முழு பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க முடியுமா?
முழு பூசனிக்காயைச் சோற்றுக்குள் மறைக்க முடியுமா?
முழு பூசனிக்காயைச் சோற்றுக்குள்
மறைக்க முடியுமா?
அதெப்படி முடியும்?
இந்தக் கதை எல்லாம் எங்களிடம் வேண்டாம்.
பொய்யைச் சொன்னாலும்
கொஞ்சம் பொருந்தும்படியாகச்
சொல்ல வேண்டாமா?
என்று தானே கேட்கிறீர்கள்.
என் மனதிலும்
இதே கேள்விதான்.
ஆனால் இப்படியொரு பழமொழி ஏன்
நம்மைச் சுற்றிச் சுற்றி வருகிறது?
ஒரு வேளை சின்ன பூசனிக்காயாக
இருக்குமோ?
அதெப்படி?
ஒரு முட்டையை மறைத்து வைத்தாலே
உள்ளேன் ஐயா என்று வெளியே பிதுங்கிக்
கொண்டு வந்து நிற்கிறது.
முட்டையைவிட சிறிய பூசனிக்காயை
எங்கே போய் பறிப்பது?
ஆனாலும் பழமொழி பழக்கமொழி
அல்லவா?
பழக்கமொழி முதுமொழி எப்படி
பொய்மொழியாகும்.
இல்லாத ஒன்று எப்படி நம் காதுகளுக்கு
வந்து சேரும்.?
பொருள் மாறுபாடு உருட்டல்
பிரட்டலாக வந்து சேர்த்திருக்கலாம்.
ஆனால் பூசனிக்காய் இருந்ததென்னவோ
உண்மையாகத்தான் இருக்கும்.
இந்தப் பூசனிக்காயை எப்படியாவது
பறித்துவந்து பொரியல் செய்து
உங்கள் முன் படைத்துவிட வேண்டும்
என்று வெகு நாட்களாக ஆசை.
அதற்கான தேடுதல் வேட்டையில்
இறங்கினேன்.
அப்போது வலையில் அகப்பட்டது
ஒரு முழு பூசனிக்காய் .
சும்மா விடுவேனா?
விருந்து வைத்து விட்டேன்.
உண்டுவிட்டு உரையெழுதிச் செல்லுங்கள்.
ஒரு பெரியவருக்கு வெகு நாளாக
பூசனிக்காய் பொரியல் சாப்பிட ஆசை.
மனைவியிடம் சொல்லிப் பார்த்தார்.
காலம் போன காலத்தில் இது மட்டும் தான்
குறைச்சல் என்று சொல்லிவிட்டார் மனைவி.
ஆனாலும் பெரியவருக்கு பூசனிக்காய் மீது
இருந்த மோகம் மட்டும் தணிந்தபாடில்லை.
அப்போதுதான் பக்கத்து வீட்டு கொல்லைப்புறத்தில்
ஒரு பூசனிக்கொடி படர்ந்து கிடப்பதைப்
பார்த்தார்.
அதில் நாலைந்து பிஞ்சு பூசனிக்காய்
கிடந்தது. இந்தப் பூசனிக்காயில் ஒன்றை
நன்கு விளைந்ததும் பறித்துவந்துவிட
வேண்டியதுதான்
என்று மனதிற்குள் கணக்கு போட்டு
வைத்துக் கொண்டார்.
அவர் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது.
ஒருவருக்கும் தெரியாமல் ஒரு
பூசனிக்காயைப் பறித்து வந்து மனைவியிடம்
கொடுத்தார்.
மனைவியும் வெளியில்
தெரியாமல் கமுக்கமாக
பூசனிக்காய் பொரியல் வைத்து
கொடுத்தார்.
மறுநாள் விடியற்காலை.
பக்கத்து வீட்டுக்காரர்
கொல்லைப்புறத்தில் கிடந்த
ஒரு பூசனிக்காயை எண்ணிப்
பார்க்கிறார். ஒரு காய் குறைகிறது.
யார் பறித்திருப்பார்கள்?
பூசனிக்காய் திருடன் நம் ஊரில்
இருக்கிறானா?
யார் பறித்திருப்பார்...?யார் பறித்திருப்பார் ?
என்று ஏதும் தடம் தெரிகிறதா
என்று பார்க்கிறார்.
ஒன்றும் புரியவில்லை.
நேற்று இரவு சற்று மழைத்தூறல் விழுந்திருந்தது.
இன்னும் ஈரம் கூட காயவில்லை.
யாராவது வந்திருந்தால்
கால் தடம் பதிந்திருக்கும் என்று
பார்க்கிறார்....அவர் நினைத்தது போல
கால் தடம் கிடந்தது .
கால் தடம் எதுவரை சென்றிருக்கிறது
என்று பார்த்தால் பக்கத்து வீட்டுக்
காரர் வாசல்வரை சென்றிருக்கிறது.
அதன் பின்னர் காணவில்லை.
அப்படியானால்..... அப்படியானால்....
நம்ம வெள்ளைச் சாமி அண்ணனா
திருடி இருப்பார்?
சே..சே...ஒருபோதும் அப்படி செய்திருக்க மாட்டார்.
பெரிய மனிதர் ஆயிற்றே....
ஆனாலும் கால் தடம் இதுவரை தான்
இருக்கிறது.யாதுக்கும் அண்ணனிடம்
கேட்டுப் பார்ப்போம் என்று
நேரே பெரிய வீட்டுக்காரரிடம்
போய் விசாரிக்கிறார்.
பெரியவருக்கு பக்கத்து வீட்டுக்காரர் வந்து விசாரித்ததும் முகமெல்லாம் வியர்த்துக்கொண்டு வந்தது.வாய் பேச முடியவில்லை.
கடைசியில் நான்தான் பறித்தேன்
என்று உண்மையை ஒத்துக்
கொண்டுவிட்டார்.
என்ன அண்ணாச்சி இப்படி செய்துவிட்டீர்கள்.?
நீங்கள் வாயினால் கேட்டிருந்தாலும்
நான் பறித்துக் கொடுத்திருப்பேனே!
இப்படித் திருடிவிட்டீர்களே
என்று சொல்லி விட்டுச் சென்றுவிட்டார்
பக்கத்துவீட்டுக்காரர்.
அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை.
ஊர்முழுவதும் அந்த
வெள்ளைச்சாமி அண்ணன்
என் தோட்டத்தில் கிடந்த பூசனிக்காயைத்
திருடி விட்டார் என்றும் சொல்லி விட்டார்.
இப்போது சாதாரண வெள்ளைச்சாமி
பூசனைக்காய் திருடன் வெள்ளைச்சாமி
ஆகிப் போனார்
ஒருநாள் வெள்ளைச்சாமி
அண்ணன் தெருவில் நடந்து வருகிறார்.
ஒரு பெண் தண்ணீர் எடுக்க
குடத்தோடு சென்றாள்.
"எங்கே போகிறாய்?
ஊர் குழாயில் தண்ணீர் வருகிறதா?
என்று கேட்டாள் எதிரே வந்த
இன்னொரு பெண்.
அதற்கு அவள் ,"அங்கே வருதோ என்னவோ தெரியல...
அந்த பூசனிக்காய் திருடிய
வெள்ளைச்சாமி அண்ணன்
வீட்டுத் தெருவுல தண்ணீர் வருது" என்றாள்.
கேட்டதும் வெள்ளைச்சாமிக்கு
நாக்கைப் பிடுங்கி விட்டு
சாகலாம் போல் இருந்தது.
அப்போது ஒரு சிறுவன் ஒரு ஐஸ்
வாங்கி சப்பிக்
கொண்டே வந்தான்.
அவனிடம் இன்னொரு சிறுவன்
"ஐஸ் கார மாமா வண்டி
எங்கே நிற்கிறது "
என்று கேட்டான்.
பூசனிக்காய் திருடிய வெள்ளைச் சாமி
தாத்தா வீட்டுப் பக்கம் நிற்கிறது
என்று பதில் சொல்லிவிட்டு ஓடினான்
அந்தச் சிறுவன்.
இதுவரை சாதாரண வெள்ளைச் சாமியாக
இருந்தவர் பூசனிக்காய் திருடன் வெள்ளைச்
சாமி என்று பட்டம் வாங்கிவிட்டார்.
எழுதி வாங்கிய பட்டத்தைப் போல்
திருடி வாங்கியப் பட்டமும்
நிரந்தரமாக அவர் பெயரோடு ஒட்டிக்கொண்டது.
ஆண்டுகள் பல கடந்தன.
வெள்ளைச்சாமியின் மகனையும் பூசனிக்காய் திருடன் வெள்ளைச்சாமி மகன்
என்று அழைக்க ஆரம்பித்தனர்.
அத்தோடு நின்றுவிடவில்லை.
மூன்றாவது தலைமுறையாக
பேரன் பிறந்தான்.
இப்போது பேரனுக்கும் பூசனிக்காய் திருடன்
வெள்ளைச்சாமி பேரன் என்ற பெயர் வந்து
ஒட்டிக் கொண்டது.
வெள்ளைச்சாமிக்கு ஒரே
மன உளைச்சல்.
இந்தப் பெயர் மாறாதா?
நான் காலம் பூரா பூசனிக்காய்த் திருடன்
என்ற பட்டத்தோடுதான் வாழ வேண்டுமா?
நான் அவமானப்பட்டது போதாதா?
என் பரம்பரையே இந்த அவமானத்தோடுதான்
வாழ வேண்டுமா?
எண்ணி எண்ணி வெதும்பினார்.
இதற்கு என்னதான் வழி?
யாரிடம் போய் கேட்பது என்ற கலக்கத்தோடு
ஒரு காட்டில் இருந்த ஒரு முனிவரை
சந்தித்து,
"எனக்கு ஏற்பட்ட இந்த
அவப்பெயரைப் போக்க நீங்கள் தான்
ஒரு வழி சொல்ல வேண்டும்"
என்று அவர் காலில் விழுந்தார்.
"எழும்புங்க...எழும்புங்க....
என்ன பிரச்சினை என்று முதலில் சொல்லுங்க"
என்றார் முனிவர்.
வெள்ளைச்சாமி எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொன்னார்.
" இதற்கு நீங்கள் தான்
தீர்வு சொல்லித் தரணும் "
என்று கண்ணீர் விட்டார்.
"இதுதான் உன் பிரச்சினையா?
ஒன்றுக்கும் கவலைப்படாதே.
நாள்தோறும் பத்து
ஏழைகளுக்குச் சோறு போடு.
அதுவும் வாய்க்கு ருசியாக வயிறார
சோறு போடு.
பத்தாம் நாள் என்னை வந்து பார்"
என்று சொல்லியனுப்பினார் அந்த முனிவர்.
பெரியவரும் முனிவர் சொன்னது போல
பத்து ஏழைகளுக்கு நாள்தோறும் வயிறார
சோறு போட்டார்.
எல்லோரும் வந்து திருப்தியாக
சாப்பிட்டுவிட்டுச்
சென்றனர்.
போகும் வழியில் பார்ப்பவர்களிடம்
எல்லாம் வயிறார சாப்பாடு போடும்
வெள்ளைச்சாமி அண்ணன் வீட்டுக்குப்
போய் சாப்பிட்டுவிட்டு
வருகிறேன் . தங்கமான மனுஷன்.
நல்லா வாழணும் "
என்று சொல்லி விட்டுச் சென்றனர்.
இப்போது சோறு போடும்
வெள்ளைச்சாமி அண்ணன்...
சோறு போடும் வெள்ளைச்சாமி
அண்ணன் என்ற பெயர்
ஊர் முழுவதும் உலவ ஆரம்பித்தது.
ஈதென்ன மாயம்?
பூசனிக்காய் எங்கே போனது?
பூசனிக்காய் இடத்தில் சோறு வந்து
உட்கார்ந்தது கொண்டது.
பத்தாம் நாள் முனிவரைத் தேடி
காட்டிற்குச் சென்றார்
வெள்ளைச்சாமி அண்ணன்.
சிரித்துக்கொண்டே வரவேற்ற முனிவர்
"என்ன....ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பதுபோல
தெரிகிறது" என்றார்.
"ஆமாம் ஐயா.....நான் இப்போதுதான்
மகிழ்ச்சியாக
இருக்கிறேன். இப்போது நான்
பூசனிக்காய் திருடன் வெள்ளைச்சாமி இல்லை.
வயிறார சோறு போடும் வெள்ளைச்சாமி"
என்றார் பெருமையாக.
"அப்போ சோற்றில் பூசனிக்காய்
மறைந்து போயிற்று என்று சொல்றீங்க..
இல்லையா?"என்றார் முனிவர்.
"உண்மைதாங்க.....சோற்றில்
முழு பூசனிக்காய் காணாமலே போயிற்று"
பெருமையாகக் கூறினார் வெள்ளைச்சாமி.
" நாலு தலைமுறைக்கு
இனி இந்தப் பெயர்தான் நிலைத்திருக்கும் .
நல்லது செய்யுங்கள்.
நற்பெயர் நிலைத்திருக்கும்"
என்று வாழ்த்தி அனுப்பினார் முனிவர்.
பூசனிக்காய் போய் சோறு வந்தது
டும்...டும்..டும்.....
பூசனிக்காய் போய் சோறு வந்தது.
டும்...டும்....டும்...
நல்லா இருக்கு இல்ல...
நல்லா இருக்கு இல்ல...
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இல்ல...
இப்படித்தாங்க முழு பூசனிக்காயைச்
சோற்றில் மறைத்த கதை வந்ததாம்.
அப்புடியா?
அப்படித்தான்....வரட்டா...?
.
Wow
ReplyDeleteகதை மிக சுவாரஸ்யமாக இருந்தது.பழமொழிக்கு
ReplyDeleteதெளிவான விளக்கம் கொடுத்தது மிக அருமை.