உன்னோடு வாழ்தல் அரிது

உன்னோடு வாழ்தல் அரிது 


அரியது எது என்ற கேள்விக்கு,


அரியது கேட்கின் வரி வடிவேலோய்

அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது

மானிடராயினும்

கூன் குருடு செவிடு பேடு நீங்கி

பிறத்தல் அரிது

பேடு நீங்கி பிறந்த காலையும் 

ஞானமும் கல்வி நயத்தல் அரிது

ஞானமும் கல்வியும் நயந்தகாலையும் 

தானமும் தவமும் தான் செயல் அரிது

தானமும் தவமும் தான் செய்வ ராயின்

வானவர் நாடு வழி திறந்திடுமே!"

என்றார் ஔவை.


அருமையானப் பாடல்.


பாடலைக் கேட்டதும் எந்தவித உடற்குறையும் இல்லாமல் வாழ்தல் 

அரிதினும் அரிது என்று மனதில் எழுதி வைத்துக் கொண்டோம்.

நமக்கு அப்படி ஒரு குறையில்லா உடலைத் தந்தமைக்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டோம்.

அப்படிச் சொல்லித் தந்த ஔவை

கூடவே ஞானம், கல்வி நயந்து பெற்றிருந்தாலும்

 தானம் தவம் செய்தல் அரிது என்று

அரிதானவற்றை வரிசைப்படுத்திச் சொல்லித் தந்தார்.

அருமையாக விளக்கமாக ஒன்றோடு ஒன்றை ஒப்புமைப்படுத்தி 

எல்லாமே அரிதானவைதான் என்று

நம்மை ஒத்துக்கொள்ள வைத்தப் பாடலைத் தந்து நம்மையும்

ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க 

வைத்தார் ஔவை.

இப்போது அரிது எது என்று ஒரு முடிவான கருத்துக்கு வந்துவிட்டோம்.


இப்படி இருக்கும் நேரத்தில் இப்போது உன்னோடு வாழ்தல் அரிது என்று வேறு ஒன்றைக்கூறி இது என்ன அரிது என்று கேள்வி கேட்க வைத்துவிட்டார்.

 இப்போது நமக்குள் பெருங்குழப்பம்.

யாரோடு வாழ்தல் அரிது?

கேடுகெட்ட மனைவியோடா?

சொல் கேட்காப் பிள்ளைகளோடா?

பெற்றோரோடா.....?

யாரோடு வாழ்தல் அரிது?

கேள்விமேல் கேள்வி வந்து

காதைத் துளைக்க 

உன்னோடு என்னோடு என்று சொல்லிவிட்டால் ஏதோ அருகில் இருக்கும் ஒருவராகத் தானே இருக்க முடியும்?

யாரவர் ?யாரந்த நபர்?....கேள்வி மேல் கேள்வி வந்து தூங்கவிடாமல் துரத்த விடை தேடி மறுபடியும் ஔவையிடமே ஓடினேன். 

அங்கே நான் கண்ட காட்சி....
அப்படியே அசந்து நின்றேன்.

ஈதென்ன....ஔவை இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறார்.

என்ன பேசுகிறார்?

மெல்ல கூர்ந்து கேட்டேன்.


ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்

என்றார் சாதாரணமாக.


யாரைப் பார்த்து உணவை ஒழியென்றால்  ஒழி என்கிறார் ?

யாருமே அருகில் இருப்பதுபோல

தெரியவில்லையே..வேறு யாரிடம் இப்படி உரக்கப் பேசுகிறார்.?  

அதற்குள் மறுபடியும் இருநாள் கொள் என்றால் கொள்ளாய் என்ற கோபமான வரிகள்.

இரண்டு நாளுக்கு எடுத்துக்கொள் என்றால்

அதுவும் செய்வதில்லை..

ஒருநாள் ஒழியென்றால் ஒழியாய்

இருநாள் கொள் என்றால் கொள்ளாய் 

இது என்ன யாரோ சிறு பிள்ளையைக்

கடிந்து கொள்வதுபோல கடிந்து

கொள்கிறார் ...என் குழப்பம் தீருமுன்னே


"ஒருநாளும் என்நோவறியாய் இடும்பை கூர்

வயிறே"

என்று வயிற்றைச் பார்த்து கேட்டுவிட்டார்.

வயிற்றைச் பார்த்தா இதுவரை பேசினார்?

வயிறு அப்படியென்ன துன்பம் 

தந்து விட்டது என்று இப்படி நொந்து கொள்கிறார்?


ஒரு நாளைக்குப் சோறு இல்லை.

பட்டினியாக கிடக்க வேண்டியதுதானே!

குய்யோ முறையோ என்று கூப்பாடு.


மறுநாள் நிறைய உணவு கிடைக்கிறது.

இரண்டு நாளைக்குப் சேர்த்து எடுத்துக்கொள் என்றால் போதும் போதும் என்று மறுப்பு.

இருக்கும் போது கொள்வதுமில்லை.

இல்லாதபோது சும்மா இருப்பதுமில்லை.


ஐயோ...ஐயோ...இந்த வயிற்றோடு நான் படும் பாடு இருக்கே...சொல்லி மாளாது.

உன்னோடு வாழ்தல் அரிதுடா சாமி என்ற

புலம்பல் தான் ஔவையின் இந்த வரிகள்.

எவ்வளவு எதார்த்தமான உண்மை .


அதை எவ்வளவு சுவைபட உணர்வுப்பூர்வமாக

மனதில் தைக்கும் விதமாக

எளிய மொழியில் தந்து 

பாடலில் கருத்தை நம்மையும்

ஒத்துக்கொள்ள வைத்து

பாடலோடு கட்டி இழுத்துச் சென்றுவிட்டார் 

ஔவை.

சங்கத்தமிழ் மூன்றும் வாங்கி வந்து

கவி பாடுபவராயிற்றே...

பாடல் இதோ உங்களுக்காக..


"ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் 

இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்

என்நோவறியாய் இடும்பை கூர் 

என் வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது "


அருமையான பாடல் இல்லையா?


"ஒருநாளும் என் நோவறியா 

இடும்பை கூர் என் வயிறே 

உன்னோடு வாழ்தல் அரிது" 

அருமையான மனதைத் தொட்ட

வரிகள்.

ஆமாம்...

நம் நோவறியாதவரோடு எப்படி வாழ முடியும்?

வயிற்றுக்கு மட்டும் இது விதி விலக்கா என்ன!





..

Comments

Popular Posts