கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மரம் 

டிசம்பர் வந்ததும் கிறிஸ்துமஸ் 
கொண்டாட்டங்களுக்கான ஆயத்தப் பணிகள்
களைகட்டத் தொடங்கிவிடும்.
எவ்வளவுதான் அலங்காரங்கள்  செய்திருந்தாலும்
அதில் கூடுதல் சிறப்பாக இருப்பது
கிறிஸ்துமஸ் மரம்.
கிறிஸ்துமஸ் மரம் இல்லாது
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்
முழுமை பெறாது. 

அது என்ன கிறிஸ்துமஸ் மரம்?
அதில் அப்படி என்னதான் சிறப்பு
இருக்கிறது?  
அது எதற்காக வைக்கப்படுகிறது?
அதன் வரலாறு என்ன?
பின்னணி என்ன? என்று ஆயிரம்
 கேள்விகள் வரிசைகட்டி வந்து நிற்கின்றன.

இந்தக் கேள்விகளுக்கு
எல்லாம் விடை காண வேண்டும் என்றால்
வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.
அது பற்றி வழிவழியாக சொல்லப்பட்டு வரும்
செய்திகளில் இருக்கும்
உண்மைகளை அறிய வேண்டும்.

வாருங்கள் கிறிஸ்துமஸ் மரம் பற்றிய
செய்திகளை அறிந்துகொள்வோம்.

கிறிஸ்துமஸ் மரம் பற்றிய
கதைகள் பல உண்டு.
அவற்றுள் முதன்மையாகச் சொல்லப்படும்
ஒரு கதையின் நாயகன் ஜெர்மனி
நாட்டைச் சார்ந்த  போனிபோஸ் என்ற
பாதிரியார்.

ஒருமுறை போனிபோஸ் ஜெபக்கூட்டத்திற்காக
பக்கத்து ஊருக்குப் சென்றிருந்தார்.
ஜெபக்கூட்டம் முடிந்து வரும் வழியில்
 கூட்டமாக மக்கள் ஓக் மரத்தை
வழிபட்டுத் கொண்டிருப்பதைக் பார்த்திருக்கிறார்.

இது என்ன விபரீதம்?
கிறிஸ்துவைத் தவிர வேறு ஒரு
தெய்வத்தையும் ஆராதனை
 செய்ய மாட்டோம் என்று
சொன்ன மக்கள் இப்போது ஓக் மரத்தைத்
தெய்வமாக வழிபட்டுத் கொண்டிருக்கின்றனர்
என்ற கோபம் அவருக்குள் ஏற்பட்டது.

கூடாது...இவர்களை இப்படியே விட்டுவிடக்
கூடாது. 

இந்த ஓக் மரம் இருப்பதால்தானே இந்த
மக்கள் இதனை வழிபடுகின்றனர். ஓக் மரத்தைப்
பிடுங்கி வீசி விட்டால்....?
வெட்டி எறிந்து விட்டால்...?

கோபத்தோடு ஓக் மரத்தை வெட்டி வீசினார்.
வேர் வரை வெட்டி வீசியாகிவிட்டது.
இனி இவர்கள் எந்த மரத்தை
வழிபடுகிறார்கள் என்று பார்க்கலாம் ?

நிம்மதியாக தனது இறைப்பணியைத்
தொடர்ந்து செய்து வந்தார்.

இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின்னர்
மறுபடியும் போனிபோசுக்கு தான் வெட்டி வீசிய
ஓக் மரம் இருந்த  வழியாகச்
செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இப்போது அங்கே ஓக் மரம் வெட்டி
வீழ்த்தப்பட்ட இடத்தில் மறுபடியும்
மரம் துளிர்விட்டு வளர்ந்து 
வருவதைப் பார்த்தார்.

என்ன ஆச்சரியம்!

நான் வேரோடு தோண்டி எறிந்த பின்னர்
மரம் துளிர்ப்பது  எப்படி சாத்தியமாயிற்று?

அப்படியே சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

ஒருவேளை இப்படியாக இருக்குமோ?

 கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்விற்கும்
ஓக் மரம் மறுபடியும் துளிர்விட்டு வருவதற்கும்
ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது
என்ற சிந்தனை பாதிரியார் மனதில்
ஆழமாக பதிய ஆரம்பித்தது.

இப்போது பாதிரியாரின் பார்வையில்
ஓக் மரம் இறைவனாகவே காட்சியளித்தது.

உடனே ஓக் மரத்தின் முன்னால் 
முழங்கால் படியிட்டு ஜெபம்
செய்ய ஆரம்பித்தார்.
அதன் பின்னர் ஓக் மரம் பாதிரியாரால்
நாள்தோறும் வழிபடும் ஒரு மரமாக
இருந்து வந்தது.
பாதிரியார் வழிபட்டு வந்த ஓக் மரத்தை
மக்களும் வழிபட ஆரம்பித்தனர்.

.இந்த நிகழ்வுக்குப்
பிறகு ஜெர்மானிய மக்களால்
ஓக் மரம் ஒரு புனிதமாக மரமாகப்
பார்க்கப்பட்டது.

பின்னர் கிறிஸ்துமஸ் நாட்களில் 
இந்த ஓக் மரம்
கிறிஸ்துமஸ் மரமாக வைக்கப்பட்டு
கொண்டாடப்பட்டு வந்தது என்பது
வரலாறு.

இவ்வாறு ஜெர்மனியில் மட்டும்
கொண்டாடப்பட்டு வந்த வேளையில்
இங்கிலாந்து அரசி விக்டோரியா
ஜெர்மன் இளவரசர் ஆல்பர்ட்டை
காதல் திருமணம் செய்தது கொண்டார்.
இவர்கள் திருமணத்திற்குப் பிறகு
இங்கிலாந்திலும் கிறிஸ்துமஸ் மரம் வைத்துக்
கொண்டாடும் கலாச்சாரம் பரவ ஆரம்பித்தது.

இந்தக் கதை ஒருபுறம் இருக்க
கிபி 1500 .ஆண்டு காலகட்டத்தில்
வாழ்ந்த மார்ட்டின் லூதர் கிங் என்பவருக்கும்
கிறிஸ்துமஸ் மரத்திற்கும் தொடர்பு உள்ளதாக
இன்னொரு கதையும் கூறப்படுகிறது.

ஒருநாள் காட்டு வழியாக
மார்ட்டின் லூதர் கிங் சென்று கொண்டிருக்கிறார்.
 மாலை மயங்கும் நேரம். மின்மினிகளெனத்
 தாரகைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக
 வானில் கண் சிமிட்டிக்
 கொண்டிருந்தன.
 இலைகள் எங்கும் பனித்துளி படர்ந்திருந்தது.
 பனித்துளி மீது விண்மீன் ஒளி பட்டுவிட
 அந்தக் காட்சி அவரை அங்குமிங்கும் 
 நகரவிடாமல் தடுத்திருக்கிறது.
 
 அந்த அழகில் தன் இதயத்தைப் பறி
 கொடுத்திருக்கிறார் மார்ட்டின் லூதர் கிங்.
 நெடுநேரம் அந்த இடத்தைவிட்டு
 அவர் நகரவே இல்லை.
 நேரம் ஆகிக்கொண்டே இருந்தது.
எப்படியோ பிரிய மனமில்லாமல் பிரிந்து 
 வீடு வந்து சேர்ந்தார்.
இருப்பினும்,காட்டில் பார்த்த 
அந்த மரத்தின் ஒளிமிகு
காட்சி அவர் கண்களைவிட்டு அகல மறுத்தது.

அதனைப் பார்த்துக்கொண்டே இருக்க
வேண்டும் என்ற வேட்கை மிகுதியால்
மறுநாளும் காட்டிற்குச் சென்றார்.
அந்தக் காட்சியைக் கண்டு ரசித்தார்.
இதைப்போன்ற ஒரு காட்சியை நாம் ஏன்
வீட்டில் அமைக்கக்கூடாது? என்ற கேள்வி
எழுந்தது.
காட்டிலிருந்து ஒரு தேவதாரு
மரத்தை வெட்டி வந்து 
அதில் மெழுவர்த்தியை
ஏற்றி ஒளிரவைத்து அழகு பார்த்தார்.


இந்த அழகிய காட்சி அவருக்குள் ஏதேதோ 
நினைவுகளைக் கொண்டு வந்தது.
அந்த ஒளியில் தேவ பிரசன்னம் இருப்பதாக
உணர்ந்தார். அந்த மரமும் அதைச் சுற்றிய
ஒளியும் ஒரு விழாக்கால மகிழ்ச்சியைக்
கொடுப்பதாக உணர்ந்தார்.

இதையே கிறிஸ்து பிறப்புநாளில்
செய்தால் என்ன?
என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.
அதுதான் சரி.
அந்த நாளின் சிறப்பாக இந்த 
மரத்தை அலங்கரித்து
வைப்பது இன்னும் 
கிறிஸ்துமஸ் நாளைச் சிறப்பாக 
கொண்டாடுவது போன்ற மன நிறைவை 
ஏற்படுத்தும் என்று நினைத்தார்.

அதனையே செயல்படுத்தினார்.
நண்பர்களிடமும் தன் கருத்தைத்
தெரிவித்தார்.அவர்களும் அதனை ஏற்றுக்
கொண்டனர்.
நாளடைவில் இந்த கிறிஸ்துமஸ் மரம்
வைக்கும் கலாச்சாரம் நாடெங்கிலும் 
பரவியது.

இப்படி கிறிஸ்துமஸ் மரம் பற்றிய
கதைகள் வெவ்வேறாக இருந்தாலும்
அவர்கள் நோக்கம் ஒன்றாகவே இருந்தது.
அதாவது கிறிஸ்துமஸ் மரம் புனித மரம்
என்ற கருத்தில் அனைவருக்கும் உடன்பாடு
இருந்தது.


பண்டிகைகள் மனமகிழ்ச்சி தருவதாக 
இருக்க வேண்டும்.
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை 
தருவதாக இருக்க வேண்டும்.
அந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும்
தருவதாக இருப்பதால் 
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் 
கிறிஸ்துமஸ் மரம் முக்கிய
பங்கு வகிக்கிறது. 

கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துவின்
பிறப்பை அறிவிக்கும் ஓர் அடையாளமாகவே
பார்க்கப்படுகிறது.
பசுமையான கிறிஸ்துமஸ் மரமும்🌲 
அது ஒளிரும் காட்சியும் இறைவனின் 
பிரசன்னத்தை ஒவ்வொருவர் உள்ளத்திலும்
உணர வைப்பதாக
 உள்ளது என்பது உண்மை.

ஓக் மரமே!.ஓக் மரமே!
கிறிஸ்து உயிர்ப்புக்கு
நீ என்றும் அடையாளமே!
தேவ பாலகன் பிறப்பினில்
உனக்குண்டு தனியிடமே!
கிறிஸ்துமஸ் குடிலில்
பெற்றாய் முதலிடமே - உன்னைக்
கிறிஸ்துமஸ் மரமாய்க்
காண்பது எம் பேரானந்தமே!



அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நாள் நல்வாழ்த்துகள்!




Comments

  1. கிறிஸ்து பிறப்பு நாளை எதிர்நோக்கி இருக்கும் இத்தருணத்தில் கிறிஸ்மஸ் மரம் பற்றிய பதிவும் படங்களும் மிக்க மனமகிழ்ச்சி அளிக்கும் பதிவாக இருந்தது.கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிக மிக அருமையான தகவல். நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular Posts