ஈஸ்டர் வாழ்த்து

  ஈஸ்டர் வாழ்த்து


கிறிஸ்துமஸ் என்றதும் நினைவுக்கு வருவது
கிறிஸ்துவின் பிறப்பு.
அந்த மாட்டுக்கொட்டில்.
கூடவே கிறிஸ்துமஸ் தாத்தாவும் 
நினைவுக்கு வருவார்.
கிறிஸ்துமஸ் தாத்தா வருவார்.
பரிசுப் பொருட்கள்
கொண்டு வருவார் என்று குழந்தைகள்
தூங்காமல் காத்திருக்கும் நாட்களும்
நினைவில் வந்து போகும்.

இவைமட்டுமா..?..கிறிஸ்துமஸ் என்றால் 
 கேக் இல்லாமலா...என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?
வகைவகையான கேக் தயாரித்து 
உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்
கொடுத்து மகிழ்வதில்தான் கிறிஸ்மஸ் 
பண்டிகை கால
மகிழ்ச்சியே இருக்கிறது .


கிறிஸ்துமஸ் என்றால் கேக் .
 பொங்கல் என்றால் கரும்பு.
 தீபாவளி என்றால் விளக்கு.
 ஹோலி என்றால் வண்ணம்.
 இப்படி சில அடையாளங்களைக்
 கொடுத்துப் பண்டிகைகளைக் கொண்டாடிக்
 கொண்டிருக்கிறோம்.
 
 ஈஸ்டர் என்றதும் நினைவுக்கு வருவது
 எது என்றால் கிறிஸ்து கல்லறையில் இருந்து
 உயிர்த்தெழுதல்  என்று சட்டென்று
 சொல்லி விடுவோம்.
 கிறிஸ்துமஸ் கேக் போலவே
 ஈஸ்டருக்கும் ஏதாவது 
 ஒரு பொருள்  சிறப்பானதாக
 இருக்க வேண்டுமல்லவா?


இருந்திருக்கிறது.
ஈஸ்டர் என்றால் முட்டை.

என்னது முட்டையா? என்கிறீர்களா?

கிறிஸ்துமஸ் நாட்களில் எப்படி
கேக் முக்கியத்துவம் பெறுகிறதோ
அதுபோல ஈடஸ்டர் நாளில் முட்டை
சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.
 
 இந்த முட்டையைக் கையில் கொடுத்துதான்
"இயேசு உயிர்த்தெழுந்தார் "என்று வாழ்த்துச்
சொல்ல வேண்டுமாம்.

ஏன்? எதற்கு என்று கேள்வி கேட்க
வேண்டும் போல் தோன்றுமே!

 ஈஸ்டர்  முட்டையின் வரலாறு
 மிகவும் சுவாரசியமானது.
 
  முட்டை உயிர்த்தெழுதலின் அடையாளமாக
  பார்க்கப்படுகிறது.

முட்டைக்கும் கிறிஸ்து உயிர்தெழுதலுக்கும் 
நெருங்கிய தொடர்பு 
இருந்ததாக ஹீப்ரு மொழி கதைகள் கூறுகின்றன.
மறுபிறப்பின் அடையாளமாக முட்டை
இருந்து வந்திருக்கிறது.
புதிய வாழ்வின்
குறியீடாகவே முட்டையை 
மக்கள் பார்த்திருக்கின்றனர்.
 
இந்த ஈஸ்டர் முட்டையைப் பற்றி
மாறுபட்ட  பல கதைகள்
கூறி வருகின்றனர்.


 பாஸ்ட்ஓவர் செடர்  என்ற பண்டிகை
 யூதர்கள் கொண்டாடும் ஒரு பண்டிகையாக
இருந்து வந்திருக்கிறது. 
வேக வைக்கப்பட்ட முட்டைகள் உப்புநீரில்
முக்கப்பட்டு  பண்டிகைக்கால
சிறப்பு காணிக்கையாக  தேவாலயங்களில்
வைப்பது இந்தப் பண்டிகையின்
சிறப்பு.
 
அதுபோல பஸ்கா பண்டிகை 
வாழ்த்து கூறும்போதும்
முட்டைகளைத் தந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
என்று வாழ்த்தும் வழக்கமும் 
நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.

இப்படி ஈஸ்டர் பண்டிகையில் முட்டை
தனி இடம் பிடித்திருக்கிறது.

இந்த ஈஸ்டர் முட்டையில் சிவப்பு முட்டை
பற்றிய கதைகள் 
கேட்பதற்கு ஆவலைத் தூண்டுவதாக
உள்ளன.

இயேசு மரித்த மூன்றாம்நாள் 
அதிகாலையிலேயே  இயேசுவைக் காண 
மகதலேனா மரியாள்
மற்றொரு பெண்ணுடன் கல்லறைக்கு
வருகிறார். வரும்போது உண்பதற்காக 
கையில் வேக வைத்த முட்டைகளையும் ்
கொண்டு வந்திருக்கிறார்.
கல்லறைக்கு வந்த மகதலேனாவிடம்
மரித்த இயேசு உயிர்த்தெழுந்த 
நற்செய்தி சொல்லப்படுகிறது .

அவர் இயேசுவைக் காண வேண்டும் என்று
அங்கிருந்து திரும்பிச்  செல்கிறார்.
போகும் வழியில் இயேசுவைப் 
பார்த்துவிடுகிறார். 
நம்பமுடியவில்லை.
அதன் பின்னர் தான்
கொண்டு வந்த முட்டைகளை எடுத்துப்
பார்க்கிறார்.
முட்டைகள் அனைத்தும் சிவப்பு நிறமாக
மாறியிருந்ததாம்.
அவருக்கு ஒரு ஆச்சரியம்.
"
"எப்படி இந்த முட்டைகள் சிவப்பாக 
மாறின.?
இதுதான் இறைவன் உயிர்த்தெழுந்தார்
என்பதற்கான அடையாளமாக
இருக்குமோ?"
என்று நினைத்தார். அப்படியே
நம்பினார்.


இப்படி ஒரு கதை இருக்க
மற்றுமொரு சாரார் வேறுவிதமான
இன்னொரு கதையைக் கூறுகின்றனர்.

மகதலேனா மரியாள் இயேசு உயிர்த்தெழுந்து
விண்ணுலகுக்குச் சென்றுவிட்டார்
என்ற மகிழ்ச்சியான செய்தியை அனைவரிடமும்
சொல்லிவிட வேண்டும் என்று 
அங்குமிங்கும் ஓடுகிறார்.

முதலாவது மன்னனிடம் போய் சொல்ல வேண்டும்
என்ற ஆவல் மேலிட அரண்மனையை நோக்கி
ஓடுகிறார்.
ரோம மன்னனிடம் போய் "என் இயேசு 
உயிர்த்தெழுந்தார். நான் அவரை உயிரோடு
பார்த்தேன் "என்று  
 சொல்கிறார்.
 
மன்னனுக்கு பேரதிர்ச்சி.

" அது எப்படி மரித்தவர் உயிரோடு எழும்பி
 இருக்கமுடியும் ? அதை நான் எப்படி
 நம்புவது? நீ பொய் சொல்கிறாய் 
 "என்று  ஐயத்தோடு மகதலேனாவைப்
 பார்த்துக் கேட்கிறார் மன்னர்.
 
"நான் வழியில் பார்த்தேன்....ஆனால் 
 இந்த மன்னர் நம்ப மறுக்கிறாரே...
இதனை  நான் எப்படி மெய்ப்பிப்பது ?"
என்ற குழப்பத்தோடு
மகதலேனா மன்னன் முகம்
பார்த்து நின்றிருக்கிறார்.

அப்போது மன்னர் தன் வேலைக்காரரிடம்
 ஒரு முட்டையை எடுத்துவரச் சொல்கிறார்.
 முட்டை கொண்டு வந்து மேசைமேல் 
 வைக்கப்படுகிறது.
 
"ஏசு உயிர்த்தெழுந்தார் என்பதை 
நம்ப வேண்டுமானால்
இந்த வெள்ளை முட்டை சிவப்பாக 
மாற வேண்டும்.
 .இந்த வெள்ளையான முட்டை சிவப்பாக
மாறும்வரை நான் இயேசு உயிர்த்தெழுந்தார்
என்பதை நம்பப் போவதில்லை!
.இது நான் உன்முன் 
வைக்கும் சவால்"
என்கிறார் மன்னர்.


மகதலேனா மரியாளுக்கு
 என்ன செய்வதென்று புரியவில்லை .
 கையைப் பிசைந்தபடி முட்டையைப்
 பார்க்கிறார். மன்னனைப் பார்க்கிறார்.
 
மன்னன் முகத்தில்" என்னையா 
ஏமாற்றப் பார்க்கிறாய் ?"என்ற நக்கல்
தெரிகிறது.

எல்லோரும் என்ன நடக்க போகிறதோ 
என்று  பயத்தோடு காத்திருக்கின்றனர்.

சற்று நேரத்தில் முட்டை சிவப்பாக 
மாறிப் போனது.
மன்னர் அதிர்ந்து போனார்.
மன்னர் கேட்ட சாட்சி கண்முன்
சிவப்பு நிறத்தில் இருந்து கொண்டிருக்கிறது.

அப்படியானால்.....அப்படியானால்
இயேசு உயிர்த்தெழுந்து விட்டாரா?
மன்னனுக்குள் ஒரு நடுக்கம்.
கலக்கம்.

இனி நம்பாமல் இருக்க முடியுமா?
நம்பித்தானே ஆக வேண்டும்

அதன்பிறகுதான் மன்னர் இயேசு 
உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதையே
நம்பினாராம்.
இப்படி ஒரு கதையும் உண்டு.

எது எப்படியோ முட்டை இயேசு
உயிர்த்தெழுந்தார் என்பதின் அடையாளமாக
இருந்து வந்திருந்திருக்கிறது என்பது மட்டும்
உண்மை.

முட்டையைப் புதிய வாழ்வுக்கான 
அடையாளமாகவே
மேற்கத்திய நாடுகளில் பார்க்கின்றனர்.

முட்டையோடு சேர்ந்து முயலும் 
இந்த ஈஸ்டர் முட்டை
கதையில் இணைந்துள்ளதை நாம் அறிய 
முடிகிறது.
இதற்கும் வேடிக்கையான கதை ஒன்று
உண்டு.

கிறிஸ்தவ சமயத்திற்கு முந்தைய கால கட்டத்தில் 
சாக்ஸோன்ஸ் என்ற மதத்தினர்
இயோஸ்டர் எனப்படும் வசந்த கால 
தேவதையை வணங்கி வந்தனராம்.
இந்தத் தேவதைக்கு 
 சம இராப்பகல் நாளான மார்ச் 21 ஆம்
நாள் விருந்து படைத்து மகிழ்வது
அவர்களது வழக்கம்.

அந்த விருந்தில் முட்டை 
கண்டிப்பாக பரிமாறப்படுவது வழக்கமாக
இருந்து வந்திருக்கிறது.

இந்த தேவதையின் விருப்பமான விலங்கு
முயல் .
இப்படி படையல் வைத்து வழிபடும்போது
உண்மையான முயலை
கொண்டு வந்து நிறுத்தி விடுவராம்.


இந்தத் தந்திரக்கார முயல்
தேவதை முன் வைக்கப்படும்
அந்த முயல் முட்டைகளை 
எடுத்து மறைத்து வைத்து
விடுமாம்.அந்த முயல்களிடமிருந்து
முட்டைகளை கண்டுபிடிப்பது
ஒரு சுவாரசியமான நிகழ்வாக
இருந்திருக்கிறது.

இப்படி முட்டையோடு முயலுக்கும்
தொடர்பு இருந்திருக்கிறது.
அதனால்தான் இன்றும் ஈஸ்டர் வாழ்த்து
அட்டைகளில் முட்டைகளோடு
முயலும் இருப்பதைக்
காணலாம்.

சாக்லேட் முட்டைகள், ஜெல்லி பீன்கள்
போன்ற உண்ணக்கூடிய பொருட்களை
பிளாஸ்டிக் முட்டைகளுக்குள் வைத்து முயல்
தந்திரமாக மறைத்து வைத்து விடுவதாகவும்
அதைத் தேடி கண்டு பிடிப்பது
போல விளையாட்டுகள் இன்றும்
நடைபெறுகின்றன.


ஈஸ்டர் நாளில் ஸ்காட்லாந்து, வட இங்கிலாந்து
 போன்ற நாடுகளில் வண்ணம் பூசப்பட்ட 
 முட்டைகளை உயரமான மலையிலிருந்து 
 உருட்டிவிட்டு விளையாடும்
வழக்கம் இன்றும் நடைபெற்று வருகிறதாம்.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில்
ஈஸ்டர் முட்டைகளை உருட்டி விடும்
நிகழ்வு சமதளத்தில் நடத்தப்பட்டு
 வருவதாகச் சொல்கின்றனர்.


வட இங்கிலாந்தில் முட்டை அமுக்குதல்,
முட்டை தட்டுதல்
முட்டை ஜார்ப்பிங் போன்ற பல முட்டை
விளையாட்டுகள் ஈஸ்டர் நாளில் நடைபெறுகின்றன.
இந்த விளையாட்டில் கடைசிவரை
முட்டையை உடையாமல் பாதுகாத்து
வைத்திருப்பவரே வெற்றியாளராவார்.

தோல்வியடைந்தவர்கள் உடைந்த 
முட்டையை உண்ண வேண்டும்.

ஈஸ்டர் பண்டிகை நாளில் முட்டை நடனமும் 
சில நாடுகளில் நடைபெற்று வருவதைக் காணலாம்.
முட்டைகளுக்கு நடுவே 
முட்டைகள் உடையாதபடி
நடனம் ஆடுவதுதான் இந்த நடனத்தின்
சிறப்பு.
இந்த நடனம் பார்ப்பதற்கு 
 திகிலாக இருக்கும்.

மேற்கத்திய நாடுகளில் லெந்து நாட்களில் 
முட்டை தடை செய்யப்பட்ட 
உணவாக இருந்து வந்திருக்கிறது.

லெந்துகாலம் தொடங்குவதற்கு முந்தைய
செவ்வாய்க்கிழமை கடைசியாக 
முட்டையை உணவில் சேர்த்துக் கொள்வார்களாம்.
 அதன் பின்னர் நாற்பது நாட்கள் 
 முட்டையைக் கையில் எடுப்பதில்லை.
 
அதன் பின்னர் ஈஸ்டர் நாளில் 
வாழ்த்து சொல்வதற்காகத்தான் 
முட்டையைக் கையில் எடுப்பார்களாம்.

வசந்த காலத்தில் பூமி
துளிர்த்து நிற்பதை  முட்டையிலிருந்து
குஞ்சு பிறப்பதுபோல உருவகப்படுத்திப்
 பார்த்திருக்கின்றனர்.
 இப்படி மறுபிறப்பு,,
 உயிர்த்தெழுதல்  நிகழப் போவதற்கான 
 ஒரு அடையாளமாகவே முட்டையை
மக்கள் பார்த்த்து வந்திருக்கின்றனர்.

முட்டையானது கல்லறையின் குறியீடாகவும்
அதனை உடைப்பதன்மூலம் வாழ்க்கை
புதுப்பிக்கப்படுகிறது அல்லது
மீட்டெடுக்கப்படுகிறது என்பதும்
இங்கே சுட்டிக்காட்டப்படுவது 
குறிப்பிடத்தக்கது.

அதை நினைவுபடுத்துவதற்காகத்தான்
இன்றும் முட்டை வடிவ சாக்லெட் 
கொடுத்து வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

அடேங்கப்பா... முட்டைக்கும் ஈஸ்டருக்கும்
இத்தனை தொடர்பா?
வியப்பாக இருக்கிறதல்லாவா!

இதோ ...முட்டையோடு இயேசு 
உயிர்த்தெழுந்த நாள்
வாழ்த்து உங்கள் இல்லம்தேடி வருகிறது.

பண்டிகைநாள்  மகிழ்ச்சி 
உங்கள் இல்லங்களிலும்
உள்ளங்களிலும்  நிரம்பி வழியட்டும்.

அனைவருக்கும் ஈஸ்டர்நாள்
நல்வாழ்த்துகள்!

   


Comments

Popular Posts