பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவு பாராட்டு மடல்

திருமதி   வசந்தி டேவிட்
தலைமை ஆசிரியை,
கே.டி. காய்க்வாட் மாநகராட்சி தமிழ்ப்பள்ளி,
சயான் கோலிவாடா, 
மும்பை - 37.


பணி நிறைவு நாள் : 01.04.2023


பொருநைநதி பொங்குநுரை கோநகர் நெல்லை
எங்கும் புகழ் மணக்கும் ஆரைகுளம் ஊரு
வஞ்சமில் ராஜன் பூமணி இணையர் சேர்வலாறு
நெஞ்சம் மகிழ  ஓதினர் வசந்தியெனும் நற்பேரு!

அன்பர் டேவிட்டோடு இணைந்த இச்சிற்றாறு
இன்பமாய்ப் பிள்ளைஇருவர்  தந்த  கூட்டுத் தேனாறு
புன்னகையாள் வசந்திக்குப் பருவம் என்றும் பதினாறு 
விழியுயர்த்திப் பார்க்க வைத்தது நின் ஒழுகலாறு!


கே.டி..காய்க்வாட் பள்ளியில் பாய்ந்த முதலாறு
ஷஹாஜி நகர் சர்தார் நகர் எங்கும் இவர் கிளையாறு
கே.டி.காய்க்வாட்டில் தலைமையாசிரியை எனும் தனிப்பேரு 
தன்னிகரில்லா வசந்திக்கு வாய்த்தோர் பெரும்பேறு!


ஆறாறு ஆண்டு ஆசிரியப் பணி என்பது வரலாறு
தேனாறாய்க் கற்பித்தலில் உண்டு தீஞ்சுவைப் பாலாறு
ஓராறு நாட்கள் போதாது இவரொரு பேராறு
சீராறு தீஞ்சுவையாறு இவருக்கு நிகராரு?


  கள்ளமில்லாப் பேச்சு என்றும் குளிரிளநீராறு 
 உள்ள வோட்டமோ தெளிந்த தெண்ணீராறு
 அள்ளும்மடையெனப் பேச்சில் இருக்கும்  சுவையாறு
 துள்ளும் நடையாள்  இவரொரு நந்தவனத்தேரு!

நற்பருவம் வந்ததும் ஓய்வென்பதை உரைத்ததாரு?
எப்பருவத்திலும் கற்றல்தானே கல்வியின் சிறப்புக்கூறு
கற்பவரும் கற்றவரும் கொண்டாடும் உன்னதப்பேறு
பொன்னிற பூந்தாது தூவி  வாழ்த்தும் நெடுவரலாறு !


எஞ்சிய காலங்கள் மகிழ்ச்சித் தேனாறு
விஞ்சிய வளங்கள் கொண்டு குவிக்கும் நல்லாறு 
மிஞ்சி உழைத்தது போதும் கொஞ்சம் இளைப்பாறு
கொஞ்சி மகிழ்ந்தளித்தோம் மதிப்பெண்  நூற்றுக்கு நூறு!
 
 

           - செல்வபாய் ஜெயராஜ் 


Comments

Popular Posts