வாங்க பழகலாம்

 வாங்க பழகலாம்



கருவறையிலிருந்து எட்டிப் 
பார்த்த பிஞ்சு குழந்தை
சற்றே உடம்பு  சிலிர்த்துவிட
வாங்க பழகலாம் ....வாங்க பழகலாம்
வரவேற்பு பத்திரம் வாசித்தது
            காற்று 


நடக்க முனைந்த குழந்தை
நடை  தடுமாறி விழ
சற்றும் தயங்காது தாங்கி நின்று
 எழும்பு..... எழும்பு
 ஊக்கம் தந்து நின்றது
                 நிலம்

 படித்த பாடம் 
 மனதில் பதியாமல்
 மருண்டு விழித்தபோது
 முடியும் ....முடியும்
 முதுகில் தட்டி எழுப்பியது
            ஆசிரியரின் கரம்!

 கற்ற கல்விக்கு
 உற்ற வேலை கிடைக்காது
 உள்ளம் வெந்து நொந்தபோது
 வெல்வாய் ...வெல்வாய்
 விடாது துணை வந்தது
                    அம்மாவின் குரல்!


 சோதனை வந்து
 சோர்ந்து வீழ்ந்தபோது
 தோளோடு தோள் கொடுத்து
 பரவாயில்லை...பரவாயில்லை
 பார்த்துக்கலாம் ஊக்கம் தந்தது
                 நண்பனின் கரம்!

வறுமை வந்து
வாட்டி நின்றபோது
வாசல்வரை வந்து
வயிறார உணவழித்து
யாமிருக்கிறோம்....யாமிருக்கிறோம்
என்று நம்பிக்கை ஊட்டியது
              தன்னார்வலர்  குரல்!


எதுவுமே இல்லாதபோது
எட்ட வருவதைக் கண்டு
கிட்ட நெருங்க விடாமல்
ஊமைமொழிப் பேசி
வராதே. ....வராதே என்று
கதவடைப்பு நடத்தியது
                 உடன்பிறப்பு !






              

Comments

Popular Posts