கருதியவாறாமோ கருமம்

கருதியவாறாமோ கருமம்?

நாம் நினைப்பது போன்றா
 வாழ்க்கை அமைகிறது?
 
அப்படி அமைந்திருந்தால் 
கணக்கு வழக்குகளை சரியாக
எழுதி முடித்து வைத்துதிருப்போமே...
ஆனால் நாம் ஒன்று எழுத
வாழ்க்கைத்தரத்தை வேறொரு
திசையை நோக்கி இழுக்க...
இடையில் எங்கே குளறுபடி நடந்தது?
முட்டிமோதி மனம் விசாரணைக்குக்
கூண்டில் நம்மை ஏற்றி
வைத்து விசாரித்துக் கொண்டிருக்க
பதில் சொல்ல முடியாமல்
நாம் திருதிருவென்று விழிக்க....
இப்படியாக ஏதேதோ திருப்பங்களோடு
வாழ்க்கைச் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் என்ன?
எங்கே தப்பு நடந்தது ?
நடந்து வந்த பாதையைத் திரும்பிப்
பார்க்கிறோம். ஒரு தப்பும் கண்களில் படவில்லை.
அப்படியானால்...அப்படியானால்....
இந்த வாழ்க்கைதான் என்ன?
நினைவுகளில் கண்கள்கலங்கி 
நிற்கும்போது
கண்ணதாசன் எழுதிய பாடல்
காற்றினில்  வந்து காதோடு
பேச....


"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே  நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது
எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை
இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது..."


மனம் மறுபடியும் மறுபடியும் கண்ணதாசன்
கவிதை வரிகளை அசைபோட்டு
ஆறுதல் தேடுகிறது.


இந்தப் பாடலை மனம் அசைபோட்டுக்
கொண்டிருக்க ஔவை எழுதி இன்னொரு
பாடல் என் நினைவில் வந்து
குறுக்கு விசாரணை செய்ய
வைக்கிறது.

சரி என்னதான் வாழ்க்கை?
நான் எழுதியது எதுவும் நடக்கவில்லை.
அப்படியானால் என் வாழ்க்கைக்கான
கதையை  எழுதுவதுதான் யார்?
ஔவையிடமாவது விடை கிடைக்குமா?

ஔவை என்னதான் கூறுகிறார்
கேட்போமா?


"எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவாறே யாகுமோ கருமம்-
கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்
கா யீந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை"

 மூதுரை பாடல்  22


எந்தப் செயலும் ஒருவன் தலையில்
எழுதியவாறே நிகழும்.
எண்ணிய செயல் நடக்கவில்லையே 
என்று வருத்திக்
கொண்டிருக்கும் மட நெஞ்சே
 நீ நினைத்தபடி நினைத்த நேரத்தில்
 எல்லாம் நடந்துவிடுமா?
  கற்பக மரம்
  விரும்பியதை எல்லாம் தரும்
  என்று சொல்வார்கள்.
  அதனால் ஒருவன் அதன்கீழ் தன் தவம்
  இருக்கிறான்..
  ஆனால் அவனுக்குக் கிடைத்தது
  என்ன தெரியுமா?
  
  காஞ்சிரங்காய்.
  அதாவது எட்டிப்பழம்.
  எட்டிப்பழம் தின்றதும் சாவுதான்
  வரும். இது எப்படி சாத்தியமாயிற்று?
எல்லாம் அவன் செய்
முன் வினைப்பயனே அன்றி
வேறொன்றுமில்லை.

வினைப்பயன் படிதான்
எல்லாம் நடக்கும்.
நல்லது செய்தவனுக்கு நன்மை நடக்கும்
தீமை செய்தவனுக்கு தீமைதான்
நடக்கும்.

அப்படியானால் நாம் நினைத்தபடி
ஒன்றும் நடக்காதா?

 நினைத்தெல்லாம் எல்லாம் நடந்துவிட்டால்....
 மறுபடியும் மனம் பாடலை நோக்கிச் செல்கிறது.
 
 கருதியது கருதியவாறே நடக்காது.
 நடப்பவை எல்லாம் முன்செய்
 வினைப்பயனே....தேற்றிக்கொண்டு
 கடந்து செல் மானிடா.....மனம் ஆறுதல் சொல்ல
 கடந்து செல்கிறேன் கனத்த இதயத்தோடு!




Comments

Popular Posts