போம்போது அவளோடு போம்

போம்போது அவளோடு போம் 
 
வா என்றால் வராது 
போ என்றால் போகாது
உன் பேச்சு ' கா'
இப்படி சிலர் முன்னுக்குப்
பின்னாகச் சிறுபிள்ளைத்தனமாகப்
பேசிக்கொண்டு திரிவர்.


இது போலவே முன்னுக்குப்
பின்னான முரண்பட்ட ஒரு பாடல் வரி
என்
கண்ணில் பட்டது.

"போம்போது அவளோடு போம்"
இதுதான் அந்த வரி.

எங்கே போகும்?
அவளோடு போகுமாமே....
யாரவள்?

போகும் அவளை என்ன செய்வது?
எப்படி அழைத்து வருவது?
யாரைத் தூது அனுப்பலாம்?
இப்படி கேள்விகள் அடுக்கடுக்காய்
வரிசை கட்டி நிற்க

கையேந்தி நின்றேன்
கையோடு அவளைஅழைத்து வர
யாரவள்
என்று கேட்டுத்தான் பார்க்கிறேன்.
கேட்பாரில்லை.....
தூதுபோக
துணையாக வர 
எவருமில்லை.

வேறு வழியின்றி 
விலகி நிற்கிறேன்.

வழியெல்லாம் விழியாய்
மணித்துளிகளை விரயமாக்கி
விடைக்காக காத்துக் கிடக்கிறேன் 

விழி பூத்துப் போனது
விண்மீனும் கண் சிமிட்டி
வீண் கதைப்பேசி
கடந்து போனது.
காது கொடுத்துக் கேட்க
ஆளில்லை
 மனு  ஒன்று எழுதி
கையிலேந்தி காண்போரிடம் நீட்டுகிறேன்.
நின்று பதில் சொல்வார்
எவரும் இலர்.
சட்டென்று ஒரு சலசலப்பு
பட்டென்று என் கையிலிருந்த மனு
விருட்டென்று பறந்து போனது
எட்டும் தூரத்தில் உள்ள
ஒரு தடுப்பில் தட்டி
படபடத்துக் கிடந்தது.
தொட்டுவிட எண்ணி
எட்டிக் கை வைத்தேன்
கட்டிப்பிடித்தது ஒரு கை
தட்டிப் பறிக்க வந்தவர் எவரோ?
தடுமாறும் வேளையில் 
முட்டுக்கட்டையிட
முந்தி வந்து நிற்பவர் எவரோ ?
ஓரக்கண்ணால் பார்த்தேன்
நாவல் மரத்தின்கீழ் நின்று
சுட்டக்கனி கேட்ட
சுடரொளியாள் மெல்லச் 
சிரித்து நின்றாள்.

தக்க சமயமிது
உரியவர் வந்துவிட்டார்
உறுதியாய்ப் போனவளை
அழைத்து வருவார்.
புதுக்கதையோடு புதிய
விளக்கம் தருவார்என்ற
புது நம்பிக்கை பிறந்தது.
 
எழுதி வந்த மனுவின்
முதற் பக்கத்தில் இருந்த
முதற் கேள்வியை வாசித்தேன்.

"ஆம் என்றால் அவளோடு ஆகும்
என்றீர்களே அந்த அவள் யார்?"
என்ற என் முதற்கேள்வியைக் கேட்டதும்,

"செல்வம் .அதுதான் திருமகள்.
செல்வம் இருந்தால்தானே சுற்றம்
சுற்றி சுற்றி வரும்.
உன் தோற்றத்தில் ஒரு 
பொலிவு வந்து சேரும்.
மிடுக்கு இருக்கும்.
 மினுமினுப்பு கூடும்.
உயர் குலத்தவர் என்று
உலகமே கொண்டாடும்.
அதனால்தான் ஆம் என்றால்
அவளோடு ஆகும் என்றேன்"
என்றார்.

"ஓ....ஆமாம் .....ஆமாம்.
ஆகும் ....ஆகும்
அவள் இருந்தால்தான் 
எல்லாம் ஆகும். ஒத்துக் கொள்கிறேன். திரு இருந்தால்
எல்லாம் இருக்கும் அதைத்தான்
திருமகள் என்று சொல்லியிருக்கிறீர்கள் இல்லையா?
என்றேன்.

"கண்டு கொண்டாய் திருமகளைக்
கண்டு கொண்டாய்"
என்றார்.

"போம் என்றால் போம் என்றீர்களே 
அது எப்படி?
இதற்கும் விளக்கம் தேவை"
மனுவின் இரண்டாம்
பக்கத்தில் இருந்த கேள்வியைத்
திருப்பிக் காட்டினேன்.

கேள்வியைக் படித்த அவர்,

திருமகள் போய்விட்டால் 
திருவும் திரும்பிப் போய்விடும்.
திரு போனால் 
அவள் பின்னாலேயே
சுற்றமும் அற்ற குளத்து
அறுநீர்ப் பறவைபோல
பறந்துவிடுவர்.
முகத்தில் கவலை வந்து
அப்பிக் கொள்ளும்.
களையிழந்து போவோம்.
 நடை தளர்ந்து போகும்.
 குலப் பெருமை
 குன்றிப் போகும்.
  வாழ்ந்து கெட்டக் குடும்பம்
 என்ற வார்த்தை வந்து
 ஒட்டிக் கொள்ளும்" 
இதற்கொரு விளக்கம் தேவையா
என்பதுபோல என்னைப் பார்த்தார்.

அவளுக்கு இத்தனை பெருமையா?
வாயடைத்து நின்றேன்.
வார்த்தை இழந்து தவித்தேன்.

வந்தால் வரும் .
போனால் போகும்.
இதைச் செல்வதற்குத் தான்
இத்தனை விளக்கமா?
கேட்டுவிட ஆசை.
கேட்காமலே
 ஊமையாய் நின்றிருந்தேன்.

"வேறு ஏதேனும் வேண்டுமா?
வாய்பேச மறுத்து நிற்கிறாயே?" என்று
என்னை மேலும் உசுப்பிவிட்டார்.

"விளக்கம் சொல்லிவிட்டீர்கள்.வழக்கமாக பாடுவீர்களே
பாடல் எங்கே ?என்றேன்...."

"பாடலை என் வாயால் கேட்கத்தான்
இந்தத் தயக்கமா?
பாடுகிறேன் கேள்" என்று
பாடியபடியே கடந்து சென்றார்.

பாடல் உங்களுக்காக...
 
"மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம் -திரு மடந்தை
ஆம்போது அவளோடு ஆகும்;அவள் பிரிந்து
போம்போது அவளோடு போம்"

  மூதுரை பாடல் : 29

Comments

  1. அருமையான விளக்கம். வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts