தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம்

"இமிழ் கடல் சூழ் உலகெங்கும்
போய் வாழ்ந்தாலும்
எந்தமிழர் தமிழ் மொழியால்
இணைந்து கொள்க"
என்றார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

கண்டம்தாண்டி கண்டம் வந்தாலும்
மொழியால் ஒன்றுபடுவீராக
என்பது பாவலரேறு அவர்களின்
வேண்டுகோள்.

இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் 
இல்லா நாடுகளே இல்லை என்னும் 
அளவுக்கு உலகெங்கும் உள்ள
எல்லா நாடுகளிலும் தமிழர்கள் 
வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
வாழ்வைத்தேடி ...
வாழ்வாதாரத்தைத் தேடி
உலகெங்கும் பணத்திற்காக
பதவிக்காக குடியமர்ந்து விட்டோம்.
பெருமைக்குரியது. பெருமிதப்படக்கூடியது
 என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
 இருக்கவும் முடியாது.
.
வீட்டை மறந்து
 நாட்டைத் துறந்து அந்நிய தேசத்தில்
வந்து குடியமர்ந்து விட்டோம்.
அழகான அந்நியமொழியோடு
நம்மைப் பிணைத்துக்கொண்டு விட்டோம்.

ஆனால் தாய்மொழியை மட்டும் நாம்
மறந்திலோம் என்பதை அங்கங்கே காணப்படும்
தமிழ்ச் சங்கங்கள் நமக்கு 
நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.


 தமிழகத்தில் எந்த மாவட்டத்துக்காரர்
என்றுகூட நமக்குத் தெரியாது. ஆனால்
தமிழ் குரல் ஒன்று கேட்டுவிட்டால் போதும்.
திரும்பிப் பார்க்கிறோம்.
அனிச்சை செயலாகவே உதடுகள்
புன்னகை புரிகின்றன.
காரணம் என்ன ? 
அவருக்கும் நமக்கும் என்ன உறவு?
முன் பின் பார்த்திருக்கிறோமா?
இல்லையே....பின்னர் ஏன் இந்த சிலிர்ப்பும்
சிரிப்பும்.

நீங்கள் தமிழா?
நானும் தமிழ்தாங்க....என்ற
ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக்
கொண்டு அவரோடு பேச விரும்புகிறோமே
இவை எல்லாம் எதனால்? 

அத்தோடு விட்டுவிடுவோமா?
அடுத்து எந்த ஊரு? என்று
கேட்டு அவரோடு மேலும் ஒரு தொடர்பை
ஏற்படுத்திக் கொள்ள முனைகிறோமே...
அந்த ஆர்வத்தைத் தூண்டியது எது?

முன்பின் தெரியாதவரிடம் வலியச்சென்று
பேச வைத்து ஒரு நட்பை ஏற்படுத்தச் செய்தது
எது?

நமது தாய்மொழிதாங்க.
அந்நிய தேசத்தில் இருப்பவர்களுக்கு
தாய்மொழியைக் கேட்பது தாயின்
குரலைக் கேட்பது போன்றதொரு உணர்வை
ஏற்படுத்தும்.

தாய் என்றால் ஏதோ ஒரு உணர்வுப்
பூர்வமான அன்பு ஏற்பட்டு அந்த அன்பில்
அப்படியே கட்டுண்டு கிடப்போம்.
தாய்க்கு அடுத்து நம்மைக் கட்டிப்போடும்
வல்லமை தாய் மொழிக்கு மட்டுமே உண்டு.
அந்நிய மண்ணில் வாழும்போது தான்
தாயின் அருமையும் தெரியும்.
தாய்மொழியின் பெருமையும் புரியும்.

தாய்மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து 
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் 
எதை எதையெல்லாமோ
இழந்து நிற்கிறோம்.
அதில் முதன்மையானது 
தாய்மொழி
என்பது மறுக்க முடியாத உண்மை.

"
நாம் மொழியை உயிராக நேசிப்பவர்கள்.
பெயரில் கூட நம் மொழியை 
வைத்திருப்பவர்கள் நாம்
மட்டும் தானே!
தமிழ்ச் செல்வன்,தமிழ்ச் செல்வி ,தமிழரசன்,
தமிமிழரசி என்று வீட்டுக்கொரு தமிழ்ப்பெயர்
உலவிக் கொண்டிருக்கும்.
எங்கேயாவது மராட்டிச்சி,
இந்திச்சி,சிந்திச்சி என்று பெயர்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நாம் தான் தமிழச்சி,தமிழன்
என்ற பெயரோடு அனைவரையும் 
திரும்பிப்பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.

எந்த மொழிக்கும் இல்லாத பெருமை
தமிழுக்கு உண்டு .
காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு
என்பதுபோல அவரவர்க்கு அவரவர்
மொழி உயர்ந்தது. சிறப்பானது என்பதை
நாமும் ஒத்துக் கொண்டுதான்
ஆக வேண்டும்.

இந்தியாவின் பெருமையே
வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான்.
பன்மொழி பேசும் மக்கள் இருந்தாலும்
நாம் அனைவரும் இந்தியர் என்னும்
ஒற்றைச் சொல்லைச் சொல்வதில்
பெருமிதம் கொள்கிறோம். பெருமகிழ்ச்சி
அடைகிறோம். மாற்றுக்கருத்து இல்லை
இருக்கவும் கூடாது.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்குக்
காரணம் நிர்வாகம் சீராக நடைபெற வேண்டும்.
அந்தந்த மொழி பேசும் மக்களின்
கலை, கலாச்சாரம் பேணப்பட வேண்டும்.
இன்னபிற முக்கிய காரணங்களுக்காகத்தான்
இருக்க வேண்டும்.
முன்பு கன்னியாக்குமரி மாவட்டம்
கேரளாவோடு இருந்தது.
அது தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக
வாழும் மாவட்டமாக இருந்ததால் 
மார்சல் நேசமணி
போன்றோரின் போராட்டங்களாலும்
முயற்சியாலும் தமிழ் நாட்டோடு
சேர்க்கப்பட்டதற்குக் காரணம்
மொழியால் இணைய வேண்டும் என்ற
ஒற்றைக் காரணமாகவே இருக்க
முடியும்.

மொழி ஒருவருக்கொருவர் கருத்துப்
பரிமாற்றத்திற்காக மட்டும் பயன்படுத்தப்
படுவதல்ல. தமிழ் பேசும் நம் யாவரையும்
ஒரு உணர்வால் கட்டி காத்துவருவது.
இதனை தமிழ் நாட்டில்
இருப்பவர்களை விட அந்நிய மாநிலத்தில் வாழ்கிற
நாங்கள் அதிகமாக உணர்ந்திருக்கிறோம்.

தமிழர் என்பதே நம் ஒற்றுமையில்தான்
இருக்கிறது.அது மொழிக்குள்
கட்டுண்டு கிடக்கிறது.
தமிழரிடமிருந்து அந்த மொழி உணர்வை யாராலும்
பிரித்துவிட முடியாது.

நம்மிடமிருந்து நம்மமொழியைப்
பிரித்துப் பாருங்கள்.
நாம் உணர்வற்றவர்களாக தன்மானம்
குன்றியவர்களாக மாறிவிடுவோம்.

மொழி என்பது ஓர் உணர்வு.
அந்த உணர்வு ஒருபோதும் குறைந்து
போய்விட அனுமதிக்கக்கூடாது.

மொழிப்பற்று குறைந்து போனால்
மொழிக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடும்
என்பது மட்டுமல்ல. அது அந்த
மொழி பேசும் அனைவரையுமே பாதிக்கும்.


"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா "
என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

தமிழன் தமிழினத்தோடு தம்மை
இணைத்துக் கொள்ள வேண்டும்.

"யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல் இனிதாவது
எங்கும் காணோம் "என்று பாரதி
சும்மாவா சொல்லியிருப்பார்.

தமிழன் என்ற சொல்லே 
தமிழ்மொழியால் நமக்குக் 
கிடைத்த நல்பெருமையல்லவா!

இத்தகு பெருமைமிகு மொழியில்
பேசுவதில் நமக்கென்ன தயக்கம்?


குறைந்தபட்சம் தமிழர்களிடம்
தமிழில் பேசுவோம்.

எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
என் உணர்வும் தமிழ்
என் பேச்சும் தமிழ்
என் மூச்சும் தமிழ்
தமிழோடு கட்டுண்டோம்
தமிழராய் ஒன்றுபட்டோம்
என்பதை மனதில் கொண்டு
தமிழால் இணைவோம்.
தலை நிமிர்ந்து நிற்போம்.  



Comments

Popular Posts