கெடுக சிந்தை கடிதிவள் துணிவே....
கெடுக சிந்தை கடிதிவள் துணிவே....
பிள்ளை வெளியில் செல்கிறான்.
போகும்போது பார்த்து பத்திரமாக வா
என்று சொல்லி அனுப்பும் தாய்மாரைப் பார்த்திருக்கிறோம்.
வரும்வரை வாசலிலேயே நின்று அலை மோதும் மனைவியைப் பார்த்து
"அவன் என்ன சின்ன புள்ளையா?
வருவான் ... வருவான்
வந்து எனக்குச் சாப்பாடு போடு "என்பார் கணவர்.
எதுவும் காதில் விழாது.
தூரத்தில் மகனைப் பார்த்ததும் தான் ஒரு நிம்மதி பெருமூச்சு வரும்.
இப்படிப் பார்த்துப் பார்த்து
பிள்ளைகளை வளர்க்கும் காலம்.
கேட்டால் ஒற்றைப் பிள்ளையை வைத்திருக்கிறேன். கருவேப்பிலைக் கண்ணாக வளர்க்கிறேன் என்று
நாம் மட்டும் தான் ஒற்றைப் பிள்ளையை வைத்திருப்பது போல ஏதோ நமக்குச் சரியெனப் பட்டதைப் பேசுவோம்.
அப்படி என்றால் முன்பு எல்லாம் இப்படி இல்லையா? வெளியில் சென்ற பிள்ளையை
வந்தால் வா... வராவிட்டால் போ என்று அப்படியே விட்டுவிடுவார்களா?
அதெப்படி?
பெற்ற பிள்ளை மீது அன்பு இருக்காதா என்ன?
அப்படியானால்... அப்படியானால்...ஏன் இவள் இப்படிச் செய்தாள்?
யாரவள்...யாரவள்?
கெடுக சிந்தை
கடிதிவள் துணிவே
என்று புலவர் ஒருவர்
கோபப்படும் அளவுக்கு அப்படி என்ன செய்துவிட்டாள்.?
சொன்னவரிடமே கேட்போம் .
வாருங்கள்.
"கெடுக சிந்தை கடிதிவ டுணிவே
மூதின் மகளி ராத றகுமே
மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை
யானை யெறிந்து களத்தொழிந் தனனே
நெருந லுற்ற செருவிற் கிவள் கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்லைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்
பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி
ஒருமக னல்ல தில்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே"
புறநானூறு:
என்கிறார் ஒக்கூர் மாசாத்தியார்
என்ற பெண்பாற் புலவர்.
எடுத்த எடுப்பிலேயே இவளது வலிய
சிந்தை கெட்டொழியட்டும்
என்று சினப்பட்டுப் பாடும் அளவுக்கு
அப்படி என்ன தவறு செய்துவிட்டாள்.?
தவறோ சரியோ அது அவரவர் மனசாட்சிக்கு உட்பட்டது.
ஒரு தாயாக ...ஒரு பெண்ணாக இந்தப் பெண் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாததாக
இருந்திருக்கிறது.
அதன் வெளிப்பாடுதான் கெடுக சிந்தை
கடிதிவள் துணிவே என்ற சொற்களாக நம்முன் வந்து நின்று
நம்மையும் கலங்க வைத்திருக்கிறது.
இத்தகைய வலிய சொற்களைப் பயன்படுத்தும் அளவுக்கு அவள் என்ன
செய்துவிட்டாள்?
மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை
யானை யெறிந்து களத்தொழிந் தனனே
இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த போரில் யானையோடு
நேருக்கு நேர் போரிட்டு அதனைக் கொன்றுவிட்டு இவள்
தந்தையும் இறந்து போனார்.
நெருந லுற்ற செருவிற் கிவள் கொழுநன்
பெருநிரை விலக்கி யாண்டு பட்டனனே
நேற்றைய போரில் ஆநிரைகளைக் கவர்ந்து செல்லும் போது அதை எதிர்த்துப் போராடி
வென்று களத்திலேயே
இறந்து போனான் இவளது கணவன்.
அடுத்தடுத்து இரண்டு உயிர்களைக் போரில் இழந்திருக்கிறாள்.
அந்தக் கண்ணீர் காயும் முன்னே
இன்று இவள் செய்யும் செயல் அதிர வைக்கிறது.
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்லைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்
பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி
ஒருமக னல்ல தில்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே"
இன்றும் போர்ப்பறை கேட்டதும் அவள் சும்மா இருக்க வில்லை. தன் ஒரே மகனுக்கு
வெள்ளை ஆடை அணிவித்து, தலை மயிரை வாரி குடுமி கட்டி, கையில் வேலைக் கொடுத்து போருக்கு
அனுப்பியிருக்கிறாள்.
யாருக்கு வரும் இத்தகைய துணிவு.
இவள் ஒருமக னல்ல தில்லோள்
.அதாவது இவளுக்கு ஒரே ஒரு மகனைத் தவிர வேறு பிள்ளைகள் இல்லை .
அப்படியிருந்தும் இவள் தன் மகனைப்
போருக்கு அனுப்புகிறாள் என்றால்...
.
அதனால்தான்
கெடுக இவள் சிந்தை கடிதிவள்
துணிவே என்று கடுமையான
சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார் ஒக்கூர் மாசாத்தியார்.
முதல் வரியில் கடிந்து கொண்ட
புலவர் அடுத்த வரியிலேயே
"மூதின் மகளி ராத றகுமே"
என்று அவளுக்கு சிறப்பான ஒரு
பாராட்டும் தந்திருக்கிறார்.
மூதின் மகளிராதல் தகுமே என்பதில்
அப்படியென்ன பாராட்டு இருக்கிறது என்ற
கேள்வி எழுகிறதல்லவா!
மூதின் மகளிர் என்பது
பழைய வீரமிக்க மறக்குடியில் பிறந்தப் பெண் என்பது பொருள்.
வீர மறக்குடியில் பிறந்த வீர மகளிடமும்
வீரம் விஞ்சி இருக்கும் என்பதை வெளிப்படுத்துவதாகவே
இவளது செயல் இருக்கிறது
என்று சொல்லி
பாராட்டுகிறார்.
இகழ்ந்து போல அவள் பெருமைபட
புகழ்ந்து மூதின் மகளிர்
இத்தகு வீரமிக்கவர்களா என்று மூதின்
மகளிர் பக்கம் நம்மையும்
திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் புலவர்.
தமிழரின் வாழ்க்கை காதலும் வீரமும்
சார்ந்ததாகவே இருந்தது.
இதற்குச் சங்க இலக்கிய நூல்கள் சான்றாக இருந்திருக்கின்றன.
"வினையே ஆடவர்க்கு உயிரே"
என்று படித்திருக்கிறோம்.
தமிழரின் வீரம் வரலாறு பேசும்
இலக்கியங்கள் பெண்களின் வீரத்தைப் பற்றியும் பதிவு செய்திருக்திருன்றன
என்பதற்கு இப்பாடல் நல்ல எடுத்துக்காட்டு.
பெண்களும் ஆண்களுக்கு இணையான மனவலிமை மிக்கவர்கள்.
நாட்டுப் பற்று கொண்டவர்கள்.
அதனால்தான் அவர்களால்
இப்படிப்பட்ட துணிச்சலான காரியங்களைச் செய்ய முடிகிறது
என்பது இந்தப் பாடல்மூலம் தெளிவாகிறது.
இருந்தாலும்,
கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
என்று புலவர் சொன்னது
நம் மனதை இன்றுவரை கலங்கடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
Comments
Post a Comment