கரவிலா நெஞ்சத்தவர்

கரவிலா நெஞ்சத்தவர்


கரவிலா நெஞ்சத்தவர் யார்?

இப்படியொரு கேள்வி வந்து 
மண்டையில் ஏறி உட்கார்ந்து 
அப்படிப்பட்ட நபரைத் தேட ஆரம்பித்தது.
அந்தத் தேடலின்போது

"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கல்லாமை வேண்டும்."
என்ற வள்ளலாரின் வரிகள் வந்து
என்னைத் குறுக்கு விசாரணை செய்ய வைத்தது.

இறைவனிடமே  வரம் கேட்கும் அளவிற்கு
 உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுகிறவர்கள்
ஆபத்தானவர்களா?
ஏன் வள்ளலார் அப்படியொரு வேண்டுதலை
இறைவனிடம் வைத்தார்.?
அவர்கள் உறவு வேண்டாம் என்று 
விலகி ஓடும் அளவுக்கு அவர்கள்
தீயவர்களா?

வள்ளலாரின் வரிகள்  என்னை
மேலும் சிந்திக்க வைத்தது.

அப்படியானால்...

வஞ்சகர்கள் உள்ளம் ஒன்று நினைக்கும் .
உதடு ஒன்று பேசும்.

இதைத்தான்

"கண்டு ஒன்று சொல்லேல்"
என்று  ஔவையும் சொல்லியிருப்பாரோ?

முகத்திற்கு முன்னால் புகழ்ந்தும்
 பின்னால் இகழ்ந்தும் பேசும் பண்பு
கொண்டோரால் நிறைந்ததுதான் இவ்வுலகு.

பேசினால் பேசிட்டுப் போகிறார்கள்.
நாம் பாட்டுக்கு நம்வழியே
செல்ல வேண்டியதுதான்.
அவர்களால் நமக்கு என்ன பாதிப்பு வந்துவிடப்
போகிறது என்கிறீர்களா?

அவர்களால் எந்த நேரத்திலும்
ஆபத்து ஏற்படலாம்.
அவர்கள் நாகப்பாம்பை ஒத்தவர்கள்.
நாகப்பாம்பு  எந்த நேரத்தில் கடிக்கும்
என்று சொல்ல முடியுமா?


இப்படி நாகப்பாம்பை நம்கண்முன்
இழுத்து வந்து அச்சப்பட
வைத்திருக்கிறார் ஒருவர்.

அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைக்
கேளுங்கள்.
இதோ அவர் உங்களுக்காகப் பாடிய பாடல்...


"நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம்
கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு
நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர்
கரவார்
கரவிலா நெஞ்சத்தவர்

  மூதுரை பாடல் : 25

நஞ்சுள்ள நாகப்பாப்பு தான் இருக்கும்
இடத்தை மறைத்துப் புற்றுக்குள்
மறைந்தே வாழுமாம்.
ஆனால் அதிக விஷம் இல்லாத நீர்ப்பாம்பானது
எந்தவித அச்சமும் இல்லாமல்
தண்ணீரில் கிடைக்குமாம்.

அதுபோல மனதில் ஒன்றை மறைத்து
வெளியில் வேறொன்று பேசும்
கபடம் கொண்ட வஞ்சகர்கள்
பேசும் பேச்சு ஒன்றாகவும் நினைவு
மற்றொன்றாகவும் இருக்கும்.
அவர்கள் நாகப் பாம்பை ஒத்தவர்கள்.

ஆனால் வஞ்சகம் இல்லாதவர்கள் 
எதையும் மனதில் மறைத்து வைத்துப்
பேசுவதில்லை.
வெளிப்படையாகப் பேசுவர்.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்
வஞ்சகம் அவர்களிடம் கிடையாது.

அதாவது நீர்ப்பாம்பு 
பலரும் அறிய வெளிப்படையாகச்
சுற்றித் திரிந்து போல அவர்கள் பேச்சில்
 எந்தவித
ஒளிவு மறைவும் இருக்காது.

வஞ்சகர்கள் விஷமுள்ள நாகப் பாம்பைப்
போன்றவர்கள். நல்லவர்கள் நீர்ப்பாம்பைப்
போன்றவர்கள்.


நாகப்பாம்பு கயவர்களுக்கும்
நீர்ப்பாம்பு நல்லவர்களுக்கும் உவமையாகக்
கூறப்பட்டுள்ளது.

இதனால்தான் உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசுவார் உறவு கலவாமை
வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்
வள்ளலார் 

நாகப்பாம்பு போன்ற இந்தக்
கயவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் .

நெஞ்சில் நிலைநிறுத்தி 
வைத்துக் கொள்ள வேண்டிய
அருமையான கருத்து இல்லையா?

Comments