அன்னக்கிளி அக்கா

அன்னக்கிளி அக்கா 


விசயத்தைக் கேள்விப்பட்ட நேரத்தில் இருந்து

அழுது கொண்டே இருந்தாள் அன்னக்கிளி.


"நிஜமாத்தான் சொல்லுறீயளா...

யாரு சொன்னா...மாப்பிள்ளை

 சொன்னாவளா அவுங்க

ஆத்தாகாரி சொன்னாவளா..."

அப்பா வந்து சொன்ன நேரத்தில் இருந்து

அப்பாவை கேள்வி கேட்டுக் கேட்டு

 குடைந்து எடுத்து விட்டார் அம்மா.


" என்ன ....யாதுன்னு சொல்லிபுட்டேன்ல்ல...

இனி ஆக வேண்டியதைப் பாரக்க வேண்டியதுதான்"

சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில்

போட்டுவிட்டு வாசலை நோக்கி நடந்தார் அப்பா.


"என்ன சொல்றிய...சட்டியா?  பானையா?

உடனே மாப்பிள்ளை சொல்ற மாதிரி

மாத்துகிறதுக்கு...."

வார்த்தைகளைக்  குறுக்கே போட்டு

அப்பாவைப் போக விடாமல் தடுத்தார்

அம்மா.


"பின்ன என்னை என்ன 

செய்யச் சொல்லுற..."

அப்பாவின் குரலில் ஒரு இயலாமை

தெரிந்தது.கூடவே இனி பேசி என்ன ஆகப்போகுது என்ற விரக்தியும் இருந்தது.


என்ன செய்ய முடியும்?

வேறு எப்படித்தான்  சொல்ல முடியும் ?

அன்னக்கிளி அவரு பெத்த புள்ளதானே

வருத்தம் இல்லாமலா இருக்கும்...?

கடனவுடன வாங்கி கட்டிக் கொடுத்துவிட்டு

கடனை அடைத்து இன்னும் குறுக்கு

நிவுறல. அதுக்குள்ள வந்து

இப்படி ஒரு குண்டத்தூக்கிப் போட்டா

எந்த அப்பனாலத்தான் தாங்கிக் கொள்ள முடியும்.


ஆம்புளப்புள்ளய பெத்தவுக பொசுக்குன்னு

சொல்லிப்புடுவாவ.

இரண்டும் பொட்டப்புள்ளையா பெத்து

வச்சிகிட்டு கண்ணக் கண்ணத் தள்ளிகிட்டு

நிற்பவருட்ட போயி...

என்னத்த சொல்ல பாவம் மனுஷன்

நொந்து போயி வந்துருக்காரு..



"ஐயோ...நல்ல நல்ல சம்பந்தம்

எல்லாம் வந்துதே....நீங்க தானே...

நல்ல தோட்டமும் தொரவும் இருக்கு.

ஒரு குளத்துப் பத்து முழுவதும்

இருக்கு.

நல்ல குடும்பம் என்று சொன்னிய

இந்தப் பாழாப் போன குடும்பத்துல

கட்டிக் கொடுக்க சம்மதிச்சிய...."

அம்மா இந்த நேரத்திலும் அப்பாவை

நோகடிக்கத் தவறவில்லை.


"இப்பவும் அதைத்தான் சொல்றேன்.

நல்ல குடும்பம்தான்.

மாப்பிள்ளைக்குப் பிள்ளையைப்  பிடிக்கல என்று

சொன்ன பிறகு என்ன பண்ண முடியும்.?"



"இந்த இழவ கலியாணத்திற்கு முன்னேயே

சொல்லி தொலைச்சிருக்க வேண்டியதுதானே...

ஊருல ஒரு  பொட்ட பிள்ளை 

கண்ணுல தெரியல 

என் பிள்ளைதான் கிடைச்சாளாக்கும்...

எதுக்கு வேண்டாம் என்கிறாவளாம்..."

இப்போது அம்மாவின் கோபம் 

மாப்பிள்ளை பக்கம்

திரும்பியது.


"பொண்ணு சுறுசுறுப்பு காணாதாம்.

நாகரீகம் தெரியாதவளாம். அசமந்தம்

என்று சொல்றாவளாம்"


"என் பிள்ளைக்கு என்ன சுறுசுறுப்புக்குக்

குறைச்சல்.?

அவனுக்கும் அந்தக் குடும்பத்துக்கும்

வேளாவேளைக்கு சோறு ஆக்கிப் போடலியா.. ?ஊடு கூட்டலியா...?

மாட்டுக்குத் தண்ணி எடுத்து ஊத்தலியா.?

சாணி அள்ளிப் போடலியா...?

துணி துவச்சிப் போடலியா....?

இதுக்கு மேல என்ன சுறுசுறுப்பு வேணுமாம். அசமந்தம் என்று சொன்னானாமா...

அவன் ரொம்ப புடுங்கி தள்ளிட்டானோ?

ஒரு வரப்பு வெட்டத் தெரியாது...சம்சாரியாம் சம்சாரி"

புலம்பித் தள்ளினார் அம்மா.


"புலம்பாம கொஞ்சம் சும்மா இருக்கியா...

கொஞ்சம் மனுசனை நிம்மதியா இருக்க விடு . அவன் வரப்பு வெட்டுனா என்ன வாய்க்கால வெட்டுனா நமக்கென்ன...?

அந்தப் பேச்சை விடு.கழுதையா இருந்தாலும் காக்கழஞ்சு யோகத்துல பொறக்கணும்ன்னு சொல்லுவா எங்க ஆத்தா. நம்ம பிள்ளைக்கு அந்த யோகமும் இல்லய...வேறு என்னத்தைச் சொல்றது?" கைகளைப் பிசைந்தபடி 

நின்றார் அப்பா.




அம்மாவோ அப்பாவை கொஞ்சம்கூட யோசிக்க விடாமல்

புலம்பிக் கொண்டே இருந்தார் .


"உமக்கு என்ன ... நீருபாட்டுக்குச் சொல்லிபுட்டுப்

போயிடுவீரு...

நித்தம் நித்தம் அது என் கண்ணுமின்ன 

கண்ணைக் கசக்கிட்டு நிக்கும...

இப்ப பாரும். இப்பவும் மூலையில உட்கார்ந்து

அழுதுகிட்டுத்தான் இருக்கு....

என் மவளுக்கு அழத்தான் தெரியும்.

நாலு சனத்த மாதிரி 

ஒரு கடுஞ்சொல் சொல்லத் தெரியாது.

அப்படி தங்கமா என் பிள்ளையை வளர்த்து

வச்சுருக்கேன்...சும்மா சொல்லிப்புட்டான்

ஒத்த வார்த்தையில.  சுறுசுறுப்பு காணாது...

நாகரீகம் தெரியாது என்று...."

பெத்த மனசு கெடந்து தவிப்பது

வார்த்தையாய் வந்து விழுந்தது.



" இப்போ நீ என்னதான் சொல்ல

வார...என்னையும் சேர்த்து கண்ணைக் 

கசக்கிட்டு மூலையில உட்காரச் சொல்லுறீயா..."

அப்பாவுக்கு அம்மா பேசப் பேச 

மேலும் எரிச்சல்  கூடியது.


"உம்ம ஒண்ணும் சொல்லலய்யா...

நீரு போவும்...மாப்பிள்ளை மாதிரி ஊரைச்

சுத்தி வாரும் "

அப்பாவைப் போட்டுத் தாக்கிவிட்டு

விருட்டென்று அழுது கொண்டே

மாட்டுத் தொழுவு பக்கம் போனார் அம்மா.



அங்கே ஒரு தூணில் சாய்ந்தபடி

வாய் பேச முடியாமல் உள்ளுக்குள்

ஊமையாய் அழுது கொண்டிருந்தாள்

அக்கா.


அம்மாவைக் கண்டதும் விசும்பல்

கொஞ்சம் அதிகமானது.

"சத்தமா கூட என் பிள்ளைக்கு

அழ தெரியாது... பாவிப்பயலுக்கு ஈவு 

இரக்கமே கிடையாதா...."அம்மா வாயை மூடுதாக

இல்லை.

இதைக் கேட்டதும் அக்கா 

அதிகமாக கேவிக் கேவி அழுதாள் .


இந்தப் பாவத்திற்கு அழுவதைத் தவிர

அதிகமாக ஏதுவும் படபடப்பாகப் பேசத்

தெரியாது...அதுவே இப்போ அவள்

வாழ்க்கையை தொலைக்க வந்து நிற்கிறது.


அம்மா பின்னாலேயே போய் நின்ற எனக்கு

 அக்காவைப் பார்த்ததும் ஓவென்று 

 ஒப்பாரி வைக்க வேண்டும்போல் இருந்தது.

 

மெதுவாக  அருகில் உட்கார்ந்து 

அக்கா கையைப் பிடித்தேன்.


அவ்வளவுதான் ...சிறுபிள்ளையைப்போல

என் தோளில் சாய்ந்து அக்கா அழுதது 

 எனக்குள் ஆத்திரத்தைக் கூட்டியது.

 

"நீ அழாதக்கா...அவங்க நல்லாவே இருக்க

மாட்டாங்க.."


இயலாதவர்களுக்குச் சாபமிடுவதைத்

தவிர வேறென்ன தெரியும் ?

இதற்கு மேல அக்காவை எப்படிச் சொல்லி

தேற்ற முடியும் ?


இது என்ன இப்படிச் சொல்லி

அக்காளைத் துரத்திவிடப் பார்க்கிறார்கள்...

நாகரீகம் தெரியாதவள் என்றால்

என்ன சொல்ல வருகிறார்கள்...

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.


கிராமத்துப் பெண்.. படிக்காதவள்.

இப்படித்தானே இருப்பாள்...

மாப்பிள்ளை என்ன லண்டனிலிருந்து வந்தவரா? 

அவரும் இதே கிராமத்தைச் சேர்ந்தவர் தானே..


நாகரீகத்தின் அளவுகோல்தான் என்ன? 

இப்படி ஏதேதோ நினைவுகள் 

என்முன் கேள்விகளாக வந்து விழுந்தன.


"யாராவது நாலு சனத்துட்ட சொல்லி 

மாப்பிள்ளை கிட்ட

பேசிப் பார்க்கச் சொல்லலாம் இல்லையா "

மறுபடியும்  அம்மாவின் குரல்

என் நினைவுகளுக்குத் தடை போட்டது.


அப்பாவும் என்ன செய்வார்...

பிள்ளை வாழ்க்கை இப்படி ஆயிற்றே 

என்ற வருத்தம்தான் அவரையும்

கோபத்தோடு பேச வைக்கிறது.

மற்றபடி அப்பா இப்படி எல்லாம் கோபப்பட்டு

நான் பார்த்ததில்லை

அக்கா வீட்டுக்காரர் மேல் உள்ள கோபத்தை

எங்களிடம் தவிர  அப்பாவால் 

வேறு யாரிடம் காட்ட முடியும்...



"பேசிப் பார்ப்போம்..."

விரக்தியில் பேசியபடி வெளியில் சென்றார்

அப்பா.


போனவரு ஒரு மணி நேரத்துல திருப்பி வந்தார்.

"நாளைக்கு பஞ்சாயத்து வச்சுருக்காவளாம்....

  பணம் கொடுத்தாவது ஒரேயடியா

 முடிச்சி உட்டுறதா 

பேசிகிட்டாவளாம்...."

என்றார் அப்பா கம்மிய குரலில்.

 

அதுவரை எனக்கு இருந்த கொஞ்சம்நஞ்ச

நம்பிக்கையும் அப்படியே நொறுங்கி

கீழே விழுந்து உடைந்ததுபோல்  இருந்தது.

எங்க அக்காவுக்கு கல்யாணம்...

எங்க அக்காவுக்கு கல்யாணம் என்று நான்

குதித்த குதியும் கும்மாளம் கண்முன் வந்து நின்றன.

பந்தல் மணம் கூட மாறல.....

..


" ஏதோ முகூர்த்தத் தேதி வைத்தது போல..

நாள குறிச்சு குடுத்துருக்காவ....

கேட்க ஆளுல்ல என்று நினைச்சாவளா...

நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்குற மாதிரி

கேட்க எனக்கும் தெரியும்"

கேட்டதும் ஆவேசமாக கத்த ஆரம்பித்தார்

அம்மா.


இவ்வளவு நேரம் அப்பா சொன்ன

விசயத்துல இவ்வளவு முக்கியத்துவம் 

இருக்கும்ன்னு நினைக்கல.....

அப்படியே ஈரக் கொலை நடுங்கிப்

போச்சு...ஆத்திர ஆத்திரமாக வந்தது.


அக்காவைப் பார்த்தேன்.

உனக்காக்கா இப்படி ஒரு கதி வரணும்?

கேட்கத் தோன்றியது..

எங்க அக்கா ஒரு வாயில்லா பூச்சி.

வீட்டில் யாரையும் எதிர்த்துப் பேச மாட்டாள்.


இப்போது எது பேசினாலும் அது

அக்காவின் சோகத்தை அதிகத்தான் படுத்தும்

என்ற நினைப்பில் அப்படியே விட்டு விட்டேன்.


அக்காளுக்கு இப்போது அழகூட

தெம்பில்லாமல் கண்ணீர் மட்டும்

கன்னங்களில் ஓடிக் கொண்டிருந்தது.

குனிந்த தலை

 நிமிரவில்லை.


அவள் எப்போதும் அப்படித்தான். 

அந்நியரை தலைநிமிர்ந்து

பார்க்க மாட்டாள்.

ரொம்ப வெட்கப் படுவா....நான் கூட

கலியாணத்தின்போது அத்தானை தலை

நிமிர்ந்து பார்ப்பியா....

என்று கேட்டு கிண்டலடித்தேன்.


ரொம்ப சாதுவா இருப்பாள்.

ஊருல ஒரு சனத்துகிட்ட கெட்டப் பிள்ளை 

என்று பெயர் எடுத்தது கிடையாது.

தங்கமான பொண்ணு.... யாரையும்

அநாவசியமா எதுவும் பேச மாட்டாள்...

இப்படித்தான் சொல்லி 

கேள்விப் பட்டிருக்கிறேன்.

அம்மாகூட அக்காவைக் காட்டி..."

"பிள்ளை என்றால்

அவள் பிள்ளை... வீட்டு சத்தம்

வெளியில்  கேட்காமல் எவ்வளவு 

 அமைதியாக இருக்கிறாள்.

நீயும் இருக்கியே ...."என்று சொல்லி 

சொல்லி என்னைத் திட்டுவார்.


 அந்த அமைதியும் பொறுமையுமே

அவள் வாழ்க்கைக்கு உலை வைத்து விட்டது


சாதுவா இருப்பது ஒரு தப்பா..?

இப்படியும் ஆண்களா....?

நினைத்துப் பார்க்கவே 

ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.


மறுநாள் ஊரு பஞ்சாயத்துக்கு

அம்மாவும் அப்பாவும்தான் போனார்கள்.

அக்கா போக மறுத்துட்டாள்.


போயிட்டு வரும்போதே அம்மா

அழுது கொண்டே வந்தார். எல்லாம்

முடிஞ்சு போச்சு என்பது அம்மாவின் 

அழுகையில் இருந்து தெரிந்தது.


"யாதுக்கும் என்ன சொன்னாங்க அம்மா"

என்று ஒரு பேச்சுக்குக் கேட்டு வைத்தேன்.


"அவன் ஆரம்பத்திலேயே இவள்

வேண்டாம் என்றுதான் சொன்னானாம்.

நாகரிகம் தெரியாதவள்....நாலு இடத்துக்குக்

கூட்டிட்டு போக முடியாது...

நாகரிகமா துணி உடுக்கத் தெரியாது....

என்று என்னென்னவோ அடுக்குறாவ.

அம்மாகாரிதான் நம்ம வீட்டுல வந்து 

விழவச்சுட்டாள் என்று அம்மாக்காரி மேல

குத்தம் சொல்லிட்டுப் பிடிவாதமா

 அக்காவை வேண்டாம்

என்று பேசுறான் ....சப்பகாலு பய...

என் பிள்ளையை குறை சொல்லுறான்"

மொத்தமாகக் கொட்டித் தீர்த்தார் அம்மா.


முதலிலேயே இந்தப் பிடிவாதம்

எங்கே போச்சு..

இப்போ எங்க அக்கா வாழ்க்கை 

அல்லவா போச்சு...


சீ... இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள்...?.


"உங்க விருப்பத்துக்கு யாரையும் கட்டிக் கொள்ளுங்க..

எங்க அக்கா  மாதிரி 

வாயில்லா பூச்சிகள் வாழ்க்கையோடு

விளையாடாதீர்கள் "என்று ஓங்கி ஒரு

அறை கொடுத்து சொல்ல வேண்டும்

போல் தோன்றியது.


நானும் பெண்பிள்ளையாயிற்றே.

 நான் ஏதாவது பேசிவிட்டால்...

அடங்காப்பிடாரி என்று இன்னொரு

முத்திரையைக் கையில் வைத்து

எங்கள் சிறகுகளை முறிக்கக் காத்திருக்கும்

உலகம் இது !


வாழத் தெரியாதவன் வாயால்

வாழ லாயக்கில்லாதவள்

என்ற முத்திரை குத்தப்பட்டு 

ஆட்டத்திலிருந்து அக்கா  வெளியேறற்றப்பட்டாள்.


அக்காவை எண்ணி

உள்ளுக்குள் ஊமையாய் அழுவதைத் தவிர

வேறென்ன எங்களால் 

இப்போது செய்துவிட முடியும் ?


 

Comments

Popular Posts