தாயே நீ பொறுமை இழந்ததேனோ?

தாயே நீ பொறுமை இழந்ததேனோ?

தாயே நீ 
பொறுமை இழந்ததேனோ?

அல்லலும் பகலும் 
 ஆக்ரோசமாக முட்டி மோதிய
அலையத் ஆசுவாசப்படுத்தி
அமைதியாய்த் திரும்ப வைத்தாய்  !


துளைத்தபோதெல்லாம்
துளியும் முணுமுணுக்காது
துணை நின்றாய்
தட்டியவரையும் வெட்டியவரையும்
தாங்கி பிடித்தாய்!

தடுமாறி விழுந்தவனைத்
தாங்கி நின்றாய்
தயை கொண்டு
தாயாய் எமைத்
தன்மடியில்  தூங்க வைத்து
தூங்காது துணை நின்றாய்!


பின்தூங்கி
முன் எழும்பி
முகவரி எழுதித் தந்து
முழு மதியை வர வைத்து 
முற்றமெங்கும் நடைக்க வைத்து
 மெத்தனமாய் உலவ விட்டாய்!

வேரால் துளைத்து
வேதனை தந்தபோதும்
விழுதாய் வீழ்ந்து
பழுதில்லா மரமாய் வளர்ந்து
வீசும் சாம்ராட்
மாசில்லா மழலையின்
மகிழ்ச்சி கொண்டாய்!

 
பாதசாரிகளுக்கு
குடைபிடிக்கும் மரமாய்
கரமாய் இருந்து 
கடும் வெயிலில்
 நிழலானாய்
 அனல் தாக்கா
 அரணானாய்!
 

வீசும் தென்றலை 
முற்றம் எங்கும்
எட்டிப் பார்க்க வைத்து
முழு உலகமும் மூச்சு விட
துணை நின்றாய் 
எல்லார்க்கும் எல்லாம் என்னும்
எழுதாத சட்டம்
எழுதி வந்து 
பொதுவுடைமைப் பேசி நின்றாய்!


தாயென்று தரணி போற்ற
வாழ்ந்திருந்த எம்மீது
ஏனிந்த கோபம் ?
அனலாய் வெடித்து
அனைவரையும்
அரை நொடியில் அள்ளிச் சென்று
அமைதி கொண்டாய்
இதிலென்ன ஞாயம் கண்டாய்?


சாதுமிரண்டால் 
காடு கொள்ளாது
பூமி புரண்டால்
உலகம் தாங்காது
புரிய வைக்க புரட்டிப்போட்டு
பூகம்பம் என்ற 
கோரமுகம் எடுத்து

எம்மைக் கூண்டோடு 
புதைய வைத்து
கூப்பாடு போட வைத்தாய்
கூப்பிடு தொலைவிற்கு
அப்பால் மறைந்து நின்று
புறமுதுகில்  குத்திவிட்டாய்!

தாயே நீ
பொறுமை இழந்ததேனோ?
Comments

Popular Posts