மன்னும் இமயமலை எங்கள் மலை
மன்னும் இமயமலை எங்கள் மலை
பாரதியாரின் பாடல்களில் நாட்டுப்பற்று
மிகுந்திருக்கும்.
தேசியம் பற்றிய கருத்து இருக்கும்.
தமிழ்நாட்டுக்குள் முற்றிலும் முடங்கிக்
கிடக்காமல் தேசிய நீரோட்டத்தின் மீதே
அவர் கவிகளெனும் ஓடம் செல்வதைக்
காணலாம்.
சுதந்திர போராட்டக் காலத்தில் வாழ்ந்தவர் ஆதலால் இந்தியர் ,இந்தியா என்று தேசிய பற்று
இழையோடிய பாடல்கள் அதிகம்.
எம் இந்தியா என்று பெருமை கொள்ள எத்தனை எத்தனையோ உள்ளன.
இலக்கியமா?
ஆன்மீகமா?
அறிவியலா? வானசாஸ்திரமா?
எது இல்லை எங்கள் இந்தியாவில்?
ஆறுகளில்லையா?
மலைகளில்லையா?
நிலவளங்களில்லையா?.
எல்லாம் இருந்தும் ஏன் இன்னும்
ஏழ்மை அகலவில்லை என்ற கேள்வி கேள்வியை எழுப்ப வைத்து சிந்திக்க
வைக்கும் வரிகளுக்குச் சொந்தக்காரர் பாரதி.
எவை எவை நம்நாட்டின் பெருமை என்பது பாரதியின்
பாடல்களைப் படிக்கும் போது புரியும்.
இத்தனைப் பெருமைமிகு நாட்டினர்
நாம் என்பதை எண்ணி
எண்ணி நம்மைப் பூரிப்படைய வைக்கும்.
பாரதியாரின் தேசிய கீதங்கள் என்ற
தலைப்பின்கீழ் வரும் பாடல்கள் யாவும்
நம்மை தேசியத்தின் மீது பற்று கொண்டிட
வைக்கும்.
எங்கள் நாடு இதுவென
மார்தட்டிட வைக்கும்.
இமயமலை எங்கள்மலை என்ற பாரதி
கங்கை எங்கள் ஆறு என சொந்தம்
கொண்டாடுகிறார்.
உலகமே வியந்து போற்றும் உபநிடத நூல்கள்
எம்முடையவை.
வீரர்களும் மாமுனிகளும் வாழ்ந்த நாடு
எனப் பெருமிதம் கொள்கிறார்.
ஞானம் மிகுந்த நாடு என்பதோடு நிறுத்திக்
கொள்ளாமல் புத்தபிரான் அருள்மிகு நாடு
எனச் சொல்லி பூரித்துப் போகிறார்.
ஏழையாக இனி துஞ்சோம். எவர்க்கும் இனி அஞ்சோம்
தன்னலம் பாராது எத்தொழிலும் செய்வோம்
என்ற வரிகள் எத்தொழிலும் இழிதொழிலல்ல
என்பதை நமக்குச் சொல்லிச் செல்கின்றன.
பாலும் தேனும் ஓடும் வளமிக்க நாட்டில்
வாழும் நமக்கு இனி ஒருபோதும் பிறரிடம்
கையேந்துதும் நிலை இருக்காது என்று
தனக்கே உரித்தான தன்னம்பிக்கையோடு
பாடல் வரிகளை எழுதி முடிக்கிறார் பாரதி.
இதோ பாடல் வரிகள்:
"மன்னும் இமயமலை எங்கள் மலையே
மாநில மீதிது போல்பிறி திலையே!
இன்னனறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே
பார் மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
போற்றுவம் இஃதே எமக்கில்லை ஈடே
மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே
இன்னல்வந் துற்றிடும் போதற் கஞ்சோம்
ஏழைய ராகிஇனி மண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் கற்போம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன்பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதே எமக்கில்லை ஈடே."
பாரதநாடு பழம்பெரும் நாடு
பாடுவம் இஃதே எமக்கில்லை ஈடே...
என்று பெருமிதத்தோடு சொல்ல வைத்த
வரிகள் எம் பாரதிக்குரியது.
பாரதி என்றாலே பெருமிதம்தானே!
Comments
Post a Comment