மனம் சிறியர் ஆவரோ?

மனம் சிறியர் ஆவரோ?


"கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்."

என்று சாதாரணமாக 
சொல்லிச் சென்றுவிட்டார் ஔவை.
 
இப்போது என் மனதிற்குள் ஒரு ஐயப்பாடு.
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
என்று சொல்லி விட்டார்.
யார் யாரெல்லாம்  சங்கைப்
பார்த்திருப்பார்கள்?
அதுவும் சுட்ட சங்கையும்
சுடாத சங்கையும்  எங்கே போய் தேடுவது?
எப்படி 
ஒப்புமைப்படுத்திப் பார்ப்பது ?

எது வெண்மை என்று எப்படி
அறிந்து கொள்வது?

அறிந்த ஒரு
பொருளை உவமையாகக்
சொன்னால் எளிதில் அறிந்து 
கொள்ளமுடியும்.

அறியாத ஒன்றைக் கூறினால் 
எப்படி விளங்கிக்
கொள்வது?

எல்லார் மனதிலும் இந்தக்
 கேள்வி இருக்கும்.
 ஆனால் யாரும் துணிந்து
  கேள்வி கேட்டுவிடுவதில்லை.
 நமக்கென்ன வீண் வம்பு என்று
 அப்படியே ஒதுங்கிப் 
 போய்விடுவோம்.
 
வாசிப்பவர்  எதுவும் சொல்லாமல்
அமைதியாகப் போய்விட்டால்...
நமது எழுத்து வாசகர் மனதில் 
எந்தத் தாக்கத்தையும் 
ஏற்படுத்தவில்லை என்று பொருள்.

எழுத்தாளர் மனதில் இப்படி
ஆயிரம் கேள்விகள்
எழும்.

அப்படி எழுதியிருக்கலாமோ இப்படி
எழுதியிருக்கலாமோ என்று 
பல கோணங்களில்
அலசி ஆராய்ந்து பார்க்க வைக்கும்.

ஔவை மட்டும் விதிவிலக்கா என்ன?

அப்படி மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து
பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.
அதற்காக மற்றுமொரு பாடல் 
ஔவையிடமிருந்து வந்திருக்கிறது.
 இதோ உங்களுக்காக...



சந்தனம் மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா தாதலால் - தத்தம்
தனம் சிறியர் ஆயினும் தார்வேந்தர் கெட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று"

   மூதுரை பாடல் - 28

தேய்த்து தேய்த்து மெலிந்து போயிருந்தாலும்
கடைசிவரை சந்தனத்தின் மணம்
குறைவதில்லை.அதுபோல தானம் 
செய்யும் நல்லுள்ளம் 
படைத்த மன்னர்கள் நாட்டின் கருவூலம்
குறைந்து போனாலும் தங்கள் 
கைகளைப் சுருக்கிக்
கொள்வதில்லை.ஒருமுறை
வள்ளல் தன்மை குடிகொண்டு விட்டால்
இறுதிவரை அந்தப் பண்பு
அவரைவிட்டுப் போகாது.


மணம் தருவது சந்தனத்தின் இயல்பு.
அது கடைசிவரை தன் இயல்பு மாறாது
மணம் தந்து கொண்டேதான் இருக்கும்.
அதுபோல வள்ளல் தன்மை 
கொண்டவர்கள் வறுமை 
வந்ததென்று தாங்கள் கொடுப்பதை நிறுத்திக்
கொள்வதில்லை.  கொடுக்கும்  குணம்
கொண்டவர்களின் பண்பு எந்தச் சூழலிலும்
மாறுபட்டுப் போகாது. 
முடங்கிப்போகாது.
கொடுத்துப் பழகிய கை
கடைசிவரை கொடுத்துக் கொண்டே தான்
இருக்கும் "என்கிறார் ஔவை.

சந்தனம் தேய்ந்து போன காலத்தும்
மணம் குறையாது. அப்படி இருக்க

தார்வேந்தர் கெட்டால் மனம்
சிறியர் ஆவரோ?
என்று நம்மிடமே கேள்வி கேட்டு 
கேள்விக்கான விடையை நம்மையே
சொல்ல வைத்திருக்கிறார் ஔவை.

சிறியர் ஆவரோ ?

அருமையான கேள்வி....
விடை ஆளாளுக்கு மாறுபட்டுப்
போகுமா என்ன?

 கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
 




Comments

Post a Comment