வரலாற்றைப் புரட்டிப் போட்ட சொற்கள்
வரலாற்றைப் புரட்டிப் போட்ட சொற்கள்
"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து"
என்றார் வள்ளுவர்.
நாம் பேசுகிற சொல்லை இன்னொரு சொல்
வெல்ல முடியாது என்பதைத் தெரிந்த
பின்னரே அந்தச் சொல்லைப்
பயன்படுத்த வேண்டும்
நமது சொல்லில் யாரும் குற்றம்
கண்டுபிடித்துவிடக் கூடாது.
நமது சொல்தான் இறுதித் தீர்ப்புக்கு
உரியதாக இருக்க வேண்டும்.
உள்ளங்களை வெல்லும் சொல்லாக
இருக்க வேண்டும்.
சிறுவன் ஒருவனிடம்
நாவற்கனி பறித்துத் தரும்படி கேட்கிறார் ஔவை.
" சுட்டபழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா "
என்று கேட்கிறான் சிறுவன்.
"அதென்ன சுட்டப் பழம்
சுடாதப் பழம்?
ஔவையையே
சொல்லால் மடக்குகிறான் அந்தச் சிறுவன்.
நன்கு கனிந்தப் பழம் வேண்டுமா?
கனியாதப் பழம் வேண்டுமா?
இதுதான் சிறுவனின் கேள்வி.
கனிந்தப் பழமானால் கீழே விழுந்ததும் மண் ஒட்டிக் கொள்ளும்.
அதை எடுத்து மண் போவதற்காக ஊதி
ஊதி ஊதி சாப்பிட வேண்டும்.
கனியாதப் பழத்தில் மண் ஒட்டாது.
ஊத வேண்டிய அவசியம் இருக்காது. இது சுடாதப்பழம்.
இதுதான் சிறுவன் சொன்ன சுட்டப்பழமும் சூடாக பழமும்.
ஔவை திகைத்துப் போனார்.
நாவற்பழத்தில் சுட்டதும் சுடாததும் கேள்விப்பட்டதில்லை.
எல்லாம் தெரிந்த வைக்கும் சிறுவன் கேட்ட கேள்விக்குப் பதில் தெரியவில்லை.
இதுதான் வெல்லும் சொல்.
ஔவையின் உள்ளத்தையே
வென்ற சொல்.
ஆணவத்தைக் கொன்ற சொல்.
சொற்கள் உயிருள்ளவை.
அதனால் பேசுவதில் கவனம் வேண்டும்.
சொல்லைத் தவறாகப் பயன்படுத்திவிட்டால்
தீராத பழிதான் வந்து சேரும்.
கோவலன் அரசியின் காற்சிலம்பைக்
களவாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுப்
பாண்டிய மன்னன் முன் கொண்டுவந்து
நிறுத்தப்படுகிறான்.
மன்னன் எதைப் பற்றியுமே யோசிக்கவில்லை.சிலம்பு கிடைத்துவிட்டது .அவ்வளவுதான் .
இனி அதற்குமேல் என்ன விசாரணை
வேண்டும் என்று நினைத்துவிட்டான்.
"கொன்று அக்கள்வனை கொணர்க"
என்று ஆணையிட்டு விட்டான்.
மன்னன் பேச்சுக்கு மறுபேச்சு ஏது?வீரர்களும் மன்னன் ஆணைப்படி
கோவலனைக் கொன்று சிலம்பைக்
கொண்டு வந்து தந்துவிட்டனர்.
கோவலன் கள்வனா? இல்லையா?
என்பதை விசாரித்த பின்னர் அல்லவா
மன்னன் தீர்ப்பளித்திருக்க வேண்டும்.
ஆராயாமல் தீர்ப்பளித்து
தீராத களங்கத்தைத் தேடிக் கொண்டான்
பாண்டிய மன்னன்.
இது கொல்லும் சொல்லாக அமைந்து
பாண்டிய மன்னன் வாழ்வையே
கொன்றுவிட்டது.
ஒற்றைச் சொல் பிறழ்வால்
உலக வரலாறே மாறிப் போன நிகழ்வுகளும் நடந்ததுண்டு.
இரண்டாம் உலகப்போர் நேரத்தில்
ஜப்பான் நாட்டிற்கு அமெரிக்காவிலிருந்து
அப்போதய பிரச்சினை தொடர்பாக
ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்ததாம்.
ஜப்பானியர்களுக்கு தாய்மொழியில்
மட்டுமே நல்ல புலமை உண்டு.
ஆங்கிலத்தில் அத்தனை புலமை இல்லையாம்.
படித்துவிட்டு ஜப்பானிய மொழியில்
அதற்கான பதில் கடிதம் அனுப்பப்பட்டதாம்.
உங்கள் கோரிக்கையைப்
பரிசீலிக்கிறோம் என்று ஜப்பானிய மொழியில் எழுதப்பட்டிருந்ததை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்த மொழி பெயர்ப்பாளர் உங்கள் கோரிக்கையை நிராகரிக்கிறோம் என்று தவறுதலாக மொழிபெயர்த்து தந்து விட்டாராம்.
விளைவு இரண்டாம் உலகப்போர்.அதனால் பல இலட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இங்கே 'பரிசிலிக்கிறோம் ' என்ற சொல் 'நிராகரிக்கிறோம் ' என்ற சொல்லாக மாறியதால் ஒட்டுமொத்த வரலாறே மாறிப் போனது.
வரலாற்றில் கரும்புள்ளியாக
மாறிப் போனது.
அதனால்தான் சொற்களைக் கையாளுவதில்
அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அலெக்சாண்டர் இந்தியாமீது படையெடுத்து வந்தார்.
இந்தியாவின் வளம் அவர் கண்களை உறுத்தியது.
பல இடங்களைக் கைப்பற்றினார்.
போரஸ் மன்னன் ஆண்ட பகுதிகள்மீது
அவர் கண்பட்டது.
போர் தொடுத்தார். வெற்றிபெற்று
போர்ஸ் மன்னன் ஆண்ட பகுதிகளைத் தனதாக்கிக் கொண்டார்.
அத்தோடு விட்டுவிடவில்லை.
வீரர்களோடு போரஸ் மன்னனையும்
சேர்த்து சிறை பிடித்துச் சென்றார்.
வீரர்களோடு வீரராக மன்னனும்
சிறையில் அடைக்கப்படுகிறார்.
ஒருநாள் தனது அடிமைகளைப் பார்ப்பதற்காக மிடுக்காக
சிறைக்கு வருகிறார் அலெக்சாண்டர் .
சிறையில் இருக்கும் போரஸ் மன்னனைப் பார்க்கிறார்.
அவரைக் கண்டதுமே ஒரு நிமிடம் அந்த இடத்தில் நிற்கிறார்.
எதிரியாகவே இருந்தாலும் போரஸ்
ஒருநாட்டு மன்னனாக இருந்தவர் அல்லவா?
ஆனால் இப்போது அவர் அலெக்சாண்டரின் அடிமை.
ஒரு கர்வத்தோடு போரஸ் மன்னனைப் பார்த்து
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார் அலெக்சாண்டர்.
" இப்போது நீர் என் அடிமை.
அதாவது என்னுடைய கைதி.."
பீடிகையோடு பேச்சைத் தொடங்கினார்.
" மன்னனாகிய என்னை மற்ற
கைதிகள்போல நடத்துகிறீர்களே
என்று நீ நினைக்கலாம்.
அதனால் உனக்கு ஒரு வாய்ப்புத் தர
விரும்புகிறேன்.
உன்னை நான் எப்படி நடத்த வேண்டும்
என்று நீ எதிர் பார்க்கிறாய் ?என்பதை நீயே சொல்."
நக்கலாக கேட்கிறார் அலெக்சாண்டர்.
ஒரு நிமிடம் அலெக்சாண்டர் முகத்தையே பார்த்தார் போரஸ்.
கோழையாக சாவதைவிட
ஒரு வீரனாகவே சாகலாமே என் நினைத்தார்.
இந்தச் சந்தர்பத்தை தன் எனக்காகப்
பயன்படுத்த நினைத்த போரஸ் மன்னன்,
" .நான் ஒரு நாட்டின் மன்னன். என்னை ஒரு மன்னனைப் போல நீங்கள் நடத்த வேண்டும் என்று எதிர் பார்க்கிறேன்" என்று துணிந்து அலெக்சாண்டரிடம் பேசினார் .
ஒரு போர் கைதியிடமிருந்து இந்தப் பதிலை எதிர்பார்க்காததால் அப்படியே மலைத்துப் போய் நின்றார் அலெக்சாண்டர்.
மன்னனைக் போல நடத்த வேண்டும் என்றால்....
நாடு அவருடையதாக வேண்டும்.
தோல்வியிலும் துவளாத போரஸின்
பேச்சு அலெக்சாண்டரைப்
பிரமிக்க வைத்தது.
"உனது துணிச்சலை நான் மெச்சுகிறேன்"
என்றபடி போரஸ் மன்னனின் தோள்களைத் தட்டிக் கொடுத்து,
"இதுஒரு மாவீரன் இருக்க வேண்டிய இடம்
இதுவல்ல" என்று கூறி நாட்டை
அவரிடமே திரும்ப ஒப்படைத்தார்.
"ஒரு மன்னனாகவே நீ வாழ வேண்டும் "
என்று பாராட்டிவிட்டு திரும்ப சென்றார்.
இதுதான் வார்த்தையால் வென்ற
போர்ஸ் மன்னனின் வரலாறு.
சந்தர்ப்பத்தை தன் தனதாக்கிக் கொண்டு
வாழ வைத்த வார்த்தைகளின் வரலாறு.
"தகுந்த நேரத்தில் சொல்லப்பட்ட
சொற்கள் வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட
பொற்பழங்களுக்கு சமம் " என்கிறது பைபிள்.
ஆம். இடத்திற்கு ஏற்ப
சூழலுக்கு ஏற்ப சொற்களைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
வெல்லும் சொல்லை மட்டுமே கையாள வேண்டும்
என்று முடிவு எடுத்துவிட்டீர்களல்லவா!
இனி உங்கள் வெற்றிக்கு முன்னர் எந்தக் கொல்லும் சொல்லும்
குறுக்கே வந்து கட்டையைப் போட்டு நிற்காது.
கொல்லும் சொல்லோடு கொள்ளுங்கள் பிணக்கு.வெல்லும் சொல்லோடு தொடங்கட்டும்
உங்கள் வெற்றி கணக்கு.
கருத்துகள்
கருத்துரையிடுக