அடுதலும் தொலைதலும் புதுவது அன்று
அடுதலும் தொலைதலும் புதுவது அன்று
வாழ்க்கையில் எதிரிகளே இல்லை என்று யாராலும் கூற முடியுமா?
என்னால் முடியும்...
எனக்கு எதிரியே இல்லை.
நான் யாரையும் என் எதிரியாகப் பார்ப்பதில்லை.
நான் எதிரியாகப் பார்த்தால்தானே
அவர்களும் என்னை எதிரியாகப் பார்ப்பார்கள்.
அதனால் எனக்கு எதிரிகளே இல்லை என்று அடித்துச் சொல்வேன் .
இப்படி ஒரு சிலரின் மனவோட்டம் இருக்கும்.
அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் ஓர் ஏமாளி....ஏன் அப்பாவி
உலகம் தெரியாதவர் என்றே சொல்வேன்.
அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.
கண்ணுக்கு முன்னாலேயே எதிரிகள் இருந்திருப்பதைக் காலமும் சூழ்நிலையும்
காட்டிக்கொடுத்த பின்னர் தான்
உலகம் புரிந்தது.
அப்போது...இவர்களா?
இவர்களா நமக்கு எதிராக இப்படி
நடித்திருக்கிறார்கள்.
இவ்வளவு நாளும் இது தெரியாமல்
நன்றாகப் பழகியிருக்கிறோமே
எதிரி எதிரிலேயே இருப்பது அறியாது இருந்திருக்கிறோமே
என்பது புரிந்தது.
நன்றாகப் பேசுவதால் நம்மைப்போல் தான்
அவர்களும் உண்மையாகப் பழகுகிறார்கள் பேசுகிறார்கள் என்று நினைக்கிறோம்.
காலம் வரும் போது எல்லா நேரமும் அவர்களுக்கு இயைந்து நடக்க முடியாதபோது உதவ முடியாதபோது
ஆரம்பத்தில் மறைந்து நின்று
எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்கள் பின்னர் நேரடியாகவே எதிரியாக மாறி
மோதத் தொடங்கிய பின்னர்தான்
எதிரியை அடையாளம் காண முடிகிறது.
எனக்கும் மட்டும் தான் இப்படியா?
என்ற கேள்வி எனக்குள் எழுந்தது போல
உங்களுக்குள்ளும் எழலாம்.
எழுந்திருக்கும்.
ஏன்...ஏன்...ஏன் எனக்கு மட்டும்
இப்படி என்ற கேள்வி
தூங்கவிடாமல் துரத்தியிருக்கும்.
இது இன்று நேற்று நடப்பதல்ல. காலங்காலமாக நடந்து வரும் ஒரு செயல்
என்பதைப் புரிந்து கொண்டால்
எல்லா குழப்பங்களும் காணாமல் போய்விடும்.
ஆனால் புரிய வைப்பவர் யார்?
நான் இருக்கிறேன் என்பதுபோல
ஒற்றை வரியைச் சொல்லி
நம்மைத் தம் பக்கம்
திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார்
ஒரு புலவர்.
யாரந்தப் புலவர்?
தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன் என்ற மன்னன் போரில்
வென்ற நிகழ்வைக் கண்டு மெய்மறந்து போன நிகழ்வைப் புலவர்
ஒருவர் பாடுகிறார்.
பாடல் சாதாரணமாக மன்னனைக் புகழ்வதாக இருந்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி இருக்கவில்லை.
முதல் வரியிலேயே நமக்கு ஒரு செய்தியைச் சொல்லி தம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்
இந்தப் புலவர்.
சாதாரண மனிதனுக்கு எதிரி உண்டு.
அப்படியானால் அரசனுக்கு எதிரி இல்லையா?
ஏனில்லை?
அவரவர் தரத்திற்கு ஏற்ப தராதரத்திற்கு
எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள்.
சண்டையும் சச்சரவும்
அடிதடியும்
இல்லா உலகு ஒன்று இருக்கவா செய்கிறது?
அப்படி ஒரு உலகம் புவியில் இல்லை.
அதனால் எதிரிகள் இருப்பதும் அவர்கள் நம்மை அழிக்க நினைப்பதும் ஒன்றும் புதிதல்ல "என்கிறார் இந்த
இடைக்குன்றூர் கிழார் என்ற புலவர்.
"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று
இன்றின் ஊங்கோ கேளலம் -திரள் அரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி,
ஒலியல் மாலையொடு,பொலியச் சூடி
பாடுஇன் தெண்கிணை கறங்க, காண்தக,
நாடுகெழு திருவின் பசும்பூண் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடி,
'பொருதும் 'என்று தன்தலை வந்த
புனை கழல் எழுவரநல்வலம் அடங்க,
ஒருதான் ஆகிப்
பொருது களத்தடலே"
புறநானூறு - 76
பாடியவர் - இடைக்குன்றூர் கிழார்
ஒருவனை ஒருவன் அழித்தலும்
ஒருவனிடம் இன்னொருவன் தோற்றுப்
போவதும் புது நிகழ்வு அல்ல.
காலங்காலமாக இதுதான் நிகழ்ந்து
கொண்டிருக்கிறது.
நேற்று நடந்தது.
இன்று நடகிறது.
நாளையும் நடக்கும்.
இது உலக இயற்கை.
இப்படிச் சொன்ன புலவர் அடுத்து பாண்டியன் போர்க்களம் செல்லும்
காட்சியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
இதோ பாண்டிய நெடுஞ்செழியன் போருக்கு
புறப்பட்டுச் செல்கிறான்.
போகும்போது வேப்பமரத் தளிர்களைப் பறித்து உழிஞைக் கொடியில் சுற்றி
மாலையாக அணிந்து கொண்டான்.
அத்தோடு பொன்னாலான அணிகலன்களை யும் கழுத்தில் அணிந்தும் செல்கிறான்.
அவனது நாட்டின் வளத்தை எதிரிகள்
அறிந்திருக்கவில்லை.
அவனது வீரத்தையும் பெருமையையும்
எதிரிகள் அறிந்திருக்கவில்லை.
குறு நில மன்னர்கள் ஐவரைச் சேர்த்துக்கொண்டு சேர, சோழ
மன்னர்கள் கிணை ஒலித்து அதாவது போர்ப்பறை ஒலிக்கச் செய்து
போருக்கு வருகின்றனர்.
அவர்கள் எழுவரையும் தனியொருவனாக
எதிர்த்து நின்று வென்றான் பாண்டியன்
நெடுஞ்செழியன்.
இத்தகைய வீரமிக்கப் போரை நான் இதற்கு
முன்னர் கேளலம் அதாவது கேள்விப்பட்டதில்லை என்று முடிக்கிறார் இடைக் குன்றூர் கிழார்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எவ்வளவு பெரிய வீரமிக்க மன்னன். அவனுக்கே எதிரிகள் இருக்கும் போது நமக்கு இருக்காதா என்ன?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அதில் எதிரிகள் இல்லாமல் இருப்பார்களா என்ன!
இவை எல்லாம் நடப்பது இயற்கை என்று நமக்கும் பாடம் சொல்லித் தந்து விட்டுச் செல்கிறார் இடைக்குன்றூர் கிழார்.
உண்மையைத் தானே சொல்லியிருக்கிறார்
என்று மனம் ஒத்துக் கொள்கிறதல்லவா!
பாண்டியனைப் புகழும் போது நமக்கும் அருமையான ஒரு கருத்தைச் சொல்லிச் சென்று நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் இந்த இடைக்குன்றூர் கிழார்.
"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று "
Comments
Post a Comment