சாதி இரண்டொழிய வேறில்லை....

சாதி இரண்டொழிய வேறில்லை....

வீதிக்கொரு  சாதி பெயர்.
ஊருக்கொரு சாதி சங்கம்.
பெயருக்குப் பின்னால் சாதி
பெயர்.
இப்படியாக சமீப காலமாக சாதியைப் பற்றிய
பிரச்சாரங்களும் முன்னிறுத்தல்களும் 
அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

காரணம் என்ன?
என்ற ஆய்வு தேவை இல்லை.
ஆராய்ந்து எந்தப் பயனுமில்லை.
ஆனால் நல்ல கருத்துக்கள் நாளும்
விதைக்கப்பட வேண்டும்.
பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

அப்போதுதான் சாதிய வன்மங்களை
ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்றார்
வள்ளுவர்.

"சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
என்றார் பாரதி.

"உலகினில் சாதிகள் இல்லை -என்
உள்ளத்தில் வேற்றுமை இல்லை
கலகத்தைச் செய்கின்ற சாதி- என்
கைகளைப் பற்றி இழுப்பதும் உண்டோ?"
என்று கேட்டவர் பாரதிதாசன்.

"தர்மத்தின் கூர்மையோடே 
எவனோ செய்தான் சாதியை"
என்று அறச்சீற்றம் கொள்வார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

இப்படி சாதி என்பது தேவையில்லாத
ஒன்று என்பது ஆன்றோர் கருத்து.
அறிந்தோர் கருத்து.
அறம்சார் நன்மக்கள் கருத்து.

இவர்கள் எல்லாம் சாதி இல்லை...இல்லை
என்று பேசியிருக்கும்போது
ஔவை பேசாமல் 
இருந்திருப்பாரா
என்ன?

ஆனால் ஔவையாருக்குச் சாதி இல்லை
என்பதில் உடன்பாடு இல்லை.

என்ன ஔவையாருக்குச் சாதி
இல்லை என்பதில் உடன்பாடு இல்லையா?
ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆமாம்....ஔவையாருக்குச்
 சாதி இல்லை என்பதில் உடன்பாடு இல்லை.

அதனை அவரே சொல்கிறார்
கேளுங்கள்.


 "சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்- மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி"

                                   -   ஔவையார்

அனைவரும் சாதி இல்லை என்று
சொல்லும்போது ஔவை மட்டும்
இல்லை...இல்லை...சாதி உண்டு
என்று சொல்கிறாரே!

இது என்ன வேடிக்கை...விபரீத எண்ணம்.
ஔவை வள்ளுவரோடு முரண்படுகிறாரா?
என்று ஒரு விவாதக் களத்திற்குள்
இறங்கியிருப்பீர்கள்.
ஔவை என்ன சாதி என்ற
தேடலில் இறங்கியிருப்பீர்கள்.
ஔவையின்மீது இதுநாள் வரை
இருந்த எண்ணத்தில் ஒரு சறுக்கல்
ஏற்படுவது போல உணர்ந்திருப்பீர்கள்.

வேண்டாம்....வேண்டாம்..
ஔவையைப் பற்றி தவறான எண்ணம்
கொள்ள வேண்டாம்.
ஔவை இரண்டு சாதிகள் உண்டு
என்றும் அந்த இரண்டு சாதிக்குமான 
அடிப்படைத் தகுதிகள் என்னென்ன என்பதையும்
அழகாக சொல்லியிருக்கிறார்.

சாதி இரண்டொழிய வேறில்லை
என்று முதல் வரியிலேயே
இரண்டு சாதிகள் உண்டு .
அவற்றைத் தவிர வேறு சாதிகள்
இல்லை என்று
ஆணித்தரமாகச் சொல்லிவிட்டார்.

ஒன்று மேல் சாதி.
இன்னொன்று கீழ் 
சாதி.

அது என்ன மேல் சாதி; கீழ் சாதி.
இதுதானே வேண்டாம் என்கிறேன்
என்று கோபம் வருகிறதல்லவா?

ஔவை மேல் சாதி, கீழ் சாதி என்று
கூறியது நீங்கள் நினைப்பதுபோல
பிறப்பால் ஏற்பட்டதல்ல.
ஐயன் வள்ளுவரோடு ஔவை 
மாறுபாடு கொள்வாரா என்ன?
பிறப்பால் யாருக்குமே சாதி கிடையாது.

ஔவையின் கருத்துப்படி
மேல் சாதி யார் என்று கேட்கிறீர்களா?
'இட்டார் பெரியார் 'என்கிறார் ஔவை.
அது என்ன இட்டார்?
ஏழ்மையில் உள்ளவர்களுக்கு...
பசி என்று வந்து நிற்பவர்களுக்கு...
முதியோர்களுக்கு ...
இயலாதவர்களுக்கு  ...
உதவி செய்பவர் அதாவது இட்டு
ஆதரிக்கும் பண்பு கொண்ட 
என்று ஒருசாரார் இருப்பார்கள்
இல்லையா?
அவர்கள்தான் பெரியோர்
என்ற உயர்சாதி அமைப்புக்குள் 
வருவராம். அவர்கள்தான் மேல் சாதி.
அருமையான சொல்லியிருக்கிறார் 
இல்லையா?


வாசலில் வந்து நிற்பவர்க்கு உணவிடாமல்....
பசி என்று வந்தவரின் பசியாற்றாமல்....
முதியோரைப் பாதுகாக்கும் கடமை
உணர்வற்றவராக.....
நலிவுற்றோரைக் கண்டும் காணாதவராக
அதாவது இடுதல் என்ற பண்பு முற்றிலும் 
இல்லாதவராக மற்றொரு சாரார் 
உண்டு இல்லையா?
அவர்கள்தான் 
இழிகுலத்தோர் என்னும் இரண்டாம்
சாதியினராம். 
அதாவது கீழ் சாதியினராம் .

சாதி இரண்டு என்பதற்கு
இப்படி ஒரு விளக்கமா?
விளக்கம் என்னவோ ஏற்கும்படியாகத்தான்
இருக்கிறது.ஆனால்  ஔவையின் கருத்தை
ஏற்க வலுவான சாட்சி வேண்டாமா?
என்ற ஒரு கேள்வி எழுகிறதல்லவா?
நீங்கள் இப்படி கேட்பீர்கள் என்றுதான்
சாட்சியோடு வந்திருக்கிறார் ஔவை.

சாட்சியோடு வந்திருக்கிறாரா?

கடைசியாக பட்டாங்கில் உள்ளபடி
என்று சொல்லியிருக்கிறாரே அது என்ன?
பட்டாங்கில் உள்ளபடி என்றால்
என்ன ?
'நீதி நூல்களில் உள்ளபடி' என்று பொருள்.
நான் மட்டும் சாதி இரண்டு என்று
சொல்லவில்லை.
நீதிநூல்களும் இதைத்தான் 
சொல்கின்றன என்று
தன் கருத்துக்கு வலுவான
சாட்சியாக நீதிநூல்களைக் கொண்டுவந்து
நிறுத்தியிருக்கிறார் ஔவை.

இப்போது நம்புகிறீர்கள் அல்லவா?
நம்பித்தானே ஆக வேண்டும்.

உங்கள் செய்கையால்
உங்கள்  குணத்தால்
உங்கள் நடத்தையால்
உங்களுக்கான சாதி நிர்ணயிக்கப்படுகிறது.

நீங்கள் தான் உங்கள் சாதியைத்
தீர்மானிக்கிறீர்கள்.
உங்கள் சாதியைக் தீர்மானிப்பது
உங்கள் பிறப்பு அல்ல .

உச்சந்தலையில் ஓங்கி அடித்து
அழகாகப் புரிய வைத்துள்ளார் ஔவை.

இதுதாங்க ஔவையின் பார்வையில்
சாதி.

எப்படி  இருக்கிறது ஔவையின் சாதி
பாகுபாடு?
நல்லா இருக்கு இல்ல....
ரொம்ப ரொம்ப.....ரொம்ப
நல்லா இருக்கு இல்ல?

வரட்டா...



Comments

  1. Super. Tr.வாழ்க,வளர்க உம் தழிழ் புலமை.⭐✨⭐

    ReplyDelete
  2. ஔவையின் கூற்றை பதிவிட்டு சாதிகளின் பிரிவை அழகான விளக்கத்துடன் எடுத்துரைத்தது மிக அருமை.வாழ்த்துகள்.🌟🌟

    ReplyDelete
  3. சாதியையே வீதிக்கு கொண்டு வந்த ஔவையை , எம் கண்முன் கொண்டு வந்த செல்வபாய் ஆசிரியைக்கு நன்றிகள் பல. தொடரட்டும் உம் பணி.

    ReplyDelete

Post a Comment

Popular Posts