ஆவாரை யாரே அழிப்பார்
ஆவாரை யாரே அழிப்பார்
ஒருவருடைய வாழ்க்கை வசதி வாய்ப்போடு
நன்றாக இருக்கிறது.
அதற்குக் காரணம் முன்னோர் சேர்ந்து வைத்த பொருளாக இருக்கலாம்.
புண்ணியமாக இருக்கலாம்.
உழைப்பாக இருக்கலாம்.
ஏதோ ஒரு காரணம் ஒருவரின் வளர்ச்சிக்குத்
துணையாக இருந்திருக்கிறது.
வளர வேண்டும் என்று இருந்தால் அந்த
வளர்ச்சிக்குத் தடையிட எவராலும் கூடாது.
அதைத்தான் ஔவை ஆவாரை யாரே அழிப்பார்
என்கிறார்.
அடுத்த வரியிலேயே சாவாரை யாரே தவிர்ப்பவர் என்ற கேள்வியை முன் வைக்கிறார்.
உண்மை.
சாவைத் தவிர்த்தவர் எவரும் உண்டோ?
சாவு வந்தால்...
நாளை வருகிறேன்.
நாளை மறுநாள் வருகிறேன்.
இல்லை என் பிள்ளைக்குத் திருமணம்
முடித்து வைத்துவிட்டு வருகிறேன் என்றால்
நிற்குமா?
ஒரு நாள் கழித்து வா தம்பி என்று
சொல்லிவிட்டுப் போகுமா?
இந்தக் கேள்வி நமக்குள்ளும் எழுகிறதல்லவா?
தவிர்க்க முடியாதது தள்ளிப் போட முடியாதது வாய்தா வாங்க முடியாதது மரணம்.
மூன்றாவதாக ஒருவர் வறியவர் ஆகி பிறரிடம் பிச்சை
எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
அதனைத் தடுக்க நம்மால் கூடுமோ?
ஒரு நாள் உதவலாம். இரண்டு நாள் உதவலாம்.
காலத்திற்கும் உதவிக் கொண்டிருக்க முடியாது.
அதனால் அவர் பிச்சை எடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.
எப்படி வளர்ச்சியைத் தடுக்க முடியாதோ அதுபோல மரணத்தையும் தவிர்க்க
முடியாது.
பிச்சை எடுப்பதையும் விலக்குதல் கூடாது.
அதனால் இந்த நிகழ்வுகள் எல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம் என்று சொல்லி ஒதுங்கிக் கொள்கிறோம்.
ஒருவன் முன் வினைப் பயனே இவை எல்லாம் நிகழக் காரணம் என்கிறார் ஔவை.
பாடல் இதோ உங்களுக்காக...
"ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல்."
உலக எதார்த்த நிலையை உணர்த்தும் அருமையான பாடல்.
உதடுகள் ஓயாமல் உச்சரிக்கும் பாடல்
ஆவாரை யாரே அழிப்பார்.....
Comments
Post a Comment