சிலேடை வகைகள்

சிலேடை  வகைகள் 


விவசாயி ஒருவர் தன் தோட்டத்து வாயிலருகே

வந்து கொண்டிருக்கிறார்.

அங்கே தன் பருத்தி வயலில்

ஆடு ஒன்று மேய்ந்து கொண்டிருப்பதைப்

பார்த்தும் பதறிப் போய்விட்டார்.

அங்கே நின்று கொண்டிருந்த தொழிலாளியிடம்

"ஆடுறா....ஆடுறா "என்று கத்தினார்.


தொழிலாளிக்கு தன் முதலாளி ஏன்

இப்படி கத்துகிறார் என்பதைச்

சட்டென்று புரிந்துகொள்ள முடியவில்லை.

தண்ணீர் பாய்த்துக்கொண்டு நிற்பவனிடம்

ஆடச் சொன்னால்.....

கையில் இருந்த மண்வெட்டியை அப்படியே

வீசிவிட்டு ஆடத்தொடங்கினான்.


"அடே முட்டாள்...ஆடுறா..ஆடுறா..."

திரும்பவும் கத்தினார்.


"நான் நன்றாக ஆடவில்லையா?

மறுபடியும் கத்துகிறாரே "என்று

நினைத்துக் கொண்டு மேலும்

உற்சாகமாக ஆடினான்.


அதற்குள் முதலாளி அருகில் வந்து

"வயலில் ஆடு மேயுதுடா என்றால்...

நீ ஆட்டம் போடுறியாக்கும் "என்று கடிந்து கொண்டார் .


ஒடிச்சென்று  ஆட்டைத் துரத்தி

விட்டுவிட்டு வந்த தொழிலாளி

"என்ன முதலாளி...நீங்க முதலாவதே

சரியா சொல்லியிருக்கலாமில்லையா....

இப்போ பாருங்க ஒரு பாத்தி பருத்திச்செடியை

வெள்ளாடு மொட்டையாக கடிச்சி தின்னுப்புட்டுது"

என்றான் ஆதங்கத்தோடு.


"நான் முதலாவது இருந்தே ஆடுறா...

ஆடுறா..என்றுதானே சொன்னேன் 

நீ ஆடிகிட்டு நின்றால் என்ன செய்வது?

உன்னை மாதிரி நாலு மடையன்களை

வேலைக்கு வைத்தால் நான் உருப்பட்டுருவேன்"

தன்னையே சலித்துக் கொண்டார் முதலாளி.


"வயலில் ஆடு மேயுது என்று 

விவரமாக சொல்லியிருக்கணும்

இல்லையா ?" என்றான் அந்த அப்பாவி.


ஆமாங்க...ஆடுறா...ஆடுறா என்றால்....

எந்த ஆடு என்பதில் குழப்பம் வருவது இயல்புதானே!


ஆடு என்றால் நடனம் ஆடு என்பது

ஒரு பொருள்.

ஆடு என்றால் வெள்ளாடு, செம்மறியாடு என்று

ஏதோ  ஒரு வகை ஆட்டினைக் 

குறிப்பிடுவது  என்பது இன்னொரு பொருள்.


இதில் முதலாவது பொருளை எடுத்துக்

கொண்டதால் இந்தக் காட்சி அரங்கேறிவிட்டது.


சொல் ஒன்று .ஆனால் பொருள் இரண்டு.

இதுதான் இரட்டுற மொழிதல் எனப்படும்.



ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட

வருவது இரட்டுற மொழிதல் எனப்படும்.

இதனை சிலேடை என்றும் கூறுவர்.


இந்தச் சிலேடை இரண்டு வகைப்படும்.


1.செம்மொழிச் சிலேடை

2.பிரிமொழிச் சிலேடை


செம்மொழிச் சிலேடை : 


முதலாவது செம்மொழி சிலேடை என்றால்

என்ன என்று பார்ப்போம்.


ஒருசொல் பிரிக்கப்படாமல்

அப்படியே தனித்து நின்று பல

பொருள் தருவது செம்மொழி

சிலேடை எனப்படும்.


முதலாவது சொன்ன ஆடு கதைக்கு வாங்க.

ஆடு பிரிக்கப்படாமலேயே இரண்டு பொருள்

தந்ததல்லவா!


இதுதான் செம்மொழி சிலேடை..

இனி இலக்கியத்திலிருந்து அதற்கு 

எடுத்துக்காட்டு காண்போமா?



"வஞ்சியேன் என்றுதன் பேரைத்தான் யானுமவன்

வஞ்சியான் என்பதால் வாய்நேர்ந்தேன்- வஞ்சியான்

வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்

வஞ்சியாய் வஞ்சியார் கோ""


இப்பாடலில் வஞ்சியான் என்னும் சொல்

நான் வஞ்சிமாநகரைச் சேர்ந்தவன்

என்று ஒரு பொருளும்

வஞ்சிக்க மாட்டேன் என்று ஒரு பொருளும்

தருகிறது.


குறிப்பிட்ட காலத்தில் வந்துவிடுவேன்

என்று சொல்லி ஒரு தலைவன் தலைவியைப்

பிரிந்து சென்றான். அவன் வருவேன்

என்று சொல்லிச் சென்ற நாளும்

கடந்துவிட்டது.தலைவனோ இன்னும்

வந்தபாடில்லை.

இப்போது தலைவிக்கு ஓர் ஐயம்.

தலைவன் தன்னை ஏமாற்றிச்

சென்றுவிட்டானோ என அஞ்சுகிறாள்.

அந்த மனக்கலக்கத்தில் பிறந்ததுதான்

இந்தப் பாடல்.


தோழியிடம் கூறுவது போல

பாடல் அமைந்துள்ளது.

தோழியே , வஞ்சியேன் என்று சொன்னான்

என் தலைவன். நான் உன்னை வஞ்சிக்க மாட்டேன் 

என்றுதான் சொல்கிறானோ என்று

நினைத்தேன்.

ஆனால் உண்மையில் அவன் சொல்ல வந்தது

நான் வஞ்சிநாட்டைச் சேர்ந்தவன் 

என்பதை மட்டும்தான் என்பதை 

 இப்போதுதான் புரிந்து

கொண்டேன்.

வஞ்சியேன்..வஞ்சியேன் என்று சொல்லும்

போதெல்லாம் நம்பினேன் .

வஞ்சிநகர் தலைவனே இப்படிப்பட்டவன்

என்றால் மற்றவர்களை என்ன என்பது?"

என்று தன் ஆற்றாமையை சொல்லி

அரற்றுகிறாள் தலைவி.



வஞ்சியவள் வஞ்சியானை வஞ்சியான்

என்று வஞ்சனையில்லா மனத்தோடு

நம்பியிருக்கிறாள்.இந்த வஞ்சியான்

வஞ்சிக்கொடி போன்ற இந்த வஞ்சியாளை

வஞ்சித்துத்தான் சென்றானா?என்று

வஞ்சியவள்  நெஞ்சம் கொஞ்சம்

அஞ்சுவது காதலர்கண் எழும் இயல்பானதொரு

அச்சம்தானே!


பிரிமொழி சிலேடை: 


அடுத்து பிரிமொழி சிலேடைக்கு வருவோம்.


 பிரிமொழி சிலேடைக்கு

இலக்கியத்திலிருந்து ஒரு பாடல் 

இதோ உங்களுக்காக...


"முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த அணிகலமும் மேவலால்

நித்தம் அணைகிடந்தே சங்கத்தவர் காக்க

ஆழிக்கு இணை கிடந்ததே தமிழ். "


கடலையும் தமிழையும் ஒப்புமைப் படுத்தி

பாடப்பட்டிருப்பது இப்பாடல்.


பாடலை இன்னொருமுறை வாசித்துவிட்டு

விளக்கத்திற்கு வருவோம்.


ஒவ்வொரு சொற்றொடரையும் தனித்தனியாக

பொருள் கொள்வோம்.


முத்தமிழ் துய்ப்பதால்...


மூன்று + தமிழ்


இயற்றமிழ்,இசைத்தமிழ்,. நாடகத்தமிழ் என்று

முத்தமிழாக  தமிழ் இருப்பதால்....


முத்து + அமிழ் 

அதாவது முத்து கடலில்

அமிழ்ந்து கிடப்பதால் ....


ஆழிக்குத் தமிழ் இணை.

அதாவது கடலுக்கு தமிழ் இணை.


முச்சங்கம் கண்டதால் ...


முச்சங்கம் = மூன்று + சங்கம்


முதல் சங்கம் 

இடைச்சங்கம் 

கடைச் சங்கம்  

ஆகிய மூன்று சங்கங்கள் கூடி

தமிழ் வளர்த்தலால்....


முச்சங்கம் = மூன்று+ சங்கு+ அம்


வெண்சங்கு, சஞ்சலம்,பாஞ்சன்யம்

ஆகிய மூன்று வகையான சங்குகளைத்

கடல் தருதலால்....


ஆழிக்கு இணை கிடந்ததே தமிழ்.

அதாவது கடலுக்கு தமிழ் இணை.


மெத்த அணிகலனும் மேவலால்.....


காலுக்கு சிலம்பு

கழுத்தில் சிந்தாமணி

இடையில் மணிமேகலை

காதில் குண்டலகேசி 

கைக்கு வளையாபதி


ஆகிய ஐம்பெருங்காப்பியங்களைத்

தமிழ்த்தாய் தன் அணிகலனாக 

அணிந்திருப்பதால்....


கலம் என்றால் கப்பல் என்று பொருள்.

 வணிகம் செய்வதற்காக 

கப்பல்கள் கடலில் அணி அணியாக 

செல்வதால்....


ஆழிக்கு இணை கிடந்ததே தமிழ்.

அதாவது கடலுக்கு இணை தமிழ்.


நித்தம் அணைகிடந்தே சங்கத்தவர் காக்க...


தன் அலையால் சங்கினைக் காத்து

நிற்றலால்....


சங்கப் பலகையில்  இருந்து சங்கப்புலவர்களால்

தமிழ் ஆய்வு செய்து காக்கப்பட்டதால்....


ஆழிக்கு இணை கிடந்ததே தமிழ்.

அதாவது கடலுக்கு இணை தமிழ்.



ஆழியும் தமிழும் இணையானது

என்பதை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்

பாருங்கள்.!


இப்பாடலின்  ஒவ்வொரு சொற்றொடரும்

பிரித்து இருவேறு பொருள் கொள்ளப்பட்டதால்

இது பிரிமொழி சிலேடையாயிற்று.



நான் கேட்ட ஒரு செய்தியை

பிரிமொழி சிலேடைக்காக உங்கள்

முன் வைக்கிறேன்.


ஒரு முறை கலைஞரிடம் பாடலாசிரியர்

ஒருவர் தான் எழுதிய

கவிதைத் தொகுப்பினைக்

கொடுத்திருக்கிறார்.

வாசித்ததும் கலைஞரிடமிருந்து ஏதாவது 

தகவல் வருமா என்று எதிர்பார்த்துக் 

காத்திருந்திருக்கிறார்.

எந்தப் பதிலும் இல்லை. 

ஒருநாள் கலைஞரை நேரில் சந்திக்கும்படியான

வாய்ப்பு அந்தப் பாடலாசிரியருக்குக்

கிடைத்திருக்கிறது.


அப்போது  கலைஞரைப் பார்த்து

என் பாடல் எப்படியிருந்தது என்று

கேட்டிருக்கிறார்.

பாத்தேன் சுருக்கமாக முடித்துக் 

கொண்டார் கலைஞர்.

.

பாத்தேன் என்றால் பார்த்தேன் என்று

பொருள். பாடலைப் படித்து ஏதாவது சொல்லுவார்

என்று எதிர்பார்த்தவருக்கு பாத்தேன்

என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டதும் 

பொசுக்கென்று போய்விட்டது.

முகம் அப்படியே வாடிப் போயிற்று.

விடுவாரா...கலைஞராயிற்றே...

பா..தேன் என்று அழுத்திக் சொன்னார்.

கேட்டவர் முகம் அப்படியே

மலர்ந்து போயிற்று.


பா என்றால் பாடல்.

தேன் என்றால் இனிமை.

உங்கள் பாடல் தேன் போன்று

இனிமையாக இருந்தது என்பதைத்தான்

கலைஞர் பாத்தேன் என்று சொல்லியிருக்கிறார்.

அத்தோடு விட்டாரா? 

பாத்தேன் படித்தேன் என்று 

இன்னொரு சொல்லையும்

கோத்துவிட்டுவிட்டார்.


படித்தேன் என்பது வாசித்தேன்

என்று ஒரு பொருள்.

படி...தேன் என்று பிரித்துப் படித்தால்

படி தேன் உண்டு மகிழ்ந்த இனிமை தந்தது

உனது பாடல் 

என்பது இன்னொரு பொருள்.

வெறுமனே விமர்சனத்தை எதிர்பார்த்த

பாடலாசிரியருக்கும் படி தேன்

உண்ட மகிழ்ச்சி கிடைத்திருக்கும்

இல்லையா?



பாத்தேன் படித்தேன் என்பதில் இத்தனை 

வார்த்தை விளையாட்டா? 


 இதுதான் பிரிமொழி சிலேடை.

 

இப்போது செம்மொழி சிலேடையும்

பிரிமொழி சிலேடையும் தெளிவாக

புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.



பார்த்தேன் சிரித்தேன்

பக்கத்தில் அழைத்தேன்

அன்று  உனைத் தேன் என நான்

நினைத்தேன்

அந்த மலைத் தேன் இதுவென

மலைத்தேன்........

                                -( பார்த்தேன் ....)

....     ......     ......

என்ற திரைப்படப் பாடலைத் தொடர்ந்து பாடி,

பாடலில் இருக்கும் சிலேடை

சொற்களை அறிந்துகொள்ளுங்கள்.








 

Comments

Popular Posts