சாரியை என்றால் என்ன?

சாரியை என்றால் என்ன?

ஒரு சொல்லைப் பிரித்து
எழுதும்போது தனியாக
எந்தப் பொருளையும் 
 உணர்த்தாமல் பெயர்ச்சொல்லையோ 
 வினைச்சொல்லையோ
 சார்ந்து வரும் இடைச்சொல்லை
 சாரியை என்கிறோம்.

பகுபத உறுப்புகள் பிரிக்கும்போது
நம்மைத் தடுமாற வைப்பது இடைநிலையும்
சாரியையும்தான்.

எது இடைநிலை?
எது சாரியை?
என்ற குழப்பம் எப்போதும் ஏற்படுவதுண்டு.

அந்தக் குழப்பத்தைத் தீர்ப்பது எப்படி?

சாரியை என்றால் என்ன? இடைநிலை
என்றால் என்ன? விகுதி என்றால் என்ன?

இந்தக் கேள்விகளுக்குத் தனித்தனியாக
விடை தெரிந்தால்  மட்டுமே அவற்றை நாம்
எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.முதலாவது சாரியை பற்றித் 
தெரிந்து கொள்வோம்.

சாரியை இரண்டு வகைப்படும்.

1. எழுத்துச் சாரியை
2. பொதுச் சாரியை

எழுத்துச் சாரியை:

கரம்,காரம்,கான் ஆகிய மூன்று
சொற்களும் எழுத்துச் சாரியைகளாகப் 
பயன்படுத்தப்படுகின்றன.

அதாவது உயிர் எழுத்துகள் பன்னிரண்டையும்
அறிமுகப்படுத்தும்போது
இந்த மூன்று சொற்களும் சாரியைகளாக
வரும்.

"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்
முதற்றே உலகு"

என்ற முதல் குறளிலேயே வள்ளுவர்
அகரம் என்று கரம் சாரியையை
அறிமுகப்படுத்தியுள்ளார்.


உயிர்க் குறில் எழுத்துகளை அறிமுப்படுத்தும்போது

அகரம்
இகரம்
உகரம்
எகரம்
ஒகரம்

என்று சொல்கிறோம். எழுதவும் செய்கிறோம்.

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்
முதற்றே உலகு"

என்ற முதல் குறளிலேயே வள்ளுவர்
அகரம் என்று கரம் சாரியையை
அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவ்வாறே 
உயிர்மெய்க் குறில் எழுத்துகளை
எழுதும்போதும்,

ககரம்
தகரம்
சகரம்
 மகரம்
 நகரம்
லகரம்
என்றுதான் எழுதுவோம்.

இங்கே கரம் சாரியையாகும்.

உயிர்க்குறில் உயிர்மெய்க் குறில்
எழுத்துகளுக்கு  கரம் சாரியையாக வரும்
என்பதை அப்படியே மனதில் பதிய வைத்துக்
கொள்ளுங்கள்.

உயிர் நெடில்  எழுத்துகளை
எழுதும்போது,

ஆகாரம்
ஈகாரம்
ஊகாரம்
ஏகாரம்
ஐகாரம்
ஓகாரம்
ஔகாரம்
 
என்று சொல்கிறோம்.எழுதுகிறோம்.


ஆனால்,
ஐ,ஔ ஆகிய
இரண்டு உயிர் நெடில் எழுத்துகளுக்கும்
காரம் சாரியையாக வருவதோடு
கான் சாரியையும் வரும்.
ஐகான்
ஔகான்
என்றும் சொல்லப்படுதல் உண்டு.


காரம்,கான் ஆகிய இரண்டினையும்
'ஐ'  மற்றும் 'ஔ' என்ற இரண்டு
எழுத்துகளும்
சாரியைகளாகப் பெற்று வரும்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆய்த எழுத்து அஃகான்
அஃகேனம்
என்று கான் மற்றும் கேனம்
ஆகிய இரண்டையும் சாரியைகளாகப்
பெற்று வரும்.


இவை எழுத்துச் சாரியைகளாகும்.

2. பொதுச் சாரியைகள்:

பதம் ஒரு பதத்தோடு புணரும்போதோ
பதம் விகுதியுடன் புணரும் போதோ
பதம் வேற்றுமை உருபுடன் புணரும்போதோ
இடையே சாரியை தோன்றும்.

நன்னூலார் பொதுச் சாரியைகள்
பதினேழு என்று கூறுகிறார்.

அன்ஆன் இன்அல்,அற்றுஇற்று
அத்துஅம்
தம்நம் நும்ஏ அஉ ஐகு ன
இன்ன பிறவும் பொதுச் சாரியையே!

 என்கிறது நன்னூல்.
      
அன் ஆன் இன் அல்
அற்று ,இற்று,அத்து,
அம்,தம்,நம்,நும்,
ஏ,அ,உ,ஐ,கு ,ன்

ஆகிய பதினேழும் பொதுச் சாரியைகளாக
வரும்.

நடந்தனன்

நட + ந் + த் + அன் + அன்

நட - பகுதி
ந் -சந்தி
த் - காலம் காட்டும் இடைநிலை
அன் - சாரியை
அன் -விகுதி


மரத்து இலை- அத்து சாரியையாக
வந்துள்ளது.

புளியம்பழம்-
புளி+அம்+பழம்=புளியம்பழம்
அம் சாரியையாக 
வந்துள்ளது.

பதிற்றுப்பத்து 
பத்து+ இன்று+ பத்து= பதிற்றுப்பத்து

இங்கே இற்று சாரியையாக
வந்துள்ளது.

அவனுக்கு
அவன்+உ+கு=அவனுக்கு
உ சாரியையாக வந்துள்ளது.


வண்டின்கால்
வண்டு+ இன்+கால்= வண்டின்கால்

இன் சாரியையாக வந்துள்ளது.

இதுபோன்று
சாரியையாக வரும் சொற்களையும்
எழுத்துகளையும் தெரிந்து வைத்துக்
கொண்டால் எளிதாக சாரியையைக்
கண்டறியலாம்.

 

Comments

  1. சாரியைப் பற்றிய நுணுக்கமான விளக்கத்தைப் பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts