ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி யாவது உண்மையா?
ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி யாவது உண்மையா ?
உண்மைதாங்க...ஐந்து பெண் பிள்ளைகளைப்
பெற்றால் அரசன் என்ன? யாராக இருந்தாலும்
ஆண்டிதான்.
தங்கம் என்ன வாங்கும்படியாகவா இருக்கிறது?
என்ற உங்கள் புலம்பல் என் காதுகளில்
விழுகிறது.
ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் திருமணம்
செய்து வைத்து, சீர் செனத்தி என்று
ஒவ்வொவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து
செய்து முடித்து எழும்பும்முன் கூன் குறுக்கு
எல்லாம் ஒடிந்தே போய்விடும்.
அரசனாலேயே இதனை எளிதாகச் செய்துவிட
முடியாது. சாதாரண எளிய மக்களால்
எப்படி செய்துவிட முடியும் ?
கையில் இருக்கும் ஊறுனது பாருனது
எல்லாம் கொடுத்துவிட்டு
ஓட்டாண்டியாகப் போக வேண்டியதுதான்.
இப்படி எத்தனை குடும்பங்களைப்
பார்த்திருப்போம்.? அதனால்தான் ஐந்து
பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்ற
பழமொழி சொல்லப்பட்டிருக்கும்.
இதுதானே தங்களின் எண்ணம்.
இந்தப் பழமொழிக்கான பொருள்
நீங்கள் நினைப்பதுபோல் ஐந்து பெண்
பிள்ளைகளைப் பெற்றால் ஆண்டியாகிவிடுவோம்
என்பதாகத்தான் இருக்குமோ?
சற்றே சிந்திக்க வேண்டிய பழமொழிதான்.
அப்படிச் சொல்லி இருந்தால் அது
பெண்கள் குலத்திற்கே இழிவு அல்லவா!
பெண்பிள்ளைகள் பெற்றோருக்குத் தொல்லை
கொடுக்கப் பிறந்தவர்கள் என்பது
போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுவிடுமே!
எதார்த்தநிலை அதுதானே
என்ற உங்களில் ஒரு சிலரின்
மனவோட்டம் எனக்குப்
புரியாமலில்லை.
ஆனால் இன்று ஆண் - பெண் என்ற
வேறுபாடு இல்லாது உழைக்கும் நிலைக்கு
பெண்களும் முன்னேறி வந்துவிட்டனர்.
இந்தக் காலத்தில் போய் பெண் பிள்ளைகளைப்
பெற்றவன் ஆண்டி என்றால் சரியாக
இருக்காது. அதனால் ஐந்து பெற்றால் என்பது
பெண்பிள்ளைகளைக் குறிப்பதாக
இருக்காது.இருக்கவும் கூடாது.
இந்த ஐந்து பெற்றால் என்பதற்கு வேறு
பொருள் இருக்கும். இருக்க வேண்டும்...
அப்படியானால் இந்தப் பழமொழிக்கான
உண்மையான பொருள்தான் என்ன?
எத்தனை நாட்கள் இந்தப் பழமொழியைக்
கேட்டிருக்கிறோம்.
தவறான பொருளிலேயே பயன்படுத்தியும்
வந்திருக்கிறோம்.இப்போதுபோய்
நீங்கள் நினைப்பது போலல்ல.
இந்தப் பழமொழிக்கான பொருள் வேறு
என்றால் ஏற்போமா?
மனம்தான் ஒத்துக்கொள்ளுமா?
நீங்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும்
பொருள் நீங்கள் நினைப்பது போல
இல்லைங்க...
இத்தனை நாளும் தப்பு தப்பாக
நினைத்துக் கொண்டிருக்கிறோம் .
இந்தப் பழமொழிக்கான பொருள்
கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள ஐந்து குணநலன்கள்
கொண்டோர் குடும்ப உறுப்பினராக
வாய்க்கப்பெற்றிருந்தால் அந்தக் குடும்பம்
தலை நிமிர வழியே கிடையாதாம்.
வறுமை வாசலருகே வந்து நின்று
பல்லைக்காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கும்
என்பதுதாங்க.
அந்த ஐந்த குணநலன்கள் கொண்டோர்
யார் யாரெல்லாம் என்றுதானே கேட்கிறீங்க...?
வீட்டுத் தலைவியில் இருந்தே
தொடங்குவோம்.
முதலாவது குடும்பத்தின் பொருளாதாரம்
தெரியாமல் ஆடம்பரமாக குடும்பத்தை நடத்தி
வீட்டை வறுமையில் கொண்டுவிடும் மனைவி;
ஒருவனுக்கு அமைந்துவிட்டால்....
வரவு எட்டணா...செலவு பத்தணா
என்று வரவுக்கு அதிகமாக செலவு
செய்பவளாக தாய் இருந்தால்
கடைசியில் குடும்பம் கடனில் மூழ்கி,கலங்கி,
நிம்மதி இழந்து வாழ வேண்டியிருக்கும்.
ஆடம்பர நாட்டம் கொண்ட தாய் அமைந்துவிட்டால்...
தேட்டம் வீட்டில் தங்காமல் ஓட்டம்
பிடித்துவிடுமே!
பிறகு குடும்பம் எப்படி தலை நிமிர்ந்து
வாழ முடியும்?
இரண்டாவதாக குடும்பப் பொறுப்பில்லாமல்
திரியும் தந்தை.:
தந்தை என்றால் குடும்பப் பொறுப்பு
அத்தனையையும் கையில் எடுத்து
நடத்துபவராக இருக்க வேண்டும்.
தந்தை குடும்பப் பொறுப்பை உணராது
தான்தோன்றித் தனமாகத் திரிந்தால்....
குடும்பம் வாழவழி தெரியாது திணறிப்
போய்விடும். வருமானத்தைக் கையில்
வைத்துக் கொண்டு பொறுப்பில்லாமல்
குடும்பத்தலைவன் செலவு செய்துகொண்டு
திரிந்தால் குடும்பம் எப்படி சரியான
பாதையில் செல்ல முடியும் ?
மூன்றாவதாக கணவன் சொல் கேளாத
மனைவி.
அடங்காப்பிடாரி மனைவியாக வாய்த்துவிட்டால்
அந்தக் குடும்பம் சின்னாபின்னப்பட்டுப் போகும்.
கணவன் ஒன்று சொல்ல...
மனைவி நான்கு பேச...
நீ என்ன சொல்ல?
நான் என்ன கேட்க
என்று ஏட்டிக்குப் போட்டியாக குடும்பம்
நடத்தும் மனைவி அமைந்துவிட்டால்....
மனம் ஒடிந்து போய்விடுமே!
குடும்பம் எப்படி நிம்மதியாக
இருக்க முடியும்?
நான்காவதாக உடன்பிறந்தவர்களை ஏமாற்றும்
பண்பு கொண்ட உடன் பிறப்புகள்.:
உடன்பிறப்புகள் நம்பிக்கைத் துரோகம்
செய்பவர்களாக ,அன்பில்லாதவர்களாக
வாய்த்துவிட்டால் எந்தக் குடும்பமும்
பேர் சொல்லும்படி வாழமுடியாது.
தான் ...தனது என்ற சுயநலம்
உடன்பிறப்புகளிடம் மிகுந்திருந்தால்
உறவுகளுக்குள் நெருக்கம் இருக்காது.
உறவுகளுக்குள் ஒரு போலித்தனம் வந்து
ஒட்டிக் கொள்ளும்.
அப்படிப்பட்ட குடும்பமானது தனித்தனியாகச்
சிதறு தேங்காய்போல் சிதறிப் போகுமே தவிர
எப்படி அவர்களுக்குள் ஒரு
நெருக்கம் ஏற்படும் ?
குடும்பத்திற்குள் எப்படி ஒற்றுமை நிலவும்?
ஐந்தாவதாக பெரியவர்களை மதிக்காத,
பெற்றோர் சொல் பேச்சு கேட்காத பிள்ளைகள்.
பெரியவர்களை மதித்து அவர்கள்
சொற்படி நடக்கும் பண்பு பிள்ளைகளுக்கு
வேண்டும். அப்படிப்பட்ட பண்பு இல்லாத
பிள்ளைகள் வாய்த்துவிட்டால்...
தன் மனம்போன போக்கில் ஊதாரியாக
வாழும் பிள்ளைகள் இருந்தால்
குடும்பம் எப்படி தழைக்க முடியும் ?
எப்படி தலை தூக்க முடியும்?
இந்த ஐந்தும் ஒட்டு மொத்தமாக ஒரு
குடும்பத்தில் ஆட்சி செய்துவிட்டால்....
அரசனாக இருந்தால்கூட ஆண்டியாவது
உறுதி. இதுதான் இந்தப் பழமொழிக்கான
பொருளாக இருக்க வேண்டும் .
உண்மைதான்.
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.
அப்புடியா?.... நான் வேறு என்னமோ
நினைச்சேன் என்ற உங்கள் மனவோட்டம்
என்வரை கேட்கிறது.
Comments
Post a Comment