காளமேகமும் அதிமதுர கவிராயரும்

காளமேகமும் அதிமதுர கவிராயரும் 


இருபெரு ஆளுமைகளுக்குள் எப்போதும்
நீயா? நானா? என்ற போட்டி இருக்கும்.

படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடெல்லாம்
இதற்குக் கிடையாது.
படித்தவர்கள் தானே பண்பாக 
நடந்து கொள்வார்கள் என்று
எல்லோரையும் நினைத்துவிட முடியாது.
அப்படி நினைத்துக் கொண்டிருந்தால்
நாம் ஏமாந்து தான் போவோம்.
பதவிக்காகப் போட்டி.
புகழுக்காகப் போட்டி.
முதல் மரியாதைக்கான
போட்டி.
உரிமைக்கான போட்டி. 
முதல் பரிசுக்கான  போட்டி.
எங்கும் போட்டி.
எதிலும் போட்டி.

இவை எல்லாம் எதற்காக?
தான்தான் எல்லாம்....
நான் நானே.....நான் மட்டும்தான்
என்று தன் இருப்பை முன்னிலைப்படுத்த
உலகம் தன்னை மட்டுமே
கொண்டாட வேண்டும்
என்ற நான்...எனக்கு
 என்ற சுயநலம் அன்றி வேறென்ன
 சொல்வது?
 
போட்டி பொறாமையாக மாறும்போது
சில விபரீதங்கள் நடைபெறுகின்றன.
ஆனால் அப்படி எல்லா இடங்களிலும்
விபரீதம் மட்டுமே நடைபெறும் என்று 
சொல்லிவிட முடியாது.

சில நேரங்களில் அவர்களுக்குள் நடக்கும்
போட்டி  காண்பவர் கண்களுக்கு
 நல்ல விருந்தாக
அமைவது உண்டு.

கண்களுக்கு மட்டுமல்ல .உங்கள்
செவிக்கும் இலக்கிய பசிக்கும்
நல்ல விருந்தாக வந்து அமைவதும் உண்டு.

அப்படி என்ன விருந்தப்பா 
சாப்பிட்டீர்கள் என்று
கேட்கிறீர்களா?

கவி விருந்துதாங்க....
"செவிக்குணவு யில்லாத போது சிறிது
வயிற்றுக்கும்  ஈயப்படும்"
என்றார் வள்ளுவர்.


செவிக்குணவுக்கா தமிழில்
பஞ்சம்.?

விருந்து படைத்தவர்களின் 
 உள்ளங்களில்
இல்லை கஞ்சம்.

அதனால் கவிநயம் கொஞ்சும்
பாடல்கள் நம்மிடம் தஞ்சம்.

கருத்துக்கு இல்லை பஞ்சம். 
அவற்றில் இலக்கியநயம் மிஞ்சும்.
போட்டிக்கு இழுத்தவர் உள்ளமோ அஞ்சும். துஞ்ச மறுக்கும்.

இப்படி அஞ்ச வைத்த ...கொஞ்ச
வைத்த....இன்னும் கொஞ்சம் 
இன்னும் கொஞ்சம்
என்று கெஞ்ச வைத்த
பாடல்களைக்
கேட்டு இன்புற ஆசையா?

வாருங்கள்....விருந்து எப்படி
இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்.

காளமேகப் புலவர் எந்தச் சொல்லைக் 
கொடுத்தாலும் பாடி அசத்திவிடுவார்.
கரியை உமியாக்குவார்?
தத்தித்தா தூதுதி தாதூதி என்று
எழுத்தாலே கவி படைத்து ஊதி அசத்திவிடுவார்.


புலமை இருக்குமிடத்தில் வறுமை 
இருக்கத்தானே செய்யும்.

இவருக்கும் திருமலைராயன்
என்ற சிற்றரசரைப் பாடிப் பரிசில்
பெற்று வர ஆசை.

அதனால் திருமலைராயன் அரசவையை நோக்கிச் சென்றார்.

திருமலைராயன் அவையில் 
அறுபத்து நான்கு புலவர்கள் இருந்தனராம்.
இந்த அறுபத்து நான்கு புலவர்களுக்கும் 
தலைவர் அதி மதுர கவிராயர்.

காளமேகம் போய்க் கொண்டிருக்கும்போது
எதிரே வழியில் அதி மதுர கவிராயர்
பல்லக்கில் வந்து கொண்டிருக்கிறார்.
தெருவெங்கும் மக்கள்  கூட்டம்.மகிழ்ச்சியும் ஆரவாரமும்
என ஒரே கொண்டாட்டம்

அனைவரும் அதிமதுர கவிராயரைப் புகழ்ந்து உரத்தக்
குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.
காளமேகம் ஒரு பார்வையாளனாக
ஒதுக்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதைப் பார்த்த கட்டியங்காரன்,
"என்ன நீ....எம் அதிமதுர கவிராயர் 
வந்து கொண்டிருக்கிறார்.
நீ சும்மா நிற்கிறாய்.
நீயும் புகழ்ந்து குரல் எழுப்பு "
என்கிறான்.

"நான் ஏன் புகழ வேண்டும்?"
எதிர் கேள்வி கேட்டு நிற்கிறார் 
காளமேகம்.

அத்தோடு விட்டுவிடவில்லை.

"அதிமதுரம் என்று அகிலம் அறியத்
துதி மதுரமாய் எடுத்துச் செல்லும்
புதுமையென்ன
காட்டுச் சரக்கு உலகில் காரணமில்லாச்
சரக்கு
கூட்டுச் சரக்கு அதனைக் கூறு"

என்று பாட்டிலேயே சாட்டையடி கொடுத்துவிட்டார்.

அதாவது "இந்த அதிமதுரைத்தை
உலகமறிய துதிமதுரமாக்கித்
தூக்கிச்செல்வதில் என்ன புதுமை இருக்கிறது?

அதிமதுரம் ஒரு காட்டுச் சரக்கு.
காரணமில்லாச் சரக்கு.
இத்தனை பேர் இவரைத் 
தூக்கிச் செல்வது
எதற்கு?"
என்று ஒரே போடாகப்
போட்டுவிட்டார்.

கேட்ட காவலன் சும்மா
இருப்பானா?

எமது தலைமைப் புலவரை
அவமதித்து விட்டான்.
இதைப்போய் உரியவர்களிடம்
சொல்லி உயர்பதவி பெற்றுக்கொள்ளலாம் என்ற
ஓர் ஆசை .ஓடோடி சென்று காதோடு காதாக ஒவ்வொருவருரிமும் ஓதி.... ஊதி பெரிதாக்கிவிட்டான்.
செய்தி அதிதமதுர கவிராயர் 
காது வரை  சென்றுவிட்டது.

சும்மா விட்டுவிடுவாரா அதிமதுரம்?

"என்னை இகழ்ந்தானா ?
 "பல்லை நறநறவெனக்
கடித்தார்.

"மன்னரிடம் சொல்லி நான்
யார் என்பதை அறிய வைக்கிறேன்"
என்று அரண்மனை நோக்கி ஓடினார்.

மன்னரிடம் சொன்னார்.

மன்னரும்   "இழுத்து வா 
அந்த ஆணவக்காரனை"
 என்று கட்டளையிட்டார்.

அவ்வளவுதான்... 
காளமேகம் மன்னன் அவையில்
கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்.

நீர் யார் 
என்பதுபோல மேலும் கீழுமாகப்
பார்த்தார் மன்னர்.
சாதாரண ஒருவனாக இருந்தால்
ஆஸ்தான கவியை அவமதித்தவனுக்கு நூறு கசையடி கொடுங்கள் என்று சொல்லிவிடலாம்.
அல்லது ஜெயிலில் அடையுங்கள் என்று உத்தரவிடலாம்.

கவிஞர் ஆயிற்றே......சட்டென்று
முடிவெடுக்க முடியவில்லை.
சற்று யோசனைக்குப் பிறகு
"எனது ஆஸ்தான கவிக்கு
எதிராக பாடல்பாடி உன்னால் வெற்றி பெற முடியுமானால்
ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்கிறேன்.
அதில்  வென்றுவிட்டால் உனக்கு
பரிசு உண்டு ....இல்லை என்றால் கடுமையான தண்டனையை
சந்திக்க நேரிடும்.
சம்மதமா "என்று கேட்கிறார்  மன்னர்.

"...ஒத்துக்கொள்கிறேன்?"என்று சொல்லிவிட்டார் காளமேகம்.

என்ன பெரிய போட்டி வைத்துவிடப்
போகிறார்கள். கவி பாட வேண்டும்.
அவ்வளவுதானே .பாடி அசத்திவிடலாம்
என்று ஒரு மனக்கணக்கு போட்டு 
வைத்த காளமேகம் போட்டியை "எப்போது வைத்துக்கொள்ளலாம்?"
என்று கேட்டார்.

ஆனால் அதிமதுர கவிராயர்
வேறொரு மனக்கணக்கு போட்டு
வைத்திருந்தார்.

இவர் தன்னையிட எந்தவிதத்தில் உயர்ந்தவராக இருந்துவிடப் போகிறார்?
இந்தச் சூழலை 
இதை தனக்குச் சாதகமான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த
வேண்டும்.
எடக்குமடக்காகச் சொற்களைச் சொல்லிப்
பாடல் பாடச் சொல்ல வேண்டும்.
அவர் பாடத் தெரியாமல் அவையில்
திருதிருவெனமுழிக்க வேண்டும்.
அதைப் பார்த்து அவையோர் 
கைகொட்டிச் சிரிக்க வேண்டும்.
காளமேகம் அவையைவிட்டே அவமானத்தால் இவர் ஓட வேண்டும்."
இப்படி ஒரு வன்மத்தோடு ஒரு கணக்குப் போட்டு நாளை மறுநாள் போட்டியை வைக்கலாம்
என்று நாள் குறிக்கும்படி
மன்னரிடம் கூறினார் 
அதிமதுரம்.

மன்னரும் நாளை மறுநாள்
போட்டி என்று அறிவித்துவிட்டார்.

"சரி. எந்த நாளில் நீங்கள் போட்டி வைத்தாலும் பரவாயில்லை.
நான் தயாராகத்தான் இருக்கிறேன்"
என்றார் காளமேகம்.

அவர் எதிர்பார்த்த 
போட்டிக்கான 
அந்த நாளும் வந்தது.
விடுவாரா?

காளமேகம் அவைக்கு வந்தார்.

காளமேகப்புலவரைப்
பார்த்ததும்

"நீர்தான் கவிகாளமேகம் என்பவரோ?"
என்று முதல் கேள்வியே
நக்கலாகக் கேட்டு வைத்தார் அதிமதுரம்.

"ஆமாம்....அப்படித்தான் சொல்கிறார்கள்.
தாங்கள் யார் என்று 
நான் தெரிந்து
கொள்ளலாமா? "என்று எடக்கு மடங்காக காளமேகமும் ஒரு கேள்வியைத்
கேட்டு வைத்தார்.

"ஹா...ஹா...ஹா...
ஈதென்ன கேள்வி?
என்னை
தெரியாதவர் இந்த அரசவையில் 
உளரோ ?"என்று அவையைப் பார்த்து
கேட்டார் அதிமதுரம்.

"தெரிந்து கொள்வதற்கு 
நீரென்ன நாடாளும்
மன்னனோ?"

"ம்...என்ன ஆணவம் உமக்கு?
இந்த அரசவைக் கவிராயர் நான் "
என்று பெருமையாகச் பதிலளித்தார்
அதிமதுர கவிராயர்.


"வாலெங்கே நீண்டெழுந்த
வல்லுயிரெங்கே நாலு
காலெங்கே ஊன்வடிந்த கண்ணெங்கே
- சால
புவிராயர் போற்றும் புலவீர்காள்
நீங்கள்
கவிராயர் என்றிருந்தக் கால்"
என்று பாடலாலேயே பதில் கேட்டார் காளமேகம்.

கவி என்றால் குரங்கு என்று
இன்னொரு பெயரும் உண்டு.
அதனால்தான் நீர் கவி என்கிறீரே 
உமது வால் எங்கே?
நாலு கால் எங்கே?
நீண்ட வயிறு எங்கே?
ஊன் வடிந்த கண் எங்கே? என்று
 கேட்டார் காளமேகம்.

"ம்....என்ன திமிர் உமக்கு?
தலைமைப் புலவன் என்னிடமேயா?"

"தலைமைப் புலவர் தலைமைப் புலவர்
என்கிறாரே....தலைமைப் புலவரின்
பெயர் என்னவோ?"

"ம்.....அதிமதுர கவிராயர்."

"நல்லபெயர்....பெயரில் இருக்கும்
மதுரம் பேச்சில் இல்லையே....

"அதிமதுர மென்றே யகிலமறியத்
துதி மதுரமா யெடுத்துச் சொல்லும்
புதுமையென்ன
காட்டுப் சரக்குக்கிற் காரமில்லாச் சரக்கு
கூட்டுச் சரக்கதனைக் கூறு "

என்று பாட்டாலேயே
பெயருக்கும் விளக்கம் கேட்டு
குதர்க்கமான மற்றுமொரு  கேள்வி கேட்டு விடை கூறும் என்றார்
காளமேகம்.

கோபத்தில் கொதித்துக்
கொண்டிருந்த அதிமதுர
கவிராயர் பாட்டைக் கேட்டதும்

"என்ன ....
தலைமைப் புலவரையே எதிர்த்துப் பேசும்
அளவிற்கு நீர் புலமை மிக்கவரோ?"
என்றார்.

"அப்படி நான் சொல்லவில்லை.
அறிந்தோர் சொல்கின்றனர்."

"உம்மை அறிந்தோருமுண்டோ....என்ன ஒரு தற்பெருமை....என்னவொரு
ஆணவம்......."

"ஆணவம் இல்லை.ஞானச்செருக்கு."

" ஞானச் செருக்கென்றால்...
 சாதாரண கவிஞர் நீர்.
உம் புலமைமீது இவ்வளவு கர்வமா?
எக்கவியும் பாடுவீரோ?"

"என்ன கவி வேண்டும்?
கூறும். கூறிப் பாரும்."

"அரிகண்டம்  பாடத் தெரியுமா?"

"அரிகண்டம் என்ன அரிகண்டம்?
எமகண்டமே ஏறிப் பாடுவேன்.
அதற்கு நீர் தயாரா?"

"அரிகண்டம் என்றால் என்ன என்பது
உமக்குக் தெரியுமா?..தெரிந்துதான் பேசுகிறாரா?
இல்லை...."

"ஏன் தெரியாது?
கழுத்தில் கத்தியைக் கட்டிக்கொண்டு
கொடுக்கும் குறிப்புக்கு ஏற்ப பாட வேண்டும்.
அவ்வளவுதானே?
பாடத் தவறினால் உயிர் போய்விடும்
என்பதும் தெரியும்"

"பாடலில் சொற்குற்றம் ,பொருள் குற்றம்
இருக்கக்கூடாது.
இலக்கணப்பிழை கூடாது
அது எமக்குத் தெரியுமா?"

"எல்லாம் எமக்குத் தெரியும்."

" எல்லாம் தெரிந்துவிட்டால்...
எதற்கும் துணிந்துவிட்டீர்.
ஐயோ...பாவம்
பால் குறிப்பு இதோ ...பாடல்களைப்
பாடும் ...அப்புறம் பேசும் "
என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து
பாடலைத் தொடங்கப் சொன்னார் அதிமதுரம்.

 ஒவ்வொரு குறிப்பாகச்
சொல்லச் சொல்ல அடுத்த நிமிடமே
பாடல் வந்து விழுந்தது.
சொற்சுவை இருந்தது. பொருளில் பிழை இல்லை.
இலக்கண வரம்பு மீறா வரிகள் வந்து
விழுந்தன.
அருமையானப் பாடல்கள்.
குறையில்லாப் பாடல்கள்.

மன்னரோ அதிமதுர கவிராயரோ இதனை
சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
அவையோர் அசந்து போய்
நின்றனர்.மன்னர் இதனை சற்றும்
எதிர் பார்க்கவில்லை.
கடைசியில் வேறு வழியில்லாமல்
காளமேகம் வெற்றி பெற்றுவிட்டார்
என்று அறிவித்தார் மன்னர்.

இப்போது பரிசு வழங்க வேண்டும்.
மன்னருக்குமத் தர்மச் சங்கடமான
நிலைமை.
பரிசு வழங்கினால் தனது ஆஸ்தான
கவிராயரைவிட சிறந்தவர் காளமேகம் என்பதை
ஒப்புக்கொண்டதாகிவிடும்.

அரசரின் மனம் 
இதற்கு இடங்கொடுக்க மறுத்தது.

நாளை...நாளை என்று
பரிசு கொடுக்காமல் காலம் தாழ்த்தினார்
மன்னர்.
இருந்து இருந்து பார்த்தார் காளமேகம்.
அரசர் பரிசு தருவதாக இல்லை. 
எத்தனை நாள்தான் காத்திருப்பது?
ஒருகட்டத்தில் பொறுமை இழந்தார்
காளமேகம்.
இனி காத்திருந்து பயன் இல்லை. என்ன


கோபம் வந்தால் கூடவே பாடலும்
வருமே... வந்த கோபத்தில்...

"கோளார் இருக்குமூர்
கோள்கரவு கற்றவூர்
காளைகளாய் நின்று கதறுமூர் -
நாளையே
விண்மாரி யற்று வெளுத்து
மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்"

என்று வசை பாடி முடித்துவிட்டுச்
விட்டார்.

இந்த ஊர் வழிப்பறி செய்து
வாழும் களவாணிகள் இருக்கும் ஊர்.
 கோள்மூட்டிகள் இருக்கும் ஊர்.
திருடர்கள் இருக்கும் ஊர்.
கிளைகளும் நின்று கதறும் இந்த
ஊர்.
மழை இல்லாது
மண்மாரி பொழிந்து அழியட்டும் "என்று
வசைபாடிவிட்டுச் சென்றுவிட்டார்.

புலவர் வசை பாடினால் பொய்க்குமா?
காளமேகம் அறம்பாடி அழிந்தது ஊர். 
நமக்குக் கிடைத்தது நல்ல கவி
தேர்.

போட்டிக்குப்போட்டி 
சரியான போட்டி இல்லையா?

  











Comments

Popular Posts