தாயோடு அறுசுவை போம்
தாயோடு அறுசுவை போம்
"தாயில் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை"
பெற்றோருக்கு கணக்குப் போட்டு மாதம் ஒரு மகன் என்று கஞ்சி ஊற்றும் பிள்ளைகள் உள்ள காலம் இது.
கணக்குப் போடாமல் தருபவள் தாய்.
பங்குபோட்டுக் கொடுத்தாலும் தன் பங்கையும் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு மிச்சம் இருப்பதை உண்பவள் தாய்.
தான் உண்ணும் உணவு கஞ்சியாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு சுவையாக சமைத்துக் கொடுத்து இன்பம் காண்பாள்.
இப்படி அம்மாவின் கையால் சுவையாக சாப்பிட்டு பழகிப் போய்விட்டோம்.சுவைக்கு அடிமையாகிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
சுவை என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒன்று.
சுவை இல்லாமல் சப்பென்று இருக்கும் உணவை உண்ண யாரும் விரும்புவதில்லை.
பசி ருசி அறியாது.
கொடுத்ததைச் சாப்பிட்டுவிட்டு அப்படியே போய்க் கொண்டே இருப்போம்.
பசியில்லாத நேரத்தில் எந்த உணவைக்கொடுத்தாலும் ஆயிரம் குறை சொல்லுவோம்.
பிடிக்கலையா... அது சரியில்ல இது சரியில்ல என்று சாப்பாட்டில்தான் முதல் குற்றத்தைப் போட்டு வைப்போம்.
நம் நாக்கு சுவைக்கு அடிமைப்பட்டாயிற்று.
அதனால்தான் பெரிய நகரங்களில் ருசி ஓட்டல்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
ஆனால் எப்படித்தான் ருசியாக சாப்பிட்டாலும் அப்பப்போ என் அம்மா கைப்பக்குவம் போல் உனக்கு வரவே வராது என்று கூறி மனைவியிடம் வாங்கிக்கட்டிய கணவன்மார்கள் நிறைய பேர் இருப்பர்.
தைரியசாலிகள் வாய்விட்டு சொல்லிவிடுவர்.
மற்றவர்கள் மனதிற்குள் வைத்து வெம்பிக் கொண்டிருப்பர்.
அப்படி ஓர் ஈர்ப்பு அம்மா சமையலுக்கு உண்டுங்க...
மருமகள்கள் மாமியார்மீது பொறாமைப்படும் ஒன்று உண்டென்றால் அது சமையலாகத்தான் இருக்கும்.
நீங்களும் ஒரு அம்மாதான்... உங்க பிள்ளையும் நாளை இப்படித்தான் உங்களைக் கொண்டாடும்.
அப்போ உங்கள் மனசு சந்தோசப்படுமில்ல...
உங்களுக்கும் சேர்த்துதான் ஔவை தன் தனிப்பாடலில் பரிந்து பேசியுள்ளார்.
அட.. போங்கங்க...இத புரிஞ்சுக்காம இப்படி இதுவரை சண்டை போட்டுட்டீங்களா..!
நானும்தான் நல்லா சமைக்கிறேன்....ஒருநாள் கூட நல்லா இருக்கு என்று ஒரு வார்த்தை சொன்னதில்லங்க.....புலம்புறீங்களா !
சரி.. போகட்டும் ...விட்டுடுங்கங்க...அப்படியாவது சந்தோசப்பட்டுட்டு போகட்டுமே !
இப்போ ஔவையின் பாடலுக்கு வருவோம்.
"தாயோ டறுசுவை போம்
தந்தை யோடு கல்விபோம்
னசேயோடு தான்பெற்ற செல்வம்போம் _ ஆயவாழ் (வு)
உற்றா ருடன்போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம்
பொற்றாலி யோடெவையும்போம்"
முதலாவது தாய் தரும் அறுசுவை உணவு:
தாயை இழந்த பின்னர் அறுசுவை உணவு கிடைக்காதாம்.அதன் பின்னர் அறுசுவை என்ற பேச்சையே மறந்துவிட வேண்டியதுதானாம்.
பார்த்துப் பார்த்து சமைப்பவள் அம்மா . அந்த உணவில் சுவையோடு சேர்ந்து அன்பும் இருக்கு்மாம்.
கரிசனம் இருக்குமாம் .உடல் நலம் பேணல் இருக்குமாம்.
அதனால்தான் அது அறுசுவை உணவாம்.
அப்படியானால் அறு சுவை என்றால் இனிப்பு ,கசப்பு ,புளிப்பு, துவர்ப்பு ,உவர்ப்பு ,கார்ப்பு என்ற ஆறு சுவைகள் இல்லையா என்று கேட்கத் தோன்றும்.
அப்படி இருக்கவே இருக்காது.
எல்லா சுவையும் தானமாகப்போட்டு தரப்படும் உணவுதான் சுவையான உணவாக இருக்கும்.
இருந்தாலும் பிள்ளையின் உடம்புக்கு... இதுபிடிக்கும் .....இதுபிடிக்காது ....இது ஒத்துக்கும்...இது ஒத்துக்காது என ஓர்ந்து சீராக சமைப்பவள் அம்மா.
அதனால் அம்மாவை இழந்தால் கூடவே அன்போடு கலந்த அறுசுவை உணவையும் இழந்து விடுவோமாம்.
"எவள் இல்லை என்றால் நீ இந்தபூமியில் பிறந்திருக்க முடியாதோ எவளை இழந்துவிட்டால் நீ பெறவே முடியாதோ அவள் பெயரே தாய்" என்றார் விவேகானந்தர்.
தாய் மறுபடியும் கிடைக்கமுடியாத பொக்கிஷம்.
இந்த தாய் போய்விட்டால் அறுசுவை உணவையும் மறந்துவிட வேண்டியதுதான் என்கிறார் ஔவையார்.
இந்த சுவையான சாப்பாட்டிற்காக மட்டும்தான் அம்மாவா.?...இருக்கவே இருக்காது.
உணவு இருந்தால் மட்டும்தான் உடலில் உயிர் இருக்கும்.
அந்த உயிரைக் கொடுத்தவள் அம்மா .இதை நினைவூட்டும் வகையில் கூட ஔவை இந்த வரியைச் சொல்லி இருக்கலாம்.
இரண்டாவதாக நாளும் உழைத்து வந்து நம்மைக் காப்பாற்றும் அப்பா.:
அப்பா இல்லை என்றால் அடுத்த வேளை உணவுகூட பல குடும்பங்களில் கேள்விக்குறியாகிவிடும்.
உடல் உழைப்பை குடும்ப நலனுக்காக குத்தகைக்கு விட்டு பொருள் சம்பாதிப்பவர் அப்பா.
கல்வி கற்பதற்குத் தேவையான பொருளாதாரத்தைக் கொண்டு வந்து தருபவர் அப்பா.
அதுமட்டுமல்ல...ஊரைக் காட்டி ...உலகத்தைக் காட்டி அறிவைத் தருபவர் அப்பா.
வெளி உலக அறிவு அப்பாவால்தான் ஒரு குழந்தைக்குக் கிடைக்கிறது.
தந்தையால் மட்டுமே அறிவைத் தர முடியும்.
அதனால் அந்தத் தந்தையை இழந்து விட்டால் ....கல்வியறிவு கிடைக்காமலே போய்விடுமாம்.
மொத்தத்தில் தந்தை, தாய் இருவரையும் இழந்துவிட்டால் நாம் ஒன்றுமில்லை என்கிறார் ஔவை.
மூன்றாவது பிள்ளைகள் :
பெற்றோர் கண்ணுக்குமுன் பிள்ளைகளின் இழப்பு ஈடு செய்ய முடியா பேரிழப்பு.
பிள்ளைகளை இழந்துவிட்டால் மொத்த செல்வமே இழந்ததாகிவிடுமாம்.
அதனால்தான் பிள்ளைகளை மக்கட்செல்வம் என்கிறோம்.
என் பிள்ளையே போய்விட்டது. இனி எனக்கு உலகில் என்ன இருக்கிறது என்று பெற்றோர் புலம்பி தவிப்பதைக் கேட்டிருப்போம்.
நான்காவதாக உறவுகள் :
உறவுகளை இழந்துவிட்டால் ....கூடிவாழும் வாழ்வையே இழந்து விடுவோமாம்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டுங்க..
நல்லது கெட்டதுக்கு முன்னே வந்து நிற்க உறவு வேண்டும்.
உறவுகள் இல்லை என்றால் அதுவும் போச்சு.
ஐந்தாவதாக உடன்பிறப்புகள்:
நம் உடன் பிறப்புகளை இழந்துவிட்டால் ....மனபலமும் போய்விடும். உடல் பலமும் போய்விடும். யாரிடமும் துணிச்சலாக நின்று தோள் தட்ட முடியாது.
பள்ளிப் பருத்திலிருந்தே யாரும் அடித்தால் என் அண்ணனிடம் சொல்லி விடுவேன். என் அக்காவிடம் சொல்லிவிடுவேன் என்று சொல்லிச் சொல்லி வளர்ந்தவர்கள் நாம்.
தம்பியுடையான் படைக்கு அஞ்சான்.
அந்த உடன்பிறப்பை இழந்துவிட்டால்... ஏதோ ஒற்றை மரமாக நிற்பது போன்று தனிமைக்குத் தள்ளப்படுவோம்.
தாயை இழந்துவிட்டால்....அறுசுவை உணவு போகும்.
தந்தையை இழந்துவிட்டால்....கல்வி போகும்.
பிள்ளைகளை இழந்துவிட்டால் ...மொத்த செல்வமே போய்விடும்.
உறவுகளை இழந்துவிட்டால்...கூடி வாழும் இன்பம் போகும் .
உடன்பிறப்பை இழந்துவிட்டால்.....வலிமை போகும்.
இப்படி ஒவ்வொருவரையும் இழந்தால் ஏதோ ஒன்றை இழந்தவர்கள் ஆவோம்.அந்த இழப்பு நம்மை வெகுவாக பாதிப்பதாகதான் இருக்கும்.
ஆனால் கடைசியாக அதாவது
ஆறாவதாக ஒரு இழப்பை சொல்கிறார் கேளுங்க .. கலங்கிப் போவீங்க. .
ஆமாங்க.. தாலியை இழந்துவிட்டால்.....
தாலி கட்டியவரை இழந்துவிட்டால் மனைவி இருந்தும் இல்லாதவளாகிவிடுவாங்க... வாழ்க்கையில் எதுவுமே இல்லங்க.....
தாலி கட்டிக்கொண்ட மனைவியை இழந்துவிட்டால்....கணவருக்கு எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லைங்க.....
கணவனுக்கு மனைவியும் மனைவிக்குக் கணவனும் இருப்பது
வரைதான் வாழ்க்கை.
அது இல்லாமல் போய்விட்டால்....
சுவை போச்சு ....அறிவு போச்சு.
செல்வம் போச்சு...வாழ்வு போச்சு...வலிமை போச்சு...
மொத்தத்தில் எல்லாமே போச்சுங்க...
கண்கலங்குதுல்ல....
இதுதாங்க உண்மை என்கிறார் ஔவை.
Comments
Post a Comment