கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்
அனைவருக்கும் கூற்றம் என்றால்
ஒரு நடுக்கம். கலக்கம். அச்சம்.
அந்தச் சொல்லைச்
சொல்லாமலேயே கடந்து
போய்விட வேண்டும் என்று நினைப்பர்.
நாம் நினைத்த நேரத்தில்
வா என்றால் வருவதற்கும்
போ என்றால் போவதற்கும்
கூற்றுவன் என்ன நாம்
வைத்த ஆளா?
அது யாருப்பா? கூற்றுவன்?
நீ கண்டியா...என்று யாரிடமாவது
கேட்டுப்பாருங்கள்.
ஊ..ஹூம்
என்று உதட்டைச் பிதுக்குவர்.
எமனோடு சென்று திரும்பிய யாராவது
திரும்பி வந்து சாட்சி
சொன்னால்தான் எமன்
இருப்பதாக நம்புவோம்.
யாருக்கும் தெரியாத
யாருமே பார்த்திராத
ஒருவர்மேல்
ஏன் இந்த அச்சம்?
ஏனிந்த கலக்கம்?
கூற்றமாவது ...கூற்றுவனாவது?
கூட்டி வா அவனைக் கையோடு...
கூற்றுவனோடு ஒரு நேர்காணல்
வைத்து அவன் கூற்றைக் கேட்க வேண்டும்.
தெருக்கூத்து இது என்று
தெரியவைத்திட வேண்டும்.
இப்படியொரு வீறாப்போடு
நடந்தேன்.
"யார் சொன்னது யாருக்குமே
கூற்றம் தெரியாது
என்று...?
பூனை கண்களை மூடிக்கொண்டு உலகமே
இருட்டு என்பது போலல்லவா
இருக்கிறது!"
இப்படி ஒரு குரல் கேட்க திரும்பிப்
பார்த்தேன். திருதிருவென
விழித்தேன்.
என் உள்ளத்தை அப்படியே படித்தவர் யார்?
யாரந்த ஞானி....இல்லை...
உளவியலாளர் யார்?
உற்று நோக்கினேன்.
உள்ளபடியே அந்த உளவியலாளர்
அங்கே.......
அதே புன்னகையோடு
என்னைப் பார்த்து
மெல்ல நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
"நீங்கள் கூற்றுவனைப் பார்த்தீங்களா?'
இந்தமுறை சற்று கடுமையாகவே
கேட்டுவிட்டேன்.
"இதுதானே உனக்குக் கூற்றம்" என்றார்.
"
"நான் என்ன கேட்கிறேன். நீங்கள்
என்ன சொல்கிறீர்கள்...?".முரட்டுத்தனமான
கேள்வியைக் கேட்டு அதிர வைக்கலாம்
என்று நினைத்தேன்.
"கூற்றத்தை எங்கே போய் தேடுகிறாய்?
உன் சொல்லில் இருக்கிறது கூற்றம் "என்றார்.
"என் சொல்லிலா?"
"ஆமாம்.... உன் சொல்லில்தான்.
கற்றுணர்ந்த என் சொல்லை
நம்ப மறுக்கும் கற்றறிவில்லாத
உன் சொல்லே
உனக்குக் கூற்றம் "என்றார்.
வாய் பேச முடியவில்லை..
மௌனியானேன்.
"என்ன பேச்சைக் காணோம்.
கூற்றம் என்றதும் கூடவே அச்சம்
வந்து அப்பிக்கொண்டதோ?"
என்றார்.
தலையை அங்குமிங்குமாக அசைத்தேன்.
யார்யாருக்கு எது எது கூற்றம்
என்று பட்டியலிடட்டுமா? என்றார்.
சற்று மகிழ்ச்சி.
அவர் என்னை மட்டும் சொல்லவில்லை.
என் துணைக்கு வேறு யாரெல்லாமோ
வரப்போகிறார்கள் .....
வரட்டும்...வரட்டும்....
நீயும் மாட்டினாயா...?...நீயும்
மாட்டினாயா?..... நானும் சிரிக்கத்தான்
போகிறேன் என்று
அதிகப்படியான ஆசை மேலோங்க
"சொல்லுங்கள்" என்றேன் உற்சாகமாக.
இதோ கேள் ....
"கல்லாத மாந்தருக்குக் கற்று உணர்ந்தார்
சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்
மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய்கூற்றம்
கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் "
மூதுரை : பாடல் - 27
என்று பாடி முடித்தார் ஔவை.
"கல்வி அறிவில்லாதவர்க்கு
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம்."
தருமம் செய்ய விருப்பம்
இல்லாதவர்க்கு தருமம் அதாவது
அறம் கூற்றம்.
தருமம் செய்ய வேண்டும் என்ற நினைப்பே
இல்லாததால் அறமில்லா
அவர் வாழ்க்கை அவருக்கு
அழிவைக் கொடுக்கும்.
வாழை மரத்திற்கு
தான் ஈன்ற காய் கூற்றம்.
அதாவது காய் மாற்றிவிட்டால்
வாழைக்குலை யூ வெட்டிவிடுவோம்.
வாழைக்குலையை விட்டால் அதன் பின்னர்
அந்த வாழையில் பயனேது என்று
வாழையும் வெட்டி வீசப்படும்.
தான் ஈன்ற வாழைக்குலையை வாழைக்கு
அழிவு வந்து சேர்ந்துவிடுகிறது.
குடும்பத்தோடு ஒத்து வாழாத பெண்
வீட்டிற்குக் கூற்றம்.
ஏட்டிக்குப்போட்டியாக
எடக்குமடக்காக பேசும் பெண்ணால்
குடும்பம் அழித்தான் போகும்.
இப்போது புரிகிறதா .?
யார் யாரால் யார்யாருக்கு
அழிவு வந்து சேரும் என்பது?"என்றார்.
புரிகிறது ...புரிகிறது....
கூற்றம் என்றால் அழிவு ,
துன்பம் இப்படி அவரவர்
மனதிற்கு ஏற்றபடி பொருள்
எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறீர்கள்.
இல்லையா?
நான் இதுவரை கூற்றம்
என்றால் எமன் என்று மட்டுமே
நினைத்திருந்தேன்." என்றேன்
எல்லாம் தெரிந்த மேதாவி போல...
"எமன் என்றாலே அழிக்கப் பிறந்தவன்
என்றுதானே பொருள்.
அழிக்கப் பிறந்தவர்கள் அனைவரும்"
கூற்றுவர்கள்தான் என்றார்.
அத்தோடு நிறுத்திவிடாமல்,
"கல்லாத மாந்தருக்குக்
கற்றுணர்ந்தார் சொல் கூற்றம் "
என்று சொல்லிவிட்டு
என் முகத்தைப் பார்த்தார்
எனக்குச் சுரீரென்றிருந்தது.
"மறுபடியும் என்மீது சாட்டையைச்
சுழற்றுகிறீர்களா?"என்றேன்.
புன்னகையை விடையாகத்
தந்து நகர்ந்துவிட்டார்.
படித்தவர்களிடம் ஏதாவது
கேள்வியைக் கேட்கிறேன் என்று
கூற்றத்தைக் கூடவே கூட்டி
அலையத் கூடாது என்ற தீர்மானத்தோடு
அங்கிருந்து புறப்பட்டேன்.
என்ன நான் சொல்வது சரிதானே...
செல்கிறேன்.....வரட்டா...?
மூதுரை பாடலை சொல் நயத்துடன் பதிவிட்டது மிக அருமை.
ReplyDelete