
குழாய் கட்டி வச்சிருக்கானுவ.
வீட்டில் இருந்து கேட்டால் போதும் "என்று
கறாராக சொல்லிவிட்டார் சித்தப்பா.
அப்போதுதான் எங்கள் பாட்டி
செல்லதங்கம் இன்னும் கோவிலுக்கு
வரலிய....என்று எங்க தம்பியை அனுப்பி
கையோடு சித்தியை
கூட்டிட்டுப் வா என்று அனுப்பியிருந்தார்கள்.
தம்பி வந்து சொன்னதும்",எங்க அம்மா
கூப்பிட்டு அனுப்பியிருக்காவ. நான்
போறேன்" என்று கிளம்பினார் சித்தி.
அவ்வளவுதான்.
ஓடிவந்த சித்தப்பா
சித்தி சேலையைப் பிடித்து
இழுத்தார்.
" என்னங்க பண்ணுறீங்க?
சின்ன பிள்ளைகள்
நிற்கிற இடத்துலே "என்று சித்தி
சேலையைவிட மறுத்து
இழுத்துப் பிடித்தார்.
முரட்டுத்தனமாக பிடித்து
இழுத்த சித்தப்பா
நவீன துச்சாதனனாக மாறி
உடுத்துருந்த சேலையை உருவி
எரிந்து கொண்டிருந்த அடுப்பில்
போட்டுவிட்டார்.
எங்களுக்கு பக்கென்று ஆகிவிட்டது.
சித்தி ஓடிப் போய் வீட்டிற்குள்
கதவை மூடிக் கொண்டார்.
சித்தப்பா ஒன்றும் நடக்காதது போல
அவர் பாட்டுக்கு கட்டிலில் போய்
படுத்துக்கொண்டார்.
எனக்கு ரொம்ப பயமாக போய்விட்டது.
சித்தி ஒண்ண கெடக்க ஒண்ணு
பண்ணிடக்கூடாதே என்று
"சித்தி சித்தி "என்று கதவைத் தட்டியபடி
கூப்பிட்டுப் பார்த்தேன்.
சித்தி கதவை திறக்கவில்லை.
"தம்பி, ஓடிபோய் பாட்டியைக் கூட்டிவா"
என்று தம்பியை அனுப்பிவிட்டு
வாசல் பக்கமே நின்று கொண்டிருந்தேன்.
தம்பி பாட்டியிடம்
நடந்தவற்றை எல்லாம் சொல்லியிருக்கான்.
பாட்டி பதறியடித்துக் கொண்டு
ஓடி வந்தார்.
அழுது கொண்டே சித்தி இருந்த
அறைக்கதவை
தட்டினார்.பாட்டியின் குரலைக் கேட்டதும்
கதவைத் திறந்த சித்தி
பாட்டியைக் கட்டிக் கொண்டு அழுதார்.
"இந்த சைக்கோ பய கூட இருக்க
இருக்க வேண்டாம்.
வா நம்ம வீட்டுக்கு போகலாம்"
என்று அழைத்தார்
பாட்டி.
அதற்குள் எங்க அம்மா அப்பா என்று
நான்கைந்து பேர் வந்துவிட்டார்கள்.
என்ன நடந்தது என்று சித்தப்பாவிடம்
விசாரித்தார்கள்.
சித்தப்பா ஒன்றுமே பேசாமல்
அப்படியே கிடந்தார்.
" இன்றைக்குச் சேலையை எரித்தவன்
நாளைக்கு என் பிள்ளையையும்
எரிச்சு விடுவான். இவனை நம்பி இனி
ஒரு நிமிஷம் கூட
என் பிள்ளையை இங்கே விட்டுவிட்டு
போக மாட்டேன் "என்று
பிடிவாதமாகப் பேசி
சித்தியை கையோடு கூட்டிட்டு
போய்விட்டார் பாட்டி
அதன் பிறகு சித்தப்பா ஒருமாதிரி
ஆகிவிட்டார்.
ஒருமாதம் இருந்து பார்த்தார்.
மெதுவாக பாட்டி வீட்டுப் பக்கம்
வந்து எட்டிப் பார்க்க
ஆரம்பித்தார்.
யாரும் கண்டு கொள்ளவே இல்லை.
ஒரு தாத்தாவை சமாதானம்
பேச அனுப்பி வைத்தார்.
ஆனால் எங்க வீட்டுப் பெரியவர்கள்
யாரும் இறங்கி வரத் தயாராக இல்லை.
ஆனால் சித்தியால் முழுதாக சித்தப்பாவை
வெறுக்க முடியவில்லை.
"உங்கள் சித்தப்பா தெரு முக்குல
நிற்கிறார்களா...?"
என்று எங்களிடம் கேட்டு
சித்தப்பாவைப் பற்றி தெரிந்துகொள்ள
ஆசைப்படுவார்.
சைக்கோ என்று
சித்தப்பாவை ஒரு இடத்தில் கூட
சித்தி சொல்லவே இல்லை.
"சித்தப்பாவைப் பார்க்க பாவமாக
இருக்கு.
இனி யார் என்னை மாதிரி அவருக்கு
குழம்பு வைத்துக் கொடுப்பார்?"
என்று சித்திக்கு சித்தப்பா மீது
கரிசனம் இருந்து கொண்டேதான்
இருக்கிறது.
ஆனால் புரிய வேண்டியவர்கள் புரியணுமே!
இப்போ எல்லாம் சித்தி மீன்குழம்பு வைப்பதே
இல்லைங்க....
ஒரு மீன்குழம்பில்தொடங்கிய
சந்தேகம் ஒரு குடும்பத்தை எப்படி
புரட்டிப் போட்டிருக்கிறது பாருங்க.
காலம் மட்டும் எங்கள் சித்தப்பாவுக்கு
சித்தி கையால்
மீன் குழம்பு சாப்பிடும் கொடுப்புன இல்லாம
பிரித்து விடுமோ என்று
எங்களுக்கு பயமாக இருக்கிறது.
யாருக்குத் தெரியும்?
யாரு வாழ்க்கை எந்த நேரத்தில்
எப்படி எப்படி எல்லாம்
மாறும் என்பது?
Comments
Post a Comment