பொறுமை கடலினும் பெரிது

பொறுமை கடலினும் பெரிது

"பொறுமை கடலினும் பெரியது."

"பொறுத்தார் பூமி ஆள்வார்
பொங்கினார்  காடாள்வார்"

பொறுமையின் பெருமையை
உணர்த்தும் அருமையான பழமொழிகள்.

பொறுமைதான் ஒருவரின் தரத்தைப் பற்றி
அறிந்து கொள்வதற்கான அளவுகோல்.

நிதானம் தவறினால் தடுமாற்றம்தான்
ஏற்படும். பொறுமையாக சென்றால்
தடுமாற்றமும் இருக்காது. தடமாற்றமும்
இருக்காது.

பொறுமை வெள்ளிக் தட்டில் வைக்கப்பட்டிருக்கும்
பொற்பழங்களுக்கு ஒப்பானது என்கிறது பைபிள்.

அதாவது பொறுமை விலை மதிப்பற்றது.

பொறுமை எப்போதும் நன்மையானதை
மட்டுமே தரும்.

பொறுமை இழப்பினால் தான் பல
கொலைகளும் தற்கொலைகளும்
நிகழ்கின்றன.

நடந்து முடிந்த பிறகு ஐயோ..
சற்று பொறுத்திருக்கலாமே!
ஆத்திரத்தில் கொலைவரை சென்று
விட்டோமே என்று
ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால்
கண்ணீர் விடும் மனிதர்கள்தான் அதிகம்.

ஆத்திரப்பட்டு என்ன சம்பாதிக்க முடியும்?

விலைமதிப்பில்லா நம் வாழ்க்கையைத்
தொலைப்பதோடு நமது பிள்ளைகளுடைய
வாழ்க்கையையும் தொலைத்துவிடுவோம்.

சிலருக்கு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று
தடாலடியாக எதுவும் செய்து முடித்துவிட
வேண்டும்.அப்படிப்பட்ட ஆத்திரம்
அழிவில் கொண்டுவிடும்.

எதுவும் மிக எளிதில் கிடைத்து விடாது.
மிக எளிதில் கிடைக்கும்
எந்த பொருளுக்கும் மதிப்பும்
கிடையாது.

இரண்டு நண்பர்கள் புதையல்
எடுப்பதற்காக காட்டு வழியாக 
சென்று கொண்டிருந்தனர்.
அடர்ந்த காட்டு விலங்குகள் வந்துவிட்டால்....
என்ன செய்வது என்ற அச்சம்
இருவர் மனதிலும் இருந்தது.

 எங்காவது மறைவிடத்தில்
இருந்துவிட்டு விலங்குகள் இல்லாத
நேரம் பார்த்து பயணத்தைத் தொடருவோம்
என்று பேசி வைத்துவிட்டு இருவரும்
சென்றனர்.

சற்று தொலைவு சென்றிருப்பார்கள்

அவர்கள் பயந்தது போலவே 
ஒரு புலியின்
உறுமல் கேட்டது.
ஒருவரும் வேகவேகமாக 
ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டனர்.
புலி நேரே அவர்கள் அமர்ந்திருந்த
மரத்தின் கீழ் வந்து நின்றது.
சுற்றும்முற்றும் பார்த்தது.

அப்படியே மரத்து நிழலில்ய
படுத்துக் கொண்டது.
நேரம் ஆகிக் கொண்டே இருக்கிறது.
புலி சென்றபாடில்லை.

என்ன செய்வது?
இப்படியே மரத்தில்
எத்தனை மணி நேரம்தான்
இருப்பது?

"நம் பொறுமையை சோதிப்பது போலல்லவா
இருக்கிறது "என்றான் சேகர்.

" புலி அந்தப்பக்கமாகதான்
படுத்திருக்கிறது.நாம்
இந்தப்பக்கமாக இறங்கி ஓடிவிடுவோம்"
என்றான் மணி.

"சற்று பொறு  .
எப்படியும் பொழுது சாய்வதற்குள்
புலி தன் இருப்பிடத்திற்குத் திரும்பிவிடும்.
நாம் பத்திரமாக இறங்கி சென்றுவிடலாம் "
என்றான் சேகர்.

"என்னால் எல்லாம் இதற்கு மேலும்
பொறுமையாக இருக்க முடியாது.
இரண்டுமணி நேரம் ஆகிறது.
நீ வருகிறதாக இருந்தால் வா...அல்லது
நான் தனியாகப் போய்விடுவேன் "என்றான்
மணி.


"ஆத்திரப்படாதே....
புதையல் எங்கே ஓடிவிடப் போகிறது?
முதலாவது நமது உயிர்தான் முக்கியம்.
கொஞ்சம் பொறுமையாகக் காத்திருப்போம் "
என்றான் சேகர்.

"பொழுது சாய்வதற்குள்
 புதையல் இருக்கும்
இடத்தைப்போய்ச் சேர்ந்தால் தான்
புதையலைத்  தோண்டி எடுக்க முடியும்.
என்று முனிவர் சொன்னது நினைவு
இருக்கிறதா இல்லையா?
இப்படியே இருந்தால் கடைசியில் 
வெறுங்கையோடு தான்
வீட்டிற்குச் போக வேண்டும்."
புலம்பித் கொண்டே இருந்தான் சேகர்.


அதற்குள் புலி எழும்பி மெதுவாக
நடக்க ஆரம்பித்தது.

"ஆ....அப்பாடா ஒரு வழியாக புலி
புறப்பட்டு விட்டுவிட்டது.
வா...வா..."
என்று மகிழ்ச்சியில் !கொம்பைப்
பிடித்திருந்த கையை விட்டுவிட்டு
 புலியின் முன்னால் போய்
விழுந்தான் சேகர்.

அவ்வளவுதான். வேட்டை முன்னால் வந்து
நிற்கும்போது புலி விடுமா?
கடித்துக் குத்திவிட்டு தன் போக்கில் நடந்தது

"இவ்வளவு நேரம்
பொறுமையாக மரத்தில் இருந்தாய்
இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா
நண்பா ?"என்று மரத்தில் இருந்தபடியே
அழுதான் மணி.

நினைத்த காரியம் கைகூட
பொறுமை வேண்டும்.

ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை
என்ற கதையாக சேகரின் கதை 
முடிந்தது.

புலி மறையும் வரை சற்று பொறுத்திருந்தால்
சேகருக்கு இந்த நிலைமை வந்திருக்காது.

அது என்ன ஆக்கப் பொறுத்தவன்
என்கிறீர்களா?

சமையல் முடியும்வரை காத்திருந்தவனுக்கு
சூடுஆறும் வரை பொறுமையாகக்
காத்திருக்க மனமில்லை.
பொசுக்கென்று சுடு சோற்றில்
கையை விட்டு, கையெல்லாம் பொத்து,
ஒரு பருக்கைகூட தின்னமுடியாமல்
மருத்துவமனையில் போய் படுத்துக்
கிடக்கும்நிலைதான் ஆறப்
பொறுக்காதவன் நிலையாக
இருக்கும்.
இதுதாங்க பொறுமை இல்லாதவர்
படும் அவஸ்தையும்  பாடும்.

அதனால் தான் பொறுமை வேண்டும்.


வள்ளுவர்,

"அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை
 இகழ்வார் பொறுத்தல் தலை"
என்றார்.

நிலம் தம்மைத் தோண்டுபவரையும்
தாங்கி நிற்கும் பண்பு
கொண்டது.அதைப்போன்று நம்மை 
அவமரியாதை
செய்பவனைப் பொறுத்து நிற்றல்தான் 
தலையாயக் பண்பு.
பொறுமையில் நிலத்தைப் போல பொறுமை 
காக்க வேண்டும்

தாவரங்கள் மரங்கள் ஆகியவற்றிலிருந்து
பலன்களைப் பெற வேண்டும் என்றால்
நாம் எவ்வளவு நாட்கள் காத்திருக்க
வேண்டியிருக்கிறது.?

பழம் பழுக்கும் வரை பொறுமை காக்க மாட்டேன்
என்றால்  புளிப்பான காயைத்தான் தின்ன
வேண்டியிருக்கும்.

பொறுமையாக இருந்து என்ன பயன்?
காலம் மட்டும் காத்திருக்க வேண்டியதுதான் என்று
சலித்துக் கொள்பவர்களும் உண்டு.

"ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்"

                         குறள் : 156

தீங்கு செய்தவர்களை தண்டித்தவர்க்கு
அன்று ஒருநாள் மட்டும்தான் இன்பம்.
ஆனால் பொறுத்தவர்க்கோ உலகம்
அழியும்வரை புகழ் நிலைத்திருக்கும்.

நிலைத்த புகழ் வேண்டுமா? 
பொறுமையாக இருங்கள் .

நிலத்தை ஆள வேண்டுமா?
பொறுமையாக இருங்கள்.

எண்ணிய காரியம்  ஈடேற வேண்டுமா?
பொறுமையாகக் காத்திருங்கள்.

தீமையிலிருந்து நம்மைக்
காத்துக்கொள்ள வேண்டுமா?
பொறுமையாகச்  செயல்படுங்கள் .

பொறுமை கடலினும் பெரிது.



Comments

Popular Posts